Last Updated : 19 Jan, 2014 03:54 PM

 

Published : 19 Jan 2014 03:54 PM
Last Updated : 19 Jan 2014 03:54 PM

எழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமை. 1925இல் முசிறியில் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டம். உயர் கல்வியும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இவருக்கு அக்கால நியதிப்படி இளம் வயதில் திருமணமாயிற்று. மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தின் அழுத்தத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலத்தில் படைப்பாற்றல் மட்டுமே அவருக்குப் பற்றுக்கோலாக இருந்தது. இரவு நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சமையலறையைக் கழுவித் தள்ளிவிட்டு அதன் ஈரம் காயாத தரையில் உட்கார்ந்துகொண்டு எழுதுவார். எழுதுவதற்கு காகிதம் வேண்டுமே? கடையில் பெரிய தாள்களில் வழங்கப்பட்ட ரசீதுகளின் மறுபக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

பெண் எழுத்தாளர்கள் என்றாலே குடும்பக்கதை எழுதுபவர்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தார் ராஜம் கிருஷ்ணன். அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். நிறைய புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். தென்னிந்திய மொழிகளையும், ஆங்கிலத்தையும் சுய முயற்சியில் கற்றார். ரஷ்ய மொழியையும் ஓரளவு அறிந்து வைத்திருந்தார். ஒரு நாவல் எழுத வேண்டுமெனில் அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட உள்ளடக்கத்துடன் தொடர்புடைய ஊர்களுக்குப் பயணம் செய்து, அந்த மக்களுடன் வாழ்ந்து களப் பணியாற்றி எழுதிய முதல் பெண் எழுத்தாளர் அவர்தான்.

கணவருக்கு மின் வாரியத்தில் வேலை என்பதால் வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்தது. அந்த வாய்ப்பையும், சூழலையும் பயன்படுத்திக்கொண்டு நாவல்களை எழுதினார். நீலகிரியில் வாழும் படுகர்களின் வாழ்வுச் சூழலை விவரித்து எழுதப்பட்ட நாவல் ‘குறிஞ்சித்தேன்’. சம்பல் கொள்ளையரின் போராட்ட வாழ்வையும், அந்த வாழ்வைத் தேர்வு செய்ய நேர்ந்த அவர்களின் நிலவியல் அமைப்பு சார்ந்த சூழலையும் விவரிக்கும் நாவல் ‘முள்ளும் மலர்ந்தது’.

‘சேற்றில் மனிதர்கள்’ மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘வேருக்கு நீர்’ இரண்டு நாவல்களுமே அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை மையப்படுத்திய நாவல்கள்.

ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் அனைத்திலும் சமூக அக்கறையும், பெண்நிலை பார்வையும் இழையோட்டமாக இருக்கும். முதல் நாவலான ‘பெண் குரல்’, கூட்டுக் குடும்ப வாழ்வில் ஒரு பெண் அனுபவிக்கும் மன அழுத்தத்தைப் பதிவு செய்தது. ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ நாவல் பெண் சிசுக் கொலைக்கான காரணங்களை ஆராய்கிறது.

‘காலம்தோறும் பெண்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னணியின் தடங்களைத் தேடிப் பயணித்தார் ராஜம் கிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மற்றொரு தொகுப்பு ‘காலம்தோறும் பெண்மை’. ‘யாதுமாகி நின்றாய்’ தொகுப்பு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களைப் பட்டியலிடுகிறது. இன்று பெண்ணுரிமை முழக்கமிடும் அத்தனை படைப்பாளிகளுக்கும் இவர்தான் முன்னோடி என்றால் அது மிகையில்லை.

நாற்பது புதினங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். தவிர, சிறுகதை தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், குறுநாவல்கள், குழந்தை இலக்கியம், கவிதைகள் என்று அவரது படைப்பு முயற்சி ஐம்பதாண்டுகளைக் கடந்து 2002 வரையிலும் நீடித்தது.

சமூக அக்கறை

வாழ்க்கை வரலாற்று நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். டாக்டர் ரங்காச்சாரி, பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, பாதையில் பதித்த அடிகள் ஆகிய மூன்றும் இந்த வகையைச் சேர்ந்தவை. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியின் சிறப்பம்சம் அதில் இழையோடும் பெண் நிலைப் பார்வை!

சாகித்ய அகாடமி விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது, சாஷ்வதி விருது போன்ற பல விருதுகள் ராஜம் கிருஷ்ணனைத் தேடி வந்துள்ளன. காந்தியக் கொள்கைகளின்பால் மதிப்பும் இடதுசாரிக் கொள்கைகளின்பால் ஈடுபாடும் கொண்டவர் இவர். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் ஜனநாயக மாதர் சங்க மாநாடுகளில் பங்கெடுத்திருக்கிறார்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி இவரைக் கடுமையாகப் பாதித்தது. இவர் சமீபத்தில் எழுதிய நாவல் உத்தரகாண்டம் (2002), இடதுசாரி இயக்கங்களின் தோல்விக்கான காரணங்களை ஆராய முற்படுகிறது. தேர்தல் அரசியலில் சிக்கிக்கொண்டதால் இலக்கை அடைய முடியாமல் போனதாகச் சுட்டிக்காட்டும் இவர், அரசியல் சார்பற்ற ஒரு இயக்கம் குறித்து எழுதியிருக்கிறார்.

கிழக்குத் தாம்பரத்தில் உள்ள வீட்டில் கணவருக்குக் கிடைத்த சொற்ப ஓய்வூதியத்திலும், வர்த்தகம் தவிர்த்த தன் எழுத்துப் பணிக்குக் கிடைத்த தொகையிலும் எளிமையாக வாழ்ந்துவந்தார்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை தொலைபேசி இல்லாமலே கடத்தியவர். எங்கு போவதானாலும் பஸ்ஸிலும், ரயிலிலும்தான் பயணம். ஒரு முறை தூா்தா்ஷன் நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டிருந்தார். “வரும்போது எழுதிய புத்தகங்கள், வாங்கிய விருதுகளைக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டார்கள். அத்தனையும் சுமந்துகொண்டு பஸ்ஸில் வந்திருந்தார்.

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பெண் என்ற வகையில் குடும்ப அமைப்பின் நெருக்கடிகளைச் சமாளித்து அதிலேயே தன் அடையாளத்தை இழந்து போகாமல் ஒரு இலக்கியவாதியாக தன்னை விரிவுபடுத்திக்கொண்டவர் ராஜம் கிருஷ்ணன். மிடுக்கும், கம்பீரமும் கலந்த ஒரு தோற்றம் அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது.

உதாரண மனுஷி

எழுத்துப் பணி ஆட்கொண்டதில் இயல்பு வாழ்க்கையின் பற்றுக்கோல்களை அவர் உருவாக்கிக்கொள்ளவே இல்லை. சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, கள ஆய்வு மேற்கொள்வது, எழுதுவது என்று தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட இவர், பணத்தைக் கையாளத் தெரிந்துகொள்ளவே இல்லை.

கணவர் இறந்த பிறகு வீட்டை விற்றார் ராஜம் கிருஷ்ணன். தூரத்து உறவினர் ஒருவர் அவரிடம் இருந்த மொத்தப் பணத்தையும் அபகரித்துக்கொண்டார். கீழே விழுந்து காலை முறித்துக்கொண்ட அவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் காணாமல் போய்விட்டார். நிராதரவான நிலையில் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். முதியோர் இல்லத்தில் தன் இருப்பை அவரால் ஏற்க முடியவில்லை. ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரைக் கொண்டுபோய் சேர்த்தனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். சேவை உள்ளம் கொண்ட டாக்டர் மல்லிகேசன் வீட்டிலிருந்து உணவு வருகிறது.

எண்பத்தொன்பது வயதாகும் ராஜம் கிருஷ்ணன் மிகவும் தளர்ந்து போயிருக்கிறார். சில மணி நேரங்கள்தான் நாற்காலியில் உட்கார முடிகிறது. அந்த நேரத்தையும் செய்தித்தாளில் கண்களை ஓட்டியபடி செலவிடுகிறார். இந்த அறிவார்ந்த ஆர்வமும், நாட்டு நடப்பு குறித்த அக்கறையும் அவரது தனித்தன்மை. உழைப்பும், தேடலும், படைப்பாற்றலும் அவரை ஒரு உதாரண மனுஷியாக்கியிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x