Last Updated : 24 Jul, 2016 03:02 PM

 

Published : 24 Jul 2016 03:02 PM
Last Updated : 24 Jul 2016 03:02 PM

எப்போது தீரும் மாதவிடாய் தீண்டாமை?

நீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச்சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து ரத்தம் கசிகிறது. எதுவும் அவர்களைத் தடுக்கவில்லை. ரக்பி விளையாடியவருக்கு நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிகிறது. குத்துச்சண்டையிட்டவருக்கு முகத்தில் ரத்தம் பீச்சியடிக்கும்படி குத்து விழ, கீழே தடுமாறி விழுகிறார். நீருக்குள் பாய்ந்தவருக்கு முகம் முழுக்க ரத்தக் காயம். காட்டுக்குள் ஓடும் பெண் இடறி விழுந்து கால் முட்டியிலும் உள்ளங்கையிலும் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தக் காயம். பாலே நடனம் ஆடியவருக்குப் பாத விரல்களில் தோல் கிழிந்து ரத்தம் கசிகிறது. பனிக்காட்டுக்குள் சைக்கிள் ஓட்டியவருக்குத் தொடையில் சதை கிழிந்து ரத்தம் வழிந்தோடுகிறது.

எதுவும் தடையல்ல!

இப்படிப் புறச் சூழலால் உண்டான காயங்களால் ரத்தம் வழிந்தாலும் மாதவிடாய் காரணமாக உடலுக்குள்ளிருந்து ரத்தம் கசிந்தாலும் அத்தனை பெண்களும் மீண்டும் எழுகிறார்கள். தன்னைத் தானே உந்தித்தள்ளித் தடைபட்ட பயணத்தை மீண்டும் தொடர்கிறார்கள். ‘நோ பிளட் ஷுட் ஹோல்ட் அஸ் பேக்’ (‘No blood should hold us back’), ‘டோன்ட் லெட் யுவர் பீரியட் ஸ்டாப் யூ’ (’Don’t let your period stop you’) என்கிற வாசகங்களுடன் கம்பீரமாக நிறைவுபெறுகிறது சானிட்டரி பேடுக்கான ஒரு விளம்பரப் படம்.

பெண் தன்னுடைய கனவை, வேட்கையை, இலக்கை நோக்கித் துணிந்து வீறுநடை போட ஒருபோதும் மாதவிடாய் தடையாய் இருந்துவிட அனுமதிக்கக் கூடாது. பெண்ணின் உடலிலிருந்து வழிந்தோடும் எந்த ரத்தமும் அவளை எந்த வித்திலும் பலவீனப்படுத்தாது என அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்த விளம்பரப் படம். பிரிட்டனில் தயாரிக்கப்படும் ‘பாடிஃபார்ம்’ என்கிற சானிட்டரி பேட் நிறுவனம் முன்னெடுத்திருக்கும் Red.Fit என்னும் முயற்சி இது.

தீட்டு என்னும் கற்பிதம்

பெண்ணுக்கே உரித்தான இயற்கை உபாதைகளில் ஒன்றான மாதவிடாய் அவளுடைய பலவீனமாகக் காலங்காலமாகப் புனையப்பட்டுவருகிறது. தீட்டு என்ற பெயரில் மாதந்தோறும் ஒருவிதத் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் பெண்கள். கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்படுவது தொடங்கி அவரவர் வீட்டுக்குள்ளேயே ஒதுக்கிவைக்கும் சமூகம்தான் நம்முடையது. வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரமாகத் தனிப் பாய், தனிப் பாத்திரங்கள் கொடுத்து அருவருப்பானவர்களாக நடத்தப்படுவதும், வீட்டுக்கு வெளியே இருட்டு அறையில் சாக்குப் பையில் உட்காரவைத்து மாதவிடாய் முடியும்வரை சாப்பாடு, தண்ணீர்கூட யாராவது கொண்டுவந்து கொடுத்துத் தனிமைப்படுத்துவதும் இன்றும் நடக்கத்தான் செய்கிறது.

இதெல்லாம் கிராமப்புறச் சூழலில்தானே நடக்கிறது, நகர்ப்புறங்களில் வாழும் பெண்கள் மாதவிடாயின்போது தனித்து விடப்படுவதில்லையே எனக் கேட்கலாம். வீட்டுக்குள் ஒதுக்கிவைப்பது நகரங்களில் குறைவு என்றாலும் உளவியல்ரீதியாக இதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். நகரத்துப் பெண்களுக்கு ஓய்வெடுக்கும் சலுகையும் மறுக்கப்பட்டுவிட்டது.

வீட்டு வேலையையும் அலுவலக வேலையையும் இழுத்துப்போட்டுச் செய்தாலும் இன்றும் நகர்ப்புறப் பெண்கள்கூட மாதவிடாயின்போது கோயிலுக்குள் நுழையத் துணிவதில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்ணுக்கு இழைக்கப்படும் இத்தகைய கொடுமைகளை முற்போக்குச் சிந்தனையாளர்கள் பலரும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கினாலும் இன்றுவரை மாதவிடாய் தீண்டாமை தீரவில்லை.

மாதவிடாய் ரத்தம் தூய்மையானது என நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி ரத்தமும், எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோயைத் தீர்க்கும் அருமருந்து. அவற்றைப் போலவே மாதவிடாய் ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லும் உயிர்காக்கும் சக்தி கொண்டது என்ற மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்ன சொன்னாலும் மாதவிடாயின்போது பெண்ணே தன் உடலை வேண்டாவெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத்துக்குள்தான் இன்றும் சிக்கிக் கிடக்கிறார்கள். இதிலிருந்து விடுபட, ‘எந்த ரத்தமும் நம் வேகத்துக்குத் தடைபோட அனுமதிக்கக் கூடாது’ என நமக்கு நாமே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x