Published : 27 Apr 2014 12:00 AM
Last Updated : 27 Apr 2014 12:00 AM

சிறைகளில் சீர்திருத்தம் அவசியம்- மீரான் சத்தா போர்வாங்கர், ஐ.பி.எஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் மீரான் சத்தா போர்வாங்கர். சிறைக் கைதிகளின் வாழ்க்கையில், முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான முன்முயற்சிகளை இவர் எடுத்துவருகிறார். அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள்தான் தனது குறிக்கோள் என்கிறார்.

இவர் மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலைகளுக்கான கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்துகொண்டு பல்வேறு அரிய பணிகளைச் செய்துவருகிறார். “இதைச் செயல்படுத்தும் அதிகாரத்தை காவல்துறைப் பணி எனக்கு அளித்துள்ளதால், எனது பணி புத்துணர்ச்சி மிகுந்த வேலையாகவே இருக்கிறது” என்கிறார்.

தொடரும் சீர்திருத்தங்கள்

“எனக்கு ஒவ்வொரு நாளுமே ஒரு புதிய வாழ்க்கை” என்று கூறும் இவர், மகாராஷ்டிரா முழுவதும் 14 கல்லூரிகள் மற்றும் டாட்டா சமூகவியல் விஞ்ஞானக் கழகத்தின் ஒத்துழைப்புடன் சிறைக் கைதிகளின் சீர்திருத்தங்கள், மறுவாழ்வுப் பணி நடவடிக்கைகளை கவனித்து நிறைவேற்றிவருகிறார். தற்போது இவருடைய பொறுப்பின் கீழ் 47 சிறைச்சாலைகள் இருக்கின்றன.

சுமார் 55 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட புனே நகரத்தில், 2010-ல் இருந்து 2012 வரை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய மீரான், ஏறத்தாழ 8,000 போலீஸ் அதிகாரிகளைக்கொண்ட அமைப்புக்குத் தலைமை தாங்கிச் சிறப்பான வகையில் கடமை ஆற்றியுள்ளார். புனே நகரத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற முறையில், சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காக நகரத்துக் குடிமக்களோடு ஒருங்கிணைந்து செயல்புரிந்தார். கிரிமினல் குற்றவாளிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் வெற்றிகரமான பல நடவடிக்கைகளையும் நிறைவேற்றியவர் இவர்.

திறமைக்கு அங்கீகாரம்

ஔரங்காபாத் மாவட்டத்தின் எஸ்.பி-யாக இவர் பணியாற்றியபோது, பெருமளவிற்கு வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரித்தாடின. அந்தக் காலகட்டத்தில், மகாராஷ்டிராவின் மாவட்ட போலீஸ் தலைவராக ஒரு பெண்மணி முதல்முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால், இவரது திறமையைப் பற்றி அரசுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்துக்களையும் முஸ்லிம்களையும் கொண்ட சமயக் குழுக்களின் பிரதிநிதிகளோடு, சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிடும் முயற்சிகளையும் வலியுறுத்தினார். 1991-ல் இருந்து 1993 வரை இந்தப் பதவியை வகித்த இவர் எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடம் கொடுக்காத வகையில் பணிபுரிந்திருக்கிறார்.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, கைதிகளின் வாழ்க்கையில் சீர்திருத்தங்கள், அவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் போன்ற பல செயல்களில் முனைந்து ஈடுபடுகிறார். முழுக்க முழுக்க சிறைக் கைதிகளுடனேயே தன் வாழ்க்கையைச் செலவிடுகிகிறார்.

சட்டக் கல்லூரி மாணவர்களும், இவருடைய பணித் திட்டங்களில் பயிற்சிப் பணியாளர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இவருடைய கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம் முழுவதிலும் பத்து திறந்தவெளி சிறைச்சாலைகள் செயல்படுகின்றன.

மரங்கள் வளர்க்கும் பணியில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் பராமரிப்புக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்திருக்கிறார் இந்த ஐ.பி.எஸ். அதிகாரி. பம்பாய் நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியும் இந்தத் திட்டத்தில் அவருக்குக் கைகொடுக்கிறது.

கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இருந்தும் என்கௌண்டர் நடவடிக்கையை இவர் ஏற்கவில்லை. பெரும்பாலான பெண் குற்றவாளிகளும், தங்கள் மருமகள்களைக் கொடுமைப்படுத்துவது, துன்புறுத்திக் கொடுமை செய்வது போன்ற குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று சொல்லும் மீரான், திருட்டு, கொள்ளை அல்லது ஏமாற்று வேலை போன்ற குற்றங்களுக்கான வழக்குகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவுதான் என்கிறார்.

மனசாட்சிக்கு விரோதமாக எதுவுமே செய்வதில்லை என்று கூறும் இவருக்குக் கடவுள் மீது நம்பிக்கை உண்டு. போலீஸ் வேலையைச் செய்வது தனக்குக் கிடைத்துள்ள நற்பேறு என்றும் இது ஆண்டவன் ஆசி என்றும் இவர் கருதுகிறார்.

பெண்களை மதிக்க வேண்டும்

பல விருதுகளைப் பெற்றுள்ள இவரைக் கவர்ந்த காவல் துறை அதிகாரி ஜூலியஸ் ரிபெய்ரோ. மீரான் ஐ.ஏ.எஸ். படித்த காலத்தில் தமது குழுவில் பேட்ச் மேட்டாக இருந்த போர்வாங்கரைக் காதலித்தார். போர்வாங்கர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மீரான், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். மீரானின் கணவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அரசுப் பணியிலிருந்து விலகித் தனியார் துறையில் சேர்ந்துவிட்டார். “இரு குடும்பங்களிலிருந்தும் முதலில் எதிர்ப்பு வந்தாலும் சிறிது காலத்துக்குப் பிறகு ஏற்றுக்கொண்டார்கள்” என்று தன் இளம் பருவத்தை நினைவுகூர்கிறார் மீரான்.

ஜக்ஜீத் சிங், குலாம் நபியின் கஸல்களை விரும்பிக் கேட்கும் இவருக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபாடு இல்லையாம்.

பெண்களுக்கான பாதுகாப்பைப் பற்றி மீரானுக்கு ஆழமான கவலை இருக்கிறது. “பிறந்ததில் இருந்தே இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று சொல்லிச் சொல்லியே, பெண்கள் வளர்க்கப்பட்டிருப்பதால், ஒரு விதமான எதிர்மறையான சூழ்நிலையிலேயே அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்” என்கிறார். “இன்றைய சூழ்நிலையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்துக்குமே, கல்வியறிவுதான் அடிப்படைக் காரணம். அப்படி இருந்தும்கூட, நிர்பயா சம்பவம் போன்றவற்றை தலைதூக்கவிடாமல் நம்மால் முறியடிக்க முடியவில்லை. சிறு வயதிலிருந்தே பெண்களை மதித்து நடக்கும் பண்பாடு வளர்த்தெடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது” என்கிறார் கவலையுடன்.

ஓய்வுபெற்ற பின்னர், பெண்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு யோசனைகளைப் பரிசீலித்துவருகிறார்.

இந்தத் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மட்டுமில்லாமல் ஆழ்ந்த சமூக அக்கறையும் கொண்ட இவர், அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x