Last Updated : 21 Aug, 2016 01:48 PM

 

Published : 21 Aug 2016 01:48 PM
Last Updated : 21 Aug 2016 01:48 PM

சானிட்டரி நாப்கின்களுக்கு விடைகொடுப்போம்!

மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளை உடைப்பதில் 1990-களில் செய்யப்பட்ட விளம்பரங்கள் முக்கியப் பங்காற்றின. அவற்றின் மூலம் ஒரு தலைமுறையே சானிட்டரி நாப்கின்களை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட யானையைப் போல சானிட்டரி நாப்கின் குப்பைகள் உருவெடுத்தன. ஒவ்வொரு வீட்டிலும் மலைமலையாக சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றைக் கழித்துக்கட்டுவதில் முறையான வழிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. வீட்டின் குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்கள். பிறகு தெருவோரக் குப்பைக் கூடையில் கொட்டப்படும். இறுதியில் மனிதர்களே அவற்றைத் தங்கள் கையால் அள்ளும்படியோ, எரியூட்டிகளில் இட்டு அழிக்கும்படியோ ஆகும்.

நாப்கின்களுக்கு மாற்று

பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் தெருவோரத்தில் மலைமலையாகக் குவிக்கப்படுவதற்கு ஒரு மாற்று உள்ளது. அதுதான், சூழலுக்கு ஊறுவிளைவிக்காத மாதவிடாய். ‘இந்தியாவில் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத மாதவிடாய்’ (Sustainable Menstruation India) என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் சமூகம் இயங்கிவருகிறது. அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளார்கள். தினசரி மேலும் பலர் அதில் இணைந்துகொண்டிருக்கிறார்கள். மீண்டும் பயன்படுத்தத் தக்க ‘துணி அணையாடை’ (cloth pad), மாதவிடாய்க் குப்பி (menstruation cup) போன்ற சூழலுக்கு உகந்த வழிமுறைகளைப் பெண்கள் பின்பற்றுவதற்கு இந்த ஃபேஸ்புக் சமூகத்தினர் ஊக்கமளிக்கின்றனர். இதற்குக் கிடைத்துவரும் வரவேற்பைப் பார்த்தால் இந்தப் பரிவாரத்தில் இணையும் பெண்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றே தெரிகிறது.

“எனக்குத் தெரிந்து மாதவிடாய்க் குப்பியைப் பயன்படுத்தியவர்கள் எல்லாம் அதன் பெருமை குறித்து ஊருக்கெல்லாம் உரக்கச் சொல்ல வேண்டுமென்ற பரவசத்தில் இருக்கிறார்கள்” என்கிறார் அந்த ஃபேஸ்புக் சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவரான மாலினி பர்மார். மாதவிடாய்க் காலத்தில் உடலுக்கு ஊறு விளைவிக்காத இந்த சிலிக்கான் குப்பிகளைப் பெண்ணுறுப்புக்குள்ளே பொருத்திக்கொண்டால் மாதவிடாய் ரத்தம் இந்தக் குப்பியில் சேகரமாகும். ரத்தத்தைக் கழித்துக்கட்டிய பிறகு சுத்தப்படுத்திவிட்டு இந்தக் குப்பியை மறுபடியும் பயன்படுத்திக்கொள்ள முடியும். என்ன ஒன்று, இதைத் தங்கள் உறுப்புக்குள் வைத்துக்கொள்வதற்குப் பெண்கள் பழக்கப்பட வேண்டும்.

“எப்போதும் இரண்டுவிதமான கேள்விகளை நான் எதிர்கொள்கிறேன். முதலாவது, ‘அந்தக் குப்பி உடலுக்குள் தொலைந்துபோய்விடுமா?’ என்ற கேள்வி. பெண்ணின் உடல் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது அதற்குச் சாத்தியமே இல்லை என்பது நமக்குத் தெரியும்” என்கிறார் மாலினி பர்மார். இரண்டாவது கேள்வி, ‘அந்தக் குப்பியால் கன்னித்திரைக்கு ஏதாவது சேதம் ஏற்படுமா?’ என்பதுதான். “விளையாட்டு, உடற்பயிற்சி, ஓட்டம் போன்றவற்றின்போது கன்னித்திரை சேதமடைய எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அதே அளவிலான வாய்ப்புதான் இந்தக் குப்பியை வைத்திருக்கும்போதும்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் மீனாட்சி பரத். இந்தக் குப்பிகளை முதல் தடவை பயன்படுத்துவோர் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த ஃபேஸ்புக் பக்கத்திலுள்ள பெண்கள் பதிலளிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைக் களைவதற்காகவும் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத மாதவிடாய் வழிமுறைகள் குறித்தும் பெங்களூருவில் பயிலரங்கங்கள் நடத்துகிறார்கள்.

பதின்பருவத்தினருக்கு இந்தக் குப்பிகள் பொருத்தமாக இருக்குமா என்று நிறைய பேர் கேட்கிறார்கள். “பதின்பருவப் பெண்ணும் அவளுடைய தாயும் கலந்து பேசித்தான் இந்தக் கேள்விக்கு விடைகூற முடியும்” என்கிறார் மாலினி பர்மார். அவருடைய 11 வயது மகள் தற்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி அணையாடைகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் குப்பிகளைப் பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறார். துணி அணையாடைகளைத் துவைப்பது அசௌகரியமான ஒன்று என்ற எண்ணத்தை மறுக்கிறார் பர்மார். “என் மகள் அவற்றை ஒன்றுக்குப் பல முறை துவைத்து அலசி, அவற்றை உலர்விப்பானில் மற்ற துணிகளுடன் காயவைக்கிறாள். கொஞ்சம் ரத்தக் கறை உள்ள துணியை மற்ற துணிகளுடன் கலக்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்கிறார் மாலினி பர்மார்.

மாதவிடாய்க் குப்பிகளும் துணி அணையாடைகளும் பெண்களின் உடல் நலத்துக்கு ஏற்றவை என்கிறார் டாக்டர் மீனாட்சி பரத். “சந்தையில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்களில் அஸிட்டோன், ஸ்டைரீன் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றால் மாதவிடாய்க் காலத்தில் இசிவு (இசிவு - வலியேற்படுத்தும் திடீர் தசை இறுக்கம்) அதிகரிக்கலாம். சானிட்டரி நாப்கின்களைக் கைவிட்டு மாற்று வழிகளைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகு அழற்சிகளும் குறைந்திருப்பதாகப் பல பெண்கள் சொல்கிறார்கள்” என்கிறார் மீனாட்சி பரத்.

சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்த பின் அவை எங்கு செல்கின்றன, என்னவாகின்றன என்பதைப் பார்க்கும்படி ‘சூழலுக்கு ஊறு விளைவிக்காத மாதவிடாய்’ குறித்த பிரச்சார இயக்கத்தினர் வலியுறுத்துகின்றனர். “கழிவுநீர்க் குழாய்களும் சாக்கடைகளும் அடைத்துக்கொள்வதற்குப் பெரிய காரணம் சானிட்டரி நாப்கின்களே. குப்பைக் கூடையிலும் குப்பைத் தொட்டியிலும் போட்டால் அவை மனிதர்களால் கையாளப்பட்டு, தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடும்” என்கிறார் இந்த ஃபேஸ்புக் சமூகத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான ஹரிஸ்ரீ பாபு. எரியூட்டிகளின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அரசுகள் முனைப்பாக இருக்கின்றன. எரியூட்டிகள் மூலம் சானிட்டரி நாப்கின்களை எரித்தழிப்பதால் புற்றுநோயை விளைவிக்கும் டையாக்ஸின்கள் காற்றில் ஏராளமாகக் கலக்கக்கூடும்.

பெண்களுக்கான கழிப்பிடங்களில் மட்டும் குசுகுசுவென்று பேசிக்கொள்ளும் விஷயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்தப் பிரச்சாரம். பெண்களின் மாதவிடாய் ரத்தம் என்பது அசுத்தமானது, அவற்றை ‘கழித்துக்கட்டிவிட்டு மறந்துவிடுவது’ உசிதம் என்பதுபோன்ற அசைக்க முடியாத நம்பிக்கைகளை இந்தப் பிரச்சாரம் கேள்வி கேட்கிறது. குப்பைகளால் நகரங்கள் மூழ்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதைத் தடுத்து நிறுத்தவும், தங்கள் ரத்தம் எங்கே செல்கிறது என்று பார்க்கவும் பெண்களைத் தூண்டுகிறது இந்த இயக்கம்!

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x