Published : 31 Aug 2014 12:00 AM
Last Updated : 31 Aug 2014 12:00 AM

புதிய பாதையும் வெற்றியின் வாசலே

பழகிய பாதையில் வெற்றித் தடத்தை எட்டுவது பலருக்கும் எளிது. ஆனால் புதிய பாதையை உருவாக்கி அதில் பயணிப்பது அரிது. தான் பணிபுரிந்து வந்த பதினைந்து வருட துறைக்குச் சிறிதும் தொடர்பில்லாத புதிய துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஷானாஸ்.

பதினைந்து வருடங்கள் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்தவருக்கு அந்தச் சேவையைத் தொடர முடியாத உடல் நலப் பாதிப்பு. வலது கை மூட்டு இணைப்புகளில் இருக்கும் செல்கள் பாதிப்படைந்ததால் கையை உயர்த்த முடியாத நிலை.

“கரும்பலகையில் எழுதாமல் எப்படிப் பாடம் நடத்துவது? அதுவும் நான் உயிரியல் ஆசிரியர் வேறு. படம் வரைந்து விளக்கினால்தானே மாணவர்களுக்குப் புரியும்?” என்று கேட்கும் ஷானாஸ், தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியை விட்டு நின்றிருக்கிறார். கை வலியால் வண்டியும் ஓட்ட முடியவில்லை என்பதால் ஒரு மாதம் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை.

தனிமையை விரட்டிய தையல்

அதுவரை மாணவர்கள், பாடம் என்று எப்போதும் பரபரப்புடன் இருந்தவருக்கு, சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட அந்த ஓய்வு பிடிக்கவில்லை. தான் சிறுவயதில் கற்றுக்கொண்ட தையல் கலையை மீண்டும் கையில் எடுத்தார். அவ்வப்போது அதைத் தான் உடுத்தும் ஆடைகளில் வெளிப்படுத்தி வந்தாலும் தொடர்ச்சியான ஓய்வு அதை முழுமைப்படுத்தியது. ஷானாஸ் அணிந்திருக்கும் ஆடைகளின் வடிவமைப்பைப் பார்த்துவிட்டுத் தெரிந்தவர்களும் நண்பர்களும் தங்களுக்கும் அதேபோல் தைத்துத் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.

கை வலியோடு துணிகளைத் தைப்பது முடியாத செயல். ஆனால் நண்பர்களின் தேவையை எப்படி நிறைவேற்றுவது? பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீன் பிடித்துத் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது என்ற தத்துவத்தைத்தான் ஷானாஸ் செயல்படுத்தினார். தன்னிடம் ஆடை வடிவமைத்துத் தர ச்சொன்னவர்களுக்கு அந்தக் கலையையே கற்றுத் தந்தார். பயிற்சி பெறுவதற்காக வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, சில மாதங்கள் கழித்து அதையே ஒரு பயிற்சி நிறுவனமாக விரிவாக்கினார்.

“என்கிட்டே பயிற்சி எடுத்துக்கிட்டவங்க அதுக்குப் பிறகு வேறெங்கேயும் பயிற்சிக்காகப் போகக் கூடாது. இதுதான் என் கொள்கை. அப்படித்தான் இப்போ வரைக்கும் பயிற்சியளிக்கிறேன். திருச்சியில் சுப்ரமணியபுரத்திலும் கே.கே.நகரிலும் எங்கள் பயிற்சி நிறுவனம் இருக்கு” என்று சொல்லும் ஷானாஸ், பயிற்சி பெறுகிறவர்களைப் பொருத்தே கட்டணம் வாங்குகிறார். பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கிறவர்களிடம் சொற்பமான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

“அவர்களுக்கு இலவசமாகவும் வகுப்பெடுக்கலாம்தான். ஆனால் விலையில்லாமல் கிடைக்கிற எதற்கும் போதிய மதிப்பு இருப்பதில்லை. கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் இருக்கிறவர்களிடம் 100 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு பயிற்சி தருகிறேன்” என்று ஷானாஸ் தன் கொள்கைக்கு விளக்கம் தருக்கிறார்.

கல்வி ஒரு தடையில்லை

இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், பீடி சுற்றும் தொழிலாளிகள் என்று பலதரப்பட்ட பெண்களுக்கும் இவர் வகுப்பெடுக்கிறார். படிப்பறிவில்லாத பெண்களுக்கும் அவர்களுக்குப் புரியும் வகையில் தையலைக் கற்றுத் தருகிறார்.

திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண், ஷானாஸிடம் பயிற்சி பெற வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் கணவன் போதைக்கு அடிமையாகி, வீட்டுக்குச் சரியாகப் பணம் தருவதில்லை. தையல் கற்றுக் கொண்டால் தன் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை ஓரளவுக்குக் குறைக்கலாம் என அந்தப் பெண் நினைத்தார். மூன்று நாள் பயிற்சிக்குப் பிறகு தன்னால் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லையே என அவர் உடைந்து உட்கார்ந்துவிட்டார். ஆனால் அந்தப் பெண்ணிடம் பொறுமையாகப் பேசி, படிப்புக்கும் தையலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எடுத்துக்கூறி அவரது மனதை ஷானாஸ் மாற்றினார்.

“அதுக்குப் பிறகு அவங்க நம்பிக்கையோடு தையல் கத்துக்கிட்டாங்க. ஒரு நாள் அரிசி வாங்கக்கூட பணமில்லாம கஷ்டப்பட்டபோது ஒருத்தருக்கு நாலு பிளவுஸ் தைச்சு குடுத்திருக்காங்க. அதுல கிடைச்ச நானூறு ரூபாயை வச்சு அரிசி வாங்கினதை கண்ணுல தண்ணியோட அவங்க சொன்ன அந்த நொடி எப்பவும் எனக்கு மறக்காது. எனக்கு இதைவிட வேறென்ன வேணும்?” என்று நெகிழ்கிறார் ஷானாஸ்.

வரவேற்ற விமர்சனங்கள்

திருப்பூர், கரூர், லால்குடி, அரியலூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களிலிருந்தும் இவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தான் பயிற்சி கொடுத்ததை நிறைவுடன் குறிப்பிடுகிறார். உடல் நலம் அதிகமாகப் பாதிக்கப்பட்டு எங்கேயும் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண்மணிக்குச் சொந்தமாகத் தொழில் செய்கிற வலிமையை இந்தத் தையல் கலை தந்திருக்கிறது. பல டெய்லர்களும் இவரிடம் வந்து புதுவித தையல் கலைக்குப் பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள்.

“பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்துப் பெண்களுக்குமான துணிகளை வடிவமைத்துத் தருகிறோம். என்னிடம் பயிற்சி பெற்ற பலர் இன்று சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள். நான் பயிற்சி நிறுவனம் தொடங்கியபோது வரவேற்பை விட எதிர்மறை விமர்சனங்கள்தான் அதிகம் கிடைத்தன. அப்போதெல்லாம் என் கணவர்தான் எனக்கு நம்பிக்கை தருவார். ‘அடுத்தவங்க பேசுறதைப் பெருசா எடுத்துக்காதே. அதையே நினைச்சுக்கிட்டு இருந்தா எந்த வேலையையும் செய்ய முடியாது’ன்னு சொல்வார். அவரோட வார்த்தைகள்தான் எனக்கு உற்சாகம் தரும் அற்புத மருந்து” என்று ஷானாஸ் தன் வெற்றியில் தன் கணவருக்கு இருக்கும் பங்கைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தையல் தவிர ஓவியம் வரைவது, ஆடைகளில் புதுப்புது வேலைப்பாடுகளைச் செய்வது, ஃபேஷன் நகைகள், காகித வேலைப்பாடு என்று ஒவ்வொரு கலையையும் ஈடுபாட்டுடன் செய்கிறார். தன்னிடம் பயிற்சி பெற வருகிற ஒவ்வொருவருக்கும் அக்கறையுடன் பயிற்சி தருகிறார். தனக்குக் கிடைக்கிற ஆர்டர்களை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். வருமானத்தில் ஏற்ற, இறக்கம் இருந்தாலும் தன் பணியில் ஒரு நாளும் தொய்வோ, சுணக்கமோ ஏற்பட்டதில்லை என்கிறார் ஷானாஸ். அந்த வார்த்தைகளைப் புன்னகையாக மொழிபெயர்க்கிறார்கள் ஷானாஸிடம் பயிற்சி பெறும் பெண்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x