Last Updated : 12 Jun, 2016 12:52 PM

 

Published : 12 Jun 2016 12:52 PM
Last Updated : 12 Jun 2016 12:52 PM

பார்வை: பரிதாபமான இறைவிகளா நாம்?

மூன்று பெண்கள். இல்லை இல்லை, நான்கு பெண்கள். முதல் காட்சியிலேயே தன்னுடைய மொத்த வாழ்க்கையைச் சுருக்கமாகக் காட்சிப்படுத்திவிட்டு கோமா நிலைக்குச் செல்லும் வயதான மீனாட்சி அம்மாதான் இறைவி படத்தின் மையம் எனத் தோன்றுகிறது. அவரைப் பற்றிப் பிறகு விவாதிப்போம்.

கணவனை இழந்து தனித்து வாழ்கிறார் மலர் (பூஜா). காதலித்த கணவர் திடீரென இறந்துபோன பிறகு திருமணத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தற்போதைய தோழன் மைக்கேலிடம் சொல்கிறார். மைக்கேலுக்கும் தனக்கும் இடையிலிருப்பது காமம் மட்டுமே, காதல் இல்லை என மைக்கேலிடம் நேரடியாகச் சொல்லிவிடுகிறார். அவர் ஏன் காதலையும் கல்யாணத்தையும் புறக்கணிக்கிறார் என்பதற்கான காரணம் சொல்லப்படவில்லை.

ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?

தமிழ்த் திரைப்படங்களில் ‘அவள் ஒரு தொடர்கதை’ தொடங்கி ‘ஓ காதல் கண்மணி’ வரை திருமணம் வேண்டாம் என மறுத்த பெண்கள் பலர் உண்டு. அவற்றில் குடும்ப அமைப்பு கசந்து போனதற்கான காரணங்கள் வெவ்வேறு கோணங்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், வேலைக்குச் செல்லும் பெண்ணாக ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதா (சுஜாதா) கடைசிவரை இருந்துவிடுகிறார். திருமணத்துக்குப் பின்னர் மட்டும் காமத்தை அனுமதிக்கும் கலாசாரத்தை, “ஒரு சர்டிஃபிக்கேட் இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா?” எனக் கூர்மையாக விமர்சிப்பவர் ‘ஓ காதல் கண்மணி’படத்தின் தாரா. அவர் திருமணத்தைத் தவிர்த்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அவருடைய பெற்றோரின் மணமுறிவு முக்கியக் காரணம். தன்னுடைய தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் தக்கவைத்துக்கொள்ளத் துடிப்பவராகவும் தாரா இருக்கிறார்.

ஆனால் ‘இறைவி’யின் மலரோ, உருகிக் உருகி காதலித்த கணவர் திடீரென இறந்த காரணத்தைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. வேறொரு பெண்ணை மணந்த மைக்கேல் தன்னை மீண்டும் தேடி வரும்போது, “இத்தனை நாட்களாக என்னை நினைத்து அந்தப் பெண்ணைத் தொடாமலா இருந்திருப்பாய்?” என்கிற சரியான கேள்வியை எழுப்புகிறார். இனி மைக்கேல் தன் மனைவியோடு நல்லபடி வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக, தனக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதுபோல மலர் காட்டிக்கொள்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மைக்கேல் சென்ற பிறகு மலர் ஏன் கண்ணீர் சிந்துகிறார்? கல்யாணத்தை மட்டுமல்ல, காதலைக்கூட நிராகரிக்கும் ஒரு பெண் அதற்கான ஆழமான புரிதலோடும் பல அடுக்கு வாழ்க்கை அனுபவங்களோடும் இருப்பதுதானே சாத்தியம்? கல்யாணமே தேவை இல்லை என உறுதியாக முடிவெடுக்கும் ஒரு பெண் அதை நினைத்து ஏன் அழ வேண்டும்?

மனித உணர்வுகள் அத்தனை நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பதால் இதுவும் சாத்தியம்தானே என்னும் கோணத்தில் அணுகினாலும் சிக்கல்தான். ஆரம்பத்தில் மைக்கேலைத் திருமணம் செய்துகொள்ள உறுதியாக மறுப்பவர் பின்பு அதை எண்ணி வருந்துகிறார் என்பது ஆண் துணைக்கான நாட்டத்தையே காட்டுகிறது. ஆண் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியாது என்று சொல்லவருகிறாரா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்?

நிர்க்கதியா, சுதந்திரமா?

பொன்னி (அஞ்சலி) வாழ்க்கை குறித்த ஆணித்தரமான கேள்விகளை எழுப்புகிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே கணவர் குழந்தைகள் அழகான குடும்பம் என்பதை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர் பொன்னி. ஆனால் முதலிரவு அன்றே கணவனாகிய மைக்கேலுக்குத் தன் மீது அன்பு இல்லை என்பது தெரிந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் கணவனின் நெடுநாள் நண்பன் ஜகன் பொன்னியிடம் காதலை வெளிப்படுத்துகிறார். “எனக்குக் கல்யாணம் ஆகிடிச்சு, குழந்தை இருக்கு, ஆனால் இதுவரைக்கும் யாரும் லவ் பண்ணலை” எனப் பொன்னி சொல்லும்போது அந்த உண்மை சமூகத்தின் முகத்தில் அறைகிறது. “ஆமாம் நானும் ஜகனை லவ் பண்ணேன். ஆனால் சொல்லலை. அடுத்த நாள் ஊரைவிட்டுக் கிளம்பிட்டேன்” என அவர் சொல்லும்போது பல இந்தியப் பெண்களின் மனக் குரலாகப் பொன்னி ஒலிக்கிறார். பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வேறு வழியின்றித் தனக்குப் பிடிக்காத வாழ்க்கையைச் சகித்துக்கொண்டு இருப்பது துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டப்பட்டிருக்கிறது. கணவன் தன்னைச் சந்தேகிக்கும்போது, “நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டேன். அது தெரியாமல் குடும்பம் நடத்துவதாக இருந்தா வா…” என்று சொல்லித் துணிந்து நிற்கிறார்.

ஏற்கெனவே கணவனைப் பிரிந்து வாழப் பழகினாலும் இறுதிக் காட்சியில் வேறொரு ஊருக்கு அழைத்துச் செல்லும் கணவனுடன் மறுபேச்சின்றிப் பெண் குழந்தையோடு பின்தொடர்கிறாள். ஆனால் அடுத்த காட்சியிலேயே கண் முன்னே கணவன் இறந்து கிடக்கிறான். அதை அடுத்து “உலகம் உனதாய் வரைவாய் மனிதி மனிதி வெளியே வா” என்கிற பாடல் பின்னணியில் ஒலிப்பது அபத்தமாகவும் அவலமாகவும் இருக்கிறது. பள்ளிப் படிப்பைத் தாண்டாத, கையில் குழந்தையைச் சுமந்துகொண்டு, கணவரை நம்பி ஊர் பெயர் தெரியாத ஊருக்கு ரயில் ஏறிய இளம் பெண், அத்தருணத்தில் நிர்க்கதியாக நிற்கிறார். அவர் எப்படி எல்லாச் சங்கிலிகளிலிருந்தும் விடுபட்டுச் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது போல உணர முடியும்? கையில் பணம் இல்லை; குழந்தை இருக்கிறது. படிப்பு இல்லை; துக்கம் நிறைந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கையை நினைக்கும்போது மனதில் பயம் கவ்வுகிறது.

மழையில் நனைந்திருக்கலாமே!

மூன்றாவது பெண், படித்த மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த யாழினி (கமலினி முகர்ஜி). காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு வேலைக்குச் செல்கிறார். கணவரின் குடிப் பழக்கத்தால் மனக் கசப்பு. இது நிற்காமல் தொடரவே ஒரு கட்டத்தில் மனமுடைந்து கணவரை விட்டுப் பிரிந்து செல்கிறார்.

படம் முழுக்க மழை பெண்களோடு பயணிக்கிறது. மழையில் நனையலாமா என ஒவ்வொரு பெண் கதாபாத்திரம் நினைக்கும்போதெல்லாம், “நனைஞ்சா முழுசா நனைஞ்சிடுவோமே” எனச் சொல்கிறார்கள். பெண் சமூகத்தின் கட்டுப்பாட்டுச் சிறையிலிருந்து விடுதலை அடைவதை மழையில் நனைவதோடு ஒப்பிடுகிறார் இயக்குநர். சொல்லப்போனால் பொன்னிக்குப் பதிலாக இறுதிக் காட்சியில் யாழினிதான் முழுவதுமாக மழையில் நனைந்திருக்க வேண்டும். மீண்டும் திருமணத்துக்குள் சிக்க மாட்டேன் என்கிறார் மலர். ஆனால், அதைச் சொல்லுவதற்கான வாழ்க்கைப் போராட்டங்களையும் அனுபவங்களையும் யாழினிதான் அனுபவிக்கிறார். ஆக, மீண்டும் இறைவி சறுக்குகிறார். சறுக்குவது இறைவியா அல்லது இறைவிகளைப் படைத்த இயக்குநரா?

இப்போது மீனாட்சி அம்மாவிடம் வருவோம். தன் கணவர் எப்போதுமே தன்னைக் கடிந்துகொள்வதை நினைத்துப் புலம்பும் வயதான அம்மா அசைவற்ற உயிர்ப் பிண்டமாக மாறிப்போகிறார். ஆண் சமூகத்தால் அப்படியாக மாற்றப்படுகிறார். எத்தனை சோகங்களைச் சுமந்தாலும் கணவர் குரலுக்கு அழுகையை அடக்கிக்கொண்டும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டும் எழுந்து செல்கிறார். அந்த அறையை விட்டுச் சென்றவர் பின்னர் காலத்துக்கும் அசைவற்றவராக அதே அறையில் கிடத்தப்படுகிறார்.

பெண்களின் இத்தகைய நிலைக்கு ஆண்களைக் குற்றம்சாட்டுகிறது படம். ஆனால், ஆண்களால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமல்ல. உதாரணமாக, அருளின் அதீதமான செயல்கள் அவருடைய மனைவியை மட்டுமல்லாமல் அவருடைய அப்பா, தம்பி ஜகன, குடும்பத்துக்கு நெருக்கமான மைக்கேல் என எல்லோரையும்தான் பாதிக்கின்றன. மைக்கேலின் செயல்களும் பொன்னியை மட்டும் பாதிப்பதில்லை. பெண்களின் பாதிப்பு வேறு, ஆண்களின் பாதிப்பு வேறு என்றாலும் அதைக் காட்டுவதற்கான காட்சிகள் வலுவுடன் உருப்பெறவில்லை. இறைவிகளின் பாத்திரப் படைப்புகளில் முழுமை கூடவில்லை என்பதே இதற்குக் காரணம். பெண்ணியம், பெண் விடுதலை குறித்துப் பல ஆண்களுக்கு இருக்கும் மேலோட்டமான புரிதலையே ஜகனின் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. ஒரு பெண்ணின் மீதான அனுதாபம் அவள் மீதான காதலாகத்தான் பரிணமிக்க வேண்டுமா என்ன? ஜகனுக்குப் பொன்னி மீது இருப்பது காதலா, பெண்ணுரிமை சார்ந்த அனுதாபமா, அல்லது இரண்டுமா? தெளிவாக இல்லை.

தன்னைக் கடத்தி விற்பவர்களை எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் இறைவி சிலைகள் போலவே இறைவிகளாகக் காட்சிப்படுத்தப்பட்ட மலர், பொன்னி, யாழினி, மீனாட்சி எல்லோரும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். “ஒரு நாள் அரக்கன் கையிலிருந்து விடுபடுவாள் கண்ணகி” என்னும் கூற்று வார்த்தைகளாக மட்டுமே மிஞ்சுகிறது. இறைவிகள் ஆணாகப்பட்ட ‘அரக்கர்’களால் கைவிடப்படுகிறார்கள்; விடுபடவில்லை. ஆழமற்ற பார்வையின் விளைவாய் உருவான இவர்கள் உண்மையில் இயக்குநரின் படைப்பு சார்ந்த சிக்கலிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x