Published : 24 May 2015 02:40 PM
Last Updated : 24 May 2015 02:40 PM

பெண்ணுக்கு எட்டாக் கனியா நியாயம்?

ஒரு பெண்ணின் அடையாளம் எது?

அவள் எப்படித் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாள்? எது அவள் இயல்போ, எது அவள் இருப்பை வெளிப்படுத்துகிறதோ அதுதானே அவள்? ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தை அழிப்பதற்காகப் போராடி, தன் லட்சியம் நிறைவேறுவதற்குள் அதே அடையாளத்துடனேயே மரித்துப் போன சூசட் ஜார்டனைப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அருணா ஷான்பாக், நிர்பயா வரிசையில் சூசட் ஜார்டனும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர். கொல்கத்தாவைச் சேர்ந்த சூசட் ஜார்டன் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் காருக்குள் வைத்துக் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். பிழிந்தெடுக்கப்பட்ட சக்கையாக வீதியில் வீசியெறியப்பட்டவர், காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கவே நான்கு நாட்கள் தேவைப்பட்டது. சூசட் கொடுத்த புகாரைக் கீழ்த்தரமாக விமர்சித்தனர் காவலர்கள். ஏன் இரவு நேரத்தில் வெளியே சென்றாய்?

இரண்டு குழந்தைகளின் அம்மா டிஸ்கோதேவுக்குப் போகலாமா? அறிமுகம் இல்லாதவர்களின் காருக்குள் நீ ஏன் ஏறினாய்? - இப்படிக் கேள்விகள் கேட்பதில் இருந்த ஆர்வம் அவர்களுக்குப் புகாரைப் பதிவு செய்வதில் இல்லை.

மறைக்கப்பட்ட முகம்

ஒரு வழியாகப் போராடி நீதிமன்றம் ஏறினார். அங்கே மட்டும் சூசட்டுக்கு அத்தனை சீக்கிரம் நீதி கிடைத்துவிடுமா என்ன? அங்கேயும் பாலியல் வன்முறையைத் தோற்கடித்துவிடுகிற கேள்விகள், விமர்சனங்கள். ‘இது ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்று மாநில முதல்வர் மம்தாவும், ‘தவறாக முடிவுற்ற செக்ஸ் ஒப்பந்தம்’ என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி ககோலி கோஷும் கருத்து தெரிவித்தார்கள். தொலைக்காட்சிகளில் முகம் மறைக்கப்பட்டு ‘Park street rape survivor' என்று சூசட் அடையாளப்படுத்தப்பட்டார். தவறு செய்தவர்களே துணிச்சலுடன் வெளியே வரும்போது, தீங்கிழைக்கப்பட்ட நான் ஏன் என் முகத்தையும் அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு குற்றவாளி போல் வாழ வேண்டும் என்ற கேள்வி சூசட் மனதில் எழுந்தது. கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு ஊடகங்களில் தன்னை வெளிப்படுத்தினார்.

“நான் பரிதாபத்துக்குரியவளோ, மீண்டு வாழ்கிறவளோ அல்ல. நான் சூசட் ஜார்டன். அப்படித்தான் நான் அறியப்பட விரும்புகிறேன்” என்று சொன்ன சூசட் அதன் பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கருத்தரங்குகளிலும் போராட்டங்களிலும் பங்கெடுத்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உரத்துக் குரல் கொடுத்தார். ஆனால் சூசட் ஜார்டனுக்கு அவர் வேண்டிய நீதி மட்டும் கடைசிவரை கிடைக்கவே இல்லை. கடுமையான மன உளைச்சலாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார்.

நீதி என்பது என்ன?

பெண்களைப் பாதுக்காக்க இயற்றப்படும் சட்டங்கள் எல்லாமே அவர்களை வதைப்பதற்கும் ஒடுக்குவதற்கும்தான் பயன்படுகின்றனவோ என்ற சந்தேகத்தைத்தான் இதுபோன்ற வழக்குகள் நமக்கு உணர்த்துகின்றன. வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் ஒன்று இறந்துவிட வேண்டும் இல்லையென்றால் இறப்பதற்கு நிகரான ஒரு நிலைக்குச் சென்றுவிட வேண்டும். நீதி கேட்டு நிமிர்ந்து நிற்கக் கூடாது. நியாயம் கேட்டுப் போராடக் கூடாது. அப்படிச் செய்தாலும் இங்கே எதுவும் நடக்காது. காலம் முழுக்கக் கறைபடிந்தவள் என்ற அடையாளத்துடனேதான் இந்தச் சமூகத்தின் முன்னால் முடங்கிக் கிடக்க வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகளில் குற்றமிழைத்தவர்களுக்குத் தரப்படும் தண்டனை என்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கிடைக்கும் நீதியா என்றால் நிச்சயம் இல்லை. அவள் கடந்துவந்த ரணங்களையும் வலிகளையும் அந்தத் தண்டனையால் மாற்றி அமைத்துவிட முடியாது. தொலைந்துபோன அவள் அடையாளங்களை மீட்டுத் தந்துவிடாது. ஆனால் சட்டம் நமக்குத் துணை நிற்கிறது என்ற நம்பிக்கையை அந்தத் தண்டனை உறுதிப்படுத்தும். அவளுக்குள் வாழ்வு மீதான பிடிப்பையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கும். ஆனால் நம் சட்டங்கள் இதைச் சரியாகச் செய்கின்றனவா? காவல் நிலையங்களுக்கும் நீதி மன்றங்களுக்கும் அலைந்து அலைந்து அனைத்தையுமே இழந்துவிடுகிற நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் எப்படித் தொடர்ந்து போராட முடியும்?

பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்க்கும் வாசகங்கள் தாங்கிய பதாகைகளைப் பிடித்தபடி நாம் போராட்டம் நடத்துவோம். மரித்துப் போன பெண்களுக்காக மெழுகுவத்தி ஏந்தியபடி ஊர்வலம் போவோம். நீதியும் சட்டமும் மௌனித்து இருக்கட்டும். குற்றவாளிகள் சுதந்திரமாக வாழட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x