Published : 09 Aug 2015 12:18 PM
Last Updated : 09 Aug 2015 12:18 PM

பக்கத்து வீடு: ஜோர்டானின் முதல் பெண் பொறியாளர்

“எல்லாப் பிரச்சினை களுக்கும் தீர்வு மூன்றே விஷயங்களில் அடங்கியிருக்கிறது. கல்வி, கல்வி, கல்வி’’ என்று சொல்லும் ரஃபியா உம் கோமர், ஜோர்டான் நாட்டின் முதல் பெண் சூரிய சக்தி பொறியாளர்.

வறுமையும் கல்வியறிவின்மையும் நிரம்பி வழியும் நாடுகளில் ஒன்று ஜோர்டான். பெரும்பாலான ஜோர்டான் கிராமங்களில் மின் வசதி இல்லை. 10 வயது வரைதான் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். 15 வயதில் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். வீடு, கணவன், குழந்தைகளைக் கவனிப்பதுதான் பெண்களின் வேலை. வீட்டை விட்டுப் பெண்கள் வெளியேற அங்கே அனுமதி இல்லை.

இப்படிப் பட்ட ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் ரஃபியாவும் பிறந்தார். இவரது அப்பா கிராமத் தலைவராக இருந்தார். கிராமத்தில் இருந்த மற்றவர்களைவிட முற்போக்கான எண்ணம் கொண்டவர். பெண் குழந்தைகள் படிப்பதையும் முன்னேறுவதையும் ஊக்குவித்தவர். இதனால் கிராமத்தினரின் கடுமையான கண்டனங்களுக்கும் ஆளானவர்.

இளவயது திருமணம்

15 வயதில் ரஃபியாவுக்குத் திருமணம் நடந்து, ஒரே ஆண்டில் அது முறிந்துபோனது. மீண்டும் பிறந்த வீட்டுக்கு வந்தார் ரஃபியா. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது திருமணம். அவர் கணவருக்கு இது மூன்றாவது திருமணம். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ரஃபியா.

கிராமத்தில் இருந்த மற்ற பெண்களைப் போல குடும்பம், குழந்தைகள் என முடங்கிப் போனாலும் ரஃபியாவின் மனத்தில் எப்படியாவது தானும் முன்னேற வேண்டும், தங்கள் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

அரசாங்கம், ஐ.நா.வின் தன்னார்வத் தொண்டு அமைப்புகளிலிருந்து அந்தக் கிராமத்துக்குச் சிலர் வந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்து, கிராமத்தின் பிரச்சினைகளை அவர்களுடன் விவாதித்தார் ரஃபியா. அவரது தைரியமும் முன்னேறத் துடிக்கும் ஆர்வமும் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தன. மின் வசதி, பள்ளி, தண்ணீர், ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளுக்காக 260 கி.மீ. தொலைவில் இருந்த ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு அடிக்கடி சென்று வந்தார் ரஃபியா. கிராமத்தினருக்கும் ரஃபியாவின் கணவருக்கும் இது பிடிக்கவில்லை. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய காரியத்தில் உறுதியாக இருந்தார் ரஃபியா.

பாதை போட்ட கல்வி

இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தும் கல்லூரியில் உலகம் முழுவதிலும் உள்ள பின்தங்கிய ஏழை மக்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரிக்குச் சில பெண்களை அனுப்பி, படிக்க வைக்க முடிவு செய்தது ஜோர்டான் அரசாங்கம். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் ரஃபியா. வீட்டினரின் கடும் எதிர்ப்பையும் மீறி படித்தார்.

ராஜஸ்தான் கல்லூரிக்கு அவர் வந்தபோது, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நிறையப் பெண்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். எல்லோருக்கும் புரியும் விதத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்டது. மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கற்று வந்தார் ரஃபியா.

“இந்தியாவில் நான் கற்றுக் கொண்டது கல்வி மட்டுமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தொழில்முனைவோருக்கான ஊக்கம், தலைமைப் பண்புகள் என்று ஏராளமான விஷயங்களை அறிந்துகொண்டேன். புதிய ரஃபியாவாக மாறி இருந்தேன். அந்த நேரம் என் கணவர் மிகவும் பிரச்சினை செய்துவிட்டார். உடனே நாட்டுக்குத் திரும்பவில்லை என்றால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோ சென்று விடுவதாகக் கூறினார். என்னால் அந்த மிரட்டலை அலட்சியப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி படிப்பை முடிக்காமலேயே ஜோர்டான் திரும்பினேன்’’ என்கிறார் ரஃபியா.

கிராமம் ஒளிர்ந்தது

என்ன செய்தும் ரஃபியாவால் அவர் கணவர் மனநிலையை மாற்ற முடியவில்லை. அதற்காக அவர் சும்மா இருந்துவிடவில்லை. அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தார். சூரிய சக்தி மூலம் கிராமத்துக்கு மின் வசதி ஏற்பட வழிவகுத்தார். அவரே சூரிய மின் தகடுகளை உருவாக்கினார். 80 வீடுகளில் சூரிய சக்தி மின் தகடுகளை அமைத்தார். ரஃபியாவுடன் சஹியா உம் பாட் என்ற பொறியாளாரும் இதில் பங்குபெற்றார். அதுவரை விளக்கு வெளிச்சத்தை அறியாத கிராமம், ஒளிர்ந்தது. கிராமத்தினருக்கு ரஃபியா மீது நம்பிக்கை வந்தது.

சூரிய மின் சக்திக் கருவி களை உருவாக்குவதற்குப் பெண்களுக்குப் பயிற்சியளித்தார். இவற்றை விற்பதன் மூலம் பெண்களுக்கு வருமானம் கிடைத்துவருகிறது. கிராமத்தில் மின் விளக்கு, தண்ணீர் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றமும் ஏற்பட்டுவருகிறது. பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார். முதல் முறையாக நகராட்சித் தேர்தலில் நின்று, வெற்றி பெற்று, நகராட்சிமன்ற உறுப்பினராக மாறியிருக்கிறார் ரஃபியா.

வறுமை என்ற கொடிய அரக்கனை விரட்டியடிக்க பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார் ரஃபியா. பழமையான சிந்தனைகளில் ஊறியிருக்கும் மக்களை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாதுதான். ஆனால் தொடர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும். ஜோர்டான் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய அற்புதமான மந்திரம் ரஃபியாவிடம் இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x