Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM

சாமானியர்கள் சொல்லும் பாடங்கள்

உலகின் மாபெரும் பெண்ணியவாதிகளும் புரட்சியாளர்களும் கருத்துமேதைகளும் சொல்லாத சங்கதிகளை நம் சக மனுஷி ஒருவர் உணர்த்திவிட்டுச் செல்வார். அவர் மெத்தப் படித்த மேதாவியாகவோ, மேடைகளில் முழங்கும் கருத்துச் சிங்கமாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவருடைய வாழ்க்கை, நம் ஒவ்வொருக்குமான பல பாடங்களைச் சொல்லிவிடும். அவர், சாலையில் நம்மைக் கடந்து செல்கிற, பேருந்தில் நம் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருக்கிற, நியாயவிலைக்கடை வரிசையில் நமக்கு முன்னால் நிற்கிற பெண்ணாகவும் இருக்கலாம். அப்படிச் சில பெண்கள்தான் இவர்கள்.

தோள் கொடுக்க எந்தத் துணையும் இன்றித் தனித்து வாழும் பெண்கள் இவர்கள். அனைவரும் ‘நாம்’ என்கிற அமைப்பின் மூலம் குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள். தங்கள் மீது வாழ்க்கை தொடுக்கும் அத்தனை அம்புகளையும் தன்னம்பிக்கை என்கிற கேடயத்தால் எதிர்கொள்கிறார்கள். துரத்துகிற வறுமையைத் தங்களுக்குத் தெரிந்த சிறுதொழில்கள் மூலம் சமாளித்து நிமிர்கிறார்கள். இவர்களுடைய பேச்சில் சோகத்தின் சுவடோ, விரக்தியின் சாயலோ துளிக்கூட இல்லை. ஒவ்வொரு வார்த்தையிலும் அளவிட முடியாத நம்பிக்கை ஒளிர்கிறது.

அமில வீச்சுக்குப் பிறகும் வாழ்க்கை

செய்தித்தாள்களில், ‘இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது’ என்ற செய்திக்கு அடுத்தபடியாக நாம் படித்துவிட்டுக் கடந்து சென்ற அமில வீச்சு செய்தியின் நாயகி ராணி. வழக்கமாகன செய்திகளுக்கு இடையே கட்டம் கட்டித் தனியாக அடையாளம் காட்டப்பட்டதுதான் அவருக்கு நாம் செய்த மாபெரும் கௌரவமும் உதவியும். அதன் பிறகு ராணி என்ன ஆனார்? மீண்டு வந்தாரா? மாண்டு போனாரா? ராணியே சொல்கிறார்:

“எங்க அப்பா, அம்மா மும்பையில செட்டில் ஆனவங்க. தமிழ்நாட்டுல சொந்தக்காரங்க இருந்ததால நான் அங்கேயும் இங்கேயுமா மாறி, மாறி வளர்ந்தேன். ஒன்பதாவது முடிச்சதுமே பெரியவளாகிட்டேன். அதுக்கு அப்புறம் படிப்பு தேவையில்லைன்னு என்னை ஸ்கூலை விட்டு நிறுத்திட்டாங்க. திண்டுக்கல்லில் அக்கா வீட்டில் இருந்தேன். மாப்பிள்ளை பார்த்தாங்க. பதினாறு வயசுல கல்யாணம் வேணுமா, வேணாமான்னுகூட எனக்குத் தெரியலை. அம்மாவும் அக்காவும் சேர்ந்து சிவராமன்னு ஒருத்தரை எனக்கு மாப்பிள்ளையா முடிவு பண்ணாங்க. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாலதான் எங்க மாமா வந்து அவர் நல்லவர் இல்லை, கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொன்னார். ஆனா எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்த பிறகு கல்யாணத்தை நிறுத்தினா நல்லா இருக்காதுன்னு கல்யாணத்தை நடத்திட்டாங்க.

அப்புறம் சென்னை வந்தோம். 21 வயசுக்குள்ளேயே எனக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பையன். அவருக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது பொய்யோடவும் சத்தியத்தோடவும்தான் விடியும்.

அவர் சொல்ற எல்லாத்தையும் நம்புவேன். சினிமாவுல காட்டுற மாதிரி அவரும் ஒருநாள் நிச்சயம் திருந்துவார்னு நினைப்பேன். ஆனா என் தங்கச்சி கிட்டேயே தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினப்போ என்னால தாங்கிக்கவே முடியலை.

ஊருக்குப் போனா பெரியவங்க முன்னால ஒழுங்கா இருப்பார்னு திரும்பவும் திண்டுக்கல்லுக்கே வந்தோம். அங்கே சின்னதா டீக்கடை ஆரம்பிச்சோம். கொஞ்சமா முன்னேறி அதை இட்லிக் கடையாக்கினோம். அப்பவும் இவரோட நடத்தையில மாற்றம் வரவேயில்லை. அதை நான் கேட்டதுக்கு விறகுக் கட்டையால அடிச்சு, என் தாடையைக் கிழிச்சுட்டார். வாய்க்குள்ளே எட்டுத் தையல் போட்டாங்க. இன்னொரு முறை என் கையை உடைச்சுட்டார். குழந்தைங்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன்” என்று சொல்லும் ராணி, கணவரின் தொல்லை எல்லை மீறிய நாளில் குழந்தைகளுடன் மீண்டும் சென்னைக்கே வந்திருக்கிறார்.

தொடர்ச்சியான போராட்டம்

தன் தாயின் ஆதரவுடன் தனியாக இருந்தவரையும் விடாமல் துரத்தியிருக்கிறார் ராணியின் கணவர். “பசங்க கிட்டேயும் சுத்தி இருக்கறவங்ககிட்டேயும் என்னைப் பத்தி தப்பா சொன்னார். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு வேலைக்குப் போனேன். அப்பவும் போற வர்ற வழியில நின்னு பிரச்சினை பண்ணுவார். புடவையை இழுக்கறது, ஜாக்கெட்டைக் கிழிக்கறதுன்னு இவரோட அட்டூழியத்துக்கு அளவே இருக்காது. இதையெல்லாம் பார்த்து எங்கம்மா ரொம்ப வெறுத்துப் போனாங்க. இனிமேல் நம்ம பொண்ணுகிட்டே தகராறு பண்ணா அவனைப் போலீஸ்ல புடிச்சு தந்துடணும்னு சொன்னாங்க. என் சொந்தக்காரங்க அவரை அடிச்சு அனுப்பினாங்க. அப்பவும் அவர் திருந்தவே இல்லை. ஒரு நாள் கம்பெனில ஓ.டி முடிஞ்சு ரெண்டு பொண்ணுங்களோட வீட்டுக்குத் திரும்பிக்கிட்டு இருந்தேன். வழியில வேர்க்கடலை வாங்கி, அதை வாயில போட்டேன். அதை ஆஸ்பத்திரியில போய்தான் வெளியே எடுக்கப்போறாங்கன்னு எனக்குத் தெரியாது.

பின்னால யாரோ ஓடி வர்ற மாதிரி இருந்துச்சு. என்ன ஏதுன்னு நிதானிக்கறதுக்குள்ளேயே அவர் என் முடியைச் பிடிச்சு இழுத்து, என் மேல ஆசிட்டை ஊத்திட்டார். நான் அலறித் துடிச்சேன். என்கூட வந்தவங்க தடுத்தாங்க. காலியான ஆசிட் பாட்டிலை அவங்க மேல வீசினார். ஆசிட் பட்டதுல புடவையெல்லாம் உருகி வழிஞ்சுடுச்சு. சேலையில குத்தியிருந்த பின், அப்படியே சதையில புதைஞ்சு போச்சு. உடனே என்னை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாங்க. ஜி.எச்-ல முடியாதுன்னு கே.எம்.சிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. என் மேல தண்ணி ஊத்தினா புகையா கிளம்புச்சு. என் கதை முடிஞ்சுதுன்னு நினைச்சேன்.

ஆனா என் குழந்தைகளுக்காகவாவது நான் உயிரோட இருக்கணும்னு நினைச்சேன். கிட்டத்தட்ட மூணு வருஷமா வலியோடவும் ரணத்தோடவும் போராடினேன்” என்கிறார் ராணி.

நூறுக்கும் மேற்பட்ட தையல்கள், ஒன்பது அறுவை சிகிச்சைகள் நடந்தும் அமில வீச்சின் பாதிப்பில் இருந்து இவரால் மீண்டு வர முடியவில்லை. கழுத்துப் பகுதியில் சதைகள் இறுகியிறுப்பதால் இன்னும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமாம்.

புது வாழ்க்கை

இத்தனைக்கும் நடுவே தன் குழந்தைகளைப் படிக்க வைத்து, திருமணமும் செய்துவைத்து விட்டார். தையல் வேலை, ஃபேஷன் நகைகள் செய்வது, ஒயர் கூடைகள் பின்னுவது என்று தனக்குத் தெரிந்தத் தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். ராணியை எந்தச் சம்பவமும் அத்தனை எளிதாகப் பாதிப்பதில்லை. தன் நடத்தைக் குறித்தும், தன் தோற்றம் குறித்தும் யார் என்ன சொன்னாலும் கவலைப்படுவதில்லை. எல்லா விமர்சனங்களையும் ஒற்றைப் புன்னகையால் கடந்து செல்கிறார். கேட்டால், “மரணத்தையே

பார்த்துட்டு வந்தாச்சு. இதுக்கு மேல என்ன இருக்கு?” என்கிறார். அவருடைய அந்தக் கேள்வி ஓராயிரம் விளக்கங்களைச் சொல்லிவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x