Published : 23 Mar 2014 12:00 AM
Last Updated : 23 Mar 2014 12:00 AM

புத்தகங்களில் கிடைக்காத பாடம்

ஸ்டெல்லா மேரி போன்ற ஒரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அது மிகவும் புதிய, உணர்ச்சிகரமான ஒரு காலைப் பொழுதாகவே இருந்திருக்கும்.

பெண்கள் தினத்தை முன்னிட்டுக் கடந்த வாரத்தில் ஸ்டெல்லா மேரிக் கல்லூரியுடன் இணைந்து பூவுலகின் நண்பர்கள் நடத்திய 'பெண்களும் நிலைபெறு வளர்ச்சியும்' என்கிற தலைப்பிலான கருத்தரங்கம் வழக்கமான கட்டுரைகள் உரைக்கப்படும் கருத்தரங்கமாக இல்லாமல், பங்குகொண்ட பெண்களின் வாழ்வனுபவங்களில் இருந்து மாணவிகள் உண்மைகளை தேடத் தூண்டிய ஒரு அரங்கமாக இருந்தது.

கருத்தரங்கத்தின் முதல் பகுதியாக கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பேசினார். 88 வயதிலும் தள்ளாடாத குரலில் வள்ளலார் பாடலுடன் தனது உரையைத் தொடங்கியவர், தனது வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் விதமாகத் தன் உரையை அமைத்துக்கொண்டார். வினோபா பாவேயுடனான பணி, கீழ்வெண்மணியில் செய்த வேலைகள், கணவர் ஜெகநாதனுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள் என்று பேசிக்கொண்டே போனவர், பாரதியின் பாடல்களை இடையிடையே பாடியதும் மாணவிகளை உற்சாகப்படுத்தியது.

இப்போதும் நிலமற்ற பெண்களுக்காக வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள், பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆனால், சொந்த வீட்டை அடையும் உழைக்கும் பெண்ணின் புன்னகைக்கு இணையாக இதுவரை ஒரு விருதும் பெற்றதில்லை என்று அவர் சொல்லும்போது அரங்கில் நெகிழ்வுணர்வு நிரம்பியது.

அடுத்து எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான வ. கீதா நெறிப்படுத்திய கலந்துரையாடல் தொடங்கியது. அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் இடிந்தகரை சுந்தரியும் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை நாமக்கலில் முன்னெடுத்த தனலட்சுமியும் போராட்டத்துடன் இயைந்த தங்களது வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள்.

எட்டாவது வரையே படித்திருக்கும் சுந்தரி, கணவனை இழந்த பெண்களை இழிவுபடுத்தும் சடங்குகளைச் சாடிப் பேசியபோது பலரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். “நாம் என்ன இந்த பொட்டையும் பூவையும் திருமணத்திலிருந்து மட்டும்தானா அணியத் தொடங்கினோம்? அதற்கு முன்பு அணியவில்லையா? கணவரை இழந்துவிட்டால் எதற்கு இவற்றை =யெல்லாம் நாம் இழக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பியபோது மாணவிகளிடையே பலத்த வரவேற்பு.

2004இல் சுனாமி தாக்கியபோது எட்டு நாட்கள் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததாகச் சொன்னார் சுந்தரி. “சுனாமி தாக்கியவுடன் ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடினோம். எனக்கு அந்த நொடி எனது கணவரைவிட எனது குழந்தை முக்கியமாகப் பட்டது. அவளைத்தான் முதலில் தேடிக் கண்டடைந்தேன்” என்றார். போராட்டத்தில் தனது கணவரின் பங்களிப்பைவிடத் தனது பங்களிப்பு அதிகமாக இருப்பது குறித்து, அவரது குடும்பத்தினரே கிண்டலடித்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியரைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

“உண்மையில் சிறை ஒரு பல்கலைக்கழகம்போல. பல தரப்பட்ட பெண்களையும் அவர்களது கதைகளையும் அங்கு நான் அறிந்துகொண்டேன். 20களில் இருந்த ஒரு பெண் குடிகாரக் கணவனின் துன்புறுத்தல் தாங்காமல் அவனைக் கொன்றுவிட்டாள். அந்தப் பெண்ணைச் சிறையில் சந்தித்தபோதுதான், சமூகத்தில் பெண்களின் துயரங்களைக் கொஞ்சமாவது உணர்ந்துகொள்ள முடிந்தது.

வாழ்க்கையை அங்கே ஓரளவுக்கு முழுமையாகக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். எனக்கு ஏற்பட்ட அவமானங்களையெல்லாம் தாண்டி சிறை ஒரு சிறந்த படிப்பினையைத் தந்தது” என்றார்.

கொலை மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, தான் பிறந்து வளர்ந்த காவிரிக் கரையில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து மேற்கொண்ட போராட்டம், சட்டத்தின் துணைகொண்டு அவர்களை வென்றது எனத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் தனலட்சுமி.

நிலத்தோடும் நீரோடும் தங்களுக்கு இருந்த உறவை, அது துண்டிக்கப்படுவதற்கான முயற்சிகள் உருவாகும்போது அவர்கள் ஆற்ற வேண்டிய எதிர்வினையை சுந்தரியும் தனலட்சுமியும் வாழ்வனுபவங்கள் மூலம் எளிமையாகப் பதிவுசெய்தார்கள். எந்தப் புத்தகமும் தர இயலாத இந்தப் பாடத்தை மாணவிகள் மிகவும் விரும்பினார்கள் என்பதைக் கருத்தரங்கு முடிந்த பிறகு பேச்சாளர்களிடம் உரையாடியபோது, அவர்கள் காட்டிய நெகிழ்ச்சியின் மூலம் உணர முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x