Published : 15 Nov 2015 01:20 PM
Last Updated : 15 Nov 2015 01:20 PM

கண்ணீரும் புன்னகையும்: என் தந்தை என்னை வீராங்கனை ஆக்கினார்

பெண்கள் கல்விக்கு ஆதரவாகப் பேசியதால் தலிபான்களால் சுடப்பட்டு மீண்டு தற்போது உலகம் முழுவதும் பெண் கல்வியின் முகமாக அறியப்படும் மலாலா குறித்து ‘ஹி நேம்ட் மீ மலாலா’ என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. நோபல் பரிசு பெற்றவர்களிலேயே மிக இளம் வயதில் நோபல் பரிசை வென்ற மலாலா குறித்த இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் ஆஸ்கர் விருது வென்ற டேவிஸ் குக்கன்ஹீம்.

மலாலாவின் போராட்ட வாழ்க்கைக்குப் பின்னால் இருந்தவர் அவரது தந்தை ஜியாவுதீன் யூசஃபி. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் படையினருக்கு எதிராகப் போரிட்ட வீராங்கனையின் பெயரைத் தனது மகளுக்குப் பெயராக வைத்தவர். அனைத்துத் துயரங்களிலும் மகளின் வளர்ச்சிக்குத் துணை நின்றவர். சொந்த கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை நிர்வகித்துவந்தவர். மலாலா தலையில் சுடப்பட்டு இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அற்புதமான வகையில் பிழைத்தெழுவதிலிருந்து தொடங்குகிறது இந்த ஆவணப்படம்.

எத்தனையோ சர்வதேசக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசும் ஆளுமையாக இருந்தாலும், வீட்டில் சிறு பெண்ணின் குறும்புகள் மற்றும் விளையாட்டுகளை விட்டுக்கொடுக்காதவர் மலாலா என்பதை இப்படம் காட்டுகிறது. மலாலாவுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி. டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்.

ட்விட்டரில் வந்த காவல் துறையினர்

தெரியாத ஆண்களிடமிருந்து தொலைபேசிக்கு வரும் தவறான அழைப்புகள், ஆபாசமான குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பிலும் தொந்தரவுகள் தொடங்கியுள்ளன. பெங்களூருவைச் சேர்ந்த சனாந்த்லர் பாங் என்ற பெண்மணி, இரவு உணவுக்காக ஒரு உணவு விடுதியைத் தொடர்புகொண்டு ஆர்டர் செய்தார். உணவு கொண்டுவந்த டெலிவரி நபர், சானந்த்லர் தனியாக வசிப்பதை அறிந்துகொண்டு தொடர்ந்து வாட்ஸ்அப்பில் தொந்தரவு செய்யத் தொடங்கினார். அந்த டெலிவரி நபரின் தொலைபேசி எண்ணை ப்ளாக் செய்த பின்னும் வெவ்வேறு எண்களில் தொந்தரவுகள் தொடர்ந்தன.

ஒரு கட்டத்தில் அவர் உள்ளூர் காவல் துறையினரைத் தொடர்புகொண்டார். எந்த உதவியும் இல்லை. வேறு வழியின்றி தனது கோபத்தை ட்விட்டரில் புகாராகப் பதிவுசெய்தார். ட்விட்டரில் அவருக்குப் பெருகிய ஆதரவைப் பார்த்து பெங்களூரு போலீசார் களத்தில் இறங்கினர். ட்விட்டர் வழியாகவே அவரைத் தொடர்புகொண்ட போலீஸ் அதிகாரிகள் வேண்டிய உதவிகளைச் செய்ய உறுதிமொழியும் தந்தனர். கடைசியில் வழிக்கு வந்த போலீசாருக்கு ட்விட்டரிலேயே நன்றியும் கூறியுள்ளார் சானந்த்லர்.

சுசீலா 80

தென்னகத் திரையுலகின் மறக்க இயலாத பாடகிகளில் ஒருவரான சுசீலாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 80 வயது. ஞானகோகிலம் என்று பெருமையுடன் அழைக்கப்படும் பி.சுசீலா தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தலைமுறைகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்களைப் பாடியவர். ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தால் மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட அரிதான பாடகி அவர். பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் பாடலின் முழு உணர்வையும் பாவத்தையும் கொண்டுவரும் மேதை என்று புகழப்பெற்றவர்.

கேரளத்தில் இன்றும் தாலாட்டுப் பாடலாகத் தாய்மார்களால் பாடப்படும் ‘பாட்டுப்பாடியுறக்கம் ஞான்’ பாடல்தான் இவரது முதல் மலையாளப் பாடல். இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி. தென்னிந்தியாவில் அதிகபட்ச ரசிகர்களைக் கொண்ட ஒரே பாடகி இவர்தான் என்கிறார் பாடகர் ஜெயச்சந்திரன். ‘சொன்னது நீ தானா’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘நலந்தானா’ முதலிய அமரத்துவம் வாய்ந்த பாடல்களைப் பாடிய சுசீலாவை வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x