Last Updated : 22 Nov, 2015 03:36 PM

 

Published : 22 Nov 2015 03:36 PM
Last Updated : 22 Nov 2015 03:36 PM

கண்ணீரும் புன்னகையும்: பிபிசி பட்டியலில் இந்தியப் பெண்கள்

அரசியலில் முதல், பொருளாதாரத்தில் கடைசி

ரசியல் பிரிதிநிதித்துவ அடிப்படையில் இந்தியாவில் அமைச்சர் பதவி வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட 13% அதிகரித்திருக்கிறது. முன்பு இருந்ததைவிட ஆறு இடங்கள் முன்னேறி, 145 நாடுகளின் பட்டியலில் 108-வது இடத்தை அடைந்துள்ளது. ஆனால் பெண்களுக்கு வழங்கப்படும் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் அடிப்படையில் 139-வது இடத்தில் இந்தியா இருப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரே வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் ஊதியத்தில் காட்டப்படும் பாகுபாடுதான் இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் என்றும் உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. அரசியல் ரீதியான தன்னிறைவு, ஆரோக்கியம், கல்வி, பொருளாதாரப் பங்கேற்பு என்ற நான்கு அம்சங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா அரசியல் பங்கேற்பில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

தந்தைக்கு மரியாதை

ர்வதேச சிதார் கலைஞர் அனோஷ்கா ஷங்கர் தனது புதிய இசை ஆல்பமான ‘ஹோம்’-ஐப் பிரபலப்படுத்து வதற்காக இந்தியா வந்துள்ளார். டிசம்பர் 12-ம் தேதியிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் கச்சேரியும் செய்யவுள்ளார். இந்தப் புதிய இசை ஆல்பம் தன்னைப் பொருத்தவரை மிகவும் உணர்வுபூர்வமானது என்கிறார் அனோஷ்கா. தனது தந்தையும் குருவுமான பண்டிட் ரவிஷங்கருக்கு செய்யும் சமர்ப்பணம் இந்த இசை ஆல்பம் என்கிறார் அவர். ஃப்யூஷன் இசையிலிருந்து மீண்டும் செவ்வியல் இசைக்கு இந்த ஆல்பம் வழியாகத் திரும்பியுள்ளார். ரவிஷங்கர் உருவாக்கிய ஜோகேஸ்வரி ராகத்தில் சாகித்தியங்களை இந்த ஆல்பத்தில் வாசித்துள்ளார். நான்கு முறை கிராமி விருதுபெற்றுள்ள அனோஷ்காவுக்கு, இந்த ஆல்பம் இன்னொரு வகையிலும் மிகவும் நினைவுகூரத்தக்கது. இந்த இசை ஆல்பம் பதிவுசெய்யப்பட்டிருந்தபோது, தனது மகன் மோகனைக் கருவுற்றிருந்ததாகக் குறிப்பிடுகிறார். குழந்தைகள் பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் அனோஷ்கா.

பிபிசி பட்டியலில் இந்தியப் பெண்கள்

பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் உலகின் 100 சாதிக்கத் தூண்டும் பெண்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஏழு ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். பாடகி ஆஷா போஸ்லே, டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா மற்றும் இந்தி நடிகை காமினி கவுஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசியல், அறிவியல் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் செல்வாக்கு மிகுந்த நூறு பெண்களின் பட்டியலை பிபிசி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. விவசாயப் பெண்மணி ரிம்பி குமாரி, தொழிலதிபர் ஸ்ம்ரிதி நாக்பால் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ளனர். ரிம்பி குமாரி தனது தங்கை கரம்ஜித்துடன் சேர்ந்து தந்தையின் மறைவுக்குப் பின்னர் 32 ஏக்கர் நிலத்தைப் பொறுப்பெடுத்து விவசாயம் செய்தவர். ஸ்ம்ரிதி, காது கேளாத லட்சக்கணக்கான மக்களுக்குச் சைகை மொழி மூலம் கல்வி கற்பித்துவருபவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x