Last Updated : 08 Mar, 2015 12:36 PM

 

Published : 08 Mar 2015 12:36 PM
Last Updated : 08 Mar 2015 12:36 PM

பார்வை: ஆண்களின் மனநிலையை என்ன செய்வது?

“ப்ரியாவுக்கும் காயத்ரிக்கும் நீதி கொடு. சோனு சோரிக்கு நீதி கொடு. நீது சிங்குக்கும் ஷில்பாவுக்கும் நீதி கொடு” என்று பெண்கள் வீதியில் கோஷமிட்டுப் போராடினர். இந்தப் பெயர்கள் பிரபலங்களின் பெயர்கள் அல்ல. தினம் தினம் பாலியல் வன்முறையின் ஏதாவது ஒரு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் சாதாரண பெண்களின் பெயர்கள்.

2012-ம் ஆண்டு, டெல்லியின் தெருக்களில் போராடிய பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் “இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. பாலியல் பாகுபாட்டுக்கு முடிவு கட்டுவோம்” என்ற முழக்கங்களுடன், தன்னெழுச்சியுடன் தொடர்ந்து போராடினர். மாலை 8.30 மணிக்கு, திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்பிய ஒரு மாணவியை, ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, நிர்வாணமாகத் தூக்கி வீசிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்தது.

இந்தச் சம்பவத்தை முன்னிட்டு பிபிசி தொலைக்காட்சி, ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தது. ஆனால் அந்தப் படத்துக்கு இந்தியாவுக்குள் திரையிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

என்ன சொல்கிறது அந்தப் படம்?

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆண்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று காட்டுவதோடு, மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும் என்று நினைத்தால் அரசும் சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது என்று செய்தியையும் சொல்கிறது. மக்கள் போராட்டங்கள் இல்லாமல் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டிருக்காது என்பதையும் இந்தப் படம் பதிவு செய்கிறது.

அந்த படம் மேலும் சொல்லும் ஒரு செய்தி என்னவென்றால், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைத் தண்டிப்பதுடன் இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை. டெல்லி வழக்கையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர வேண்டும் என்பதற்காக நடந்தவை அன்று. நிர்பயா வழக்குக்கு முன்பும் பின்பும் பல பாலியல் வன்முறைகள் இந்தியாவில் நடந்தன, நடக்கின்றன.

இந்த வழக்கின் குற்றவாளிகள் நமது ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிபலிப்புகள்தான். பெருகிவரும் பாலியல் வன்முறைகளுக்கும் இந்த மனோபாவமே காரணம். நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தியச் சமூகம், இந்திய கலாச்சாரம் என்கிற கற்பிதங்களும்தான் இதில் பொறுப்பு வகிக்கின்றன. இதைச் சொல்வதின் மூலம் குற்றவாளிகளை நியாயப்படுத்தவில்லை. ஆனால் குற்றவாளியைத் தண்டிப்பது மட்டும் பிரச்னைக்கு தீர்வாகாது. இதே போன்ற மனநிலையுடன் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதும் இந்தப் படம் உணர்த்தும் செய்தி.

“இந்தியக் கலாச்சாரம் சிறந்த கலாச்சாரம். அதில் பெண்களுக்கு இடமில்லை” என்று குற்றவாளி கூறவில்லை, குற்றவாளியின் வழக்கறிஞர் கூறுகிறார். ஏன் நீதிபதிகள்கூட பெண்களின் பாலியல் வன்முறைகளுக்கு பெண்களே காரணம் என்று தீர்ப்பளித்திருக்கின்றனர் இந்நாட்டில்.

ஆணாதிக்க மனநிலை என்பது ஆண்களிடம் மட்டுமே இருப்பதில்லை. இந்தச் சமூகம் வளர்த்தெடுக்கும் பெண்களின் மனதிலும் மிக ஆழமாக ‘தாங்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் அல்ல’ என்பதைப் பதியவைக்கிறது. பெண்கள் என்றால் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் என்பது ஆண்களின் மனதில் சிறுவயதில் இருந்தே விதைக்கப்படுகிறது. அவன் வளர வளர, அதுவே ஆணாதிக்கச் சிந்தனையாக வேர்விடுகிறது. பெண்ணை ஒரு நுகர்பொருளாக மட்டுமே எண்ணும் சிந்தனையும் ஆணாதிகத்துக்குத் தூபம் போடுகிறது. பெண்ணே பெண்ணுக்கு எதிரியாகத் தூண்டப்படுவதும் ஆணாதிக்கத்தின் நீட்சிதான். ஆண்களின் இந்த மனநிலையை நிச்சயம் மாற்றியே ஆக வேண்டும்.

அதே நேரம் ஆணாதிக்க எண்ணம் இல்லாதவர்களும் ஆண்களில் உண்டு. டெல்லியில் நடைபெற்றப் போராட்டங்களில் பெண்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆண்களும் இருந்தனர். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தீபக்கிடம் கேட்டபோது, “இது போன்ற சம்பவங்கள் மிகவும் அசிங்கமானவை. ஒரு ஆணின் மிருகத்தன்மையின் வெளிப்பாடாகவே இத்தகைய சம்பவங்கள் இருக்கின்றன. தன்னைக் காதலிக்காததால், தன்னை ஏற்றுக்கொள்ளாததால் ஒரு பெண்ணைத் தாக்குவதற்கான உரிமை எந்த ஆணுக்கும் கிடையாது. எல்லா தளங்களிலும் யார் பெரியவன் என்ற ஆதிக்க மனோபாவம் தலை தூக்குகிறது. ‘என் உடல் என் உரிமை’ என்ற பார்வை சமூகத்தில் வளர வேண்டும்” என்கிறார்.

இந்த ஆவணப்படம் குறித்து நடிகை ரோஹிணி, “குற்றவாளி இரண்டு ஆண்டுகள் சிறையிலிருந்தும் அவனது மனநிலை ஏன் மாறவில்லை என்பது முக்கியமான கேள்வி. பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடாதீர்கள், உங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டே இருப்பதில் எந்த பலனும் இல்லை. இது நம் சமூகத்தைத் தொற்றியிருக்கும் ஒரு நோய். அந்த நோய்க்கான காரணங்கள் என்னவென்பதை ஆராயாமல், அறிகுறிகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆணாதிக்க மனநிலையை உண்டாக்கும் சமூகக் காரணிகள் என்ன என்பதை ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். அந்த முயற்சி எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி நாம் ஆறுதல் அடைந்துகொள்ளலாம். ஆனால், அவர்கள் தங்கள் குற்றங்களை உணரவில்லை. ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற சிந்தனை எல்லோர் மனதிலும் எழும் நாள்தான் பெண்களுக்கான நாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x