Published : 22 Sep 2013 07:14 PM
Last Updated : 22 Sep 2013 07:14 PM

என் மக்களுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணும்! - மருத்துவம் படிக்கும் முதல் காணி பெண்

“நீ எந்துருக்கு மற்றவரை கண்டுகொண்டு இருக்கனது? நீ படிச்சு ஒரு மருத்துவராகி நம்மள சமுதாயத்துக்கு சேவை செய்யணுன்னு அப்பா சொன்னது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. அதுதான் இன்னைக்கு என்னைய மெடிக்கல் காலேஜ் வரை கொண்டாந்து நிறுத்திருக்கு.”

அரசுகள் என்னதான் திட்டங்களைப் போட்டாலும் இன்னமும் சிலருக்கு கல்வி என்பது வாழ்வியல் போராட்டமாகவே இருக்கிறது. குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் காணிக்காரர்களுக்கும் அப்படித்தான்! அவர்கள் மத்தியில் சுடர் விடும் நம்பிக்கையாய் உருவாகியிருக்கிறார் இவாஞ்சலின் ரேஷ்மா!

குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணிக்காரன் எனப்படும் ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். நாகரிகத்தின் சாயல் இல்லாததால் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் இவர்கள் பலநூறு மைல் பின்தங்கிக் கிடக்கிறார்கள். அந்தச் சூழலில் பிறந்து வளர்ந்து, முதன்முதலாக மருத்துவப் படிப்பில் கால்பதித்திருக்கிறார் இவாஞ்சலின் ரேஷ்மா!

சுரேஷ் சுவாமியார் காணி - உமா மகேஸ்வரி தம்பதியின் மூத்த மகள் இவாஞ்சலின். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.. மாவட்ட கலெக்டர் தன்னை வீட்டுக்கே அழைத்துப் பாராட்டியது.. என ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கிறார் இவாஞ்சலின்.

“சின்ன வயசுல முழுக்க முழுக்க எங்க காணி குடியிருப்புலதான் இருந்தேன். பிரசவ வலியில துடிக்குற பெண்களை தோள்ல தூக்கிப் போட்டுக்கிட்டு சமவெளிப் பகுதியில உள்ள ஆஸ்பத்திரிக்கு எங்க சனம் ஓடுறத பதைப்பதைக்கப் பாத்துருக்கேன். காணி மக்கள் வசிக்கிற பகுதியை கிராமம்னுகூட சொல்ல மாட்டாங்க. காணிகுடின்னுதான் சொல்லுவாங்க. நாங்க கூவைகாடு மலை குடியிருப்புல இருந்தோம். நாகர்கோவில்ல இருந்து வாழையத்துவயல்ங்குற ஊரு வரைக்கும் பஸ்ல போகணும். அங்கருந்து ஒரு மணி நேரம் நடந்தா கூவைகாடு மலை. அங்கேயிருந்து தடிக்காரம் கோணத்தில நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருந்துச்சு. படிக்குற நேரத்தைவிட நடக்குற நேரம் அதிகம் இருந்ததால, படிப்புக்காக எங்க மக்கள பிரிஞ்சு, தடிக்காரம் கோணத்துல வந்து குடியேறுனோம்.

வாரக் கடைசியில அப்பாவோட சேர்ந்து கூவைகாடு மலைக்கு போயிடுவேன். அங்கே மண்ணோடும், மக்களோடும் நல்லா சுத்துவேன். அப்பெல்லாம் முகத்தளவுல சிரிச்சாலும் மனசுக்குள்ள பல தடவை அழுதுருக்கேன். 'நமக்குன்னு இங்கே ஒரு ஆஸ்பத்திரிகூட இல்லையேப்பா'ன்னு அடிக்கடி அப்பாக்கிட்ட சொல்லி புலம்பிருக்கேன். அப்பெல்லாம், 'நீ எந்துருக்கு மற்றவரை கண்டுகொண்டு இருக்கனது? நீ படிச்சு ஒரு மருத்துவராகி நம்மள சமுதாயத்துக்கு சேவை செய்யணு'ன்னு அப்பா சொன்னது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. அதுதான் இன்னைக்கு என்னைய மெடிக்கல் காலேஜ் வரை கொண்டாந்து நிறுத்திருக்கு”

இவாஞ்சலின் கண்களில் இப்போதே டாக்டராகிவிட்ட திருப்தி.

“எங்க ஊருக்கு போற பாதையில ரெண்டு பக்கமும் அடர்ந்த தேக்குமரக் காடா இருக்கும். ரேஷன் பொருள் வாங்குறதுன்னாக்கூட கீரிப்பாறைக்கு போகணும். எங்க காணி கிராமத்துக்கு பக்கத்துல இருக்க வாழையத்துவயல்ல அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி இருக்கு. அந்தப் பள்ளிக்கூடத்தோட எங்க மக்கள் படிப்புக்கு பை சொல்லிருவாங்க. காலேஜுக்கு எல்லாம் போகமாட்டாங்க. அதை எல்லாம் உடைக்கணும்னு நெனச்சு நல்லா படிச்சேன். ப்ளஸ் 2ல 1002 மார்க். மருத்துவம் படிக்கணும்னு தீர்மானிச்சதுமே பல்மருத்துவம்தான் பெட்டர்னு நெனச்சேன்.

காணி கிராமங்கள்ல தொற்று நோய்கள் அதிகம். உடலை, வாயை சுத்தமாக வைச் சிருந்தாலே தொற்று நோயிலிருந்து தப்பிச்சுடலாம். நான் பல்மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததுக்கு இதுவும் ஒரு காரணம். படிப்பு முடிச்ச கையோட எங்க காணி குடியிருப்புல எங்க மக்களுக்காக சின்னதா ஒரு ஆஸ்பத்திரி கட்டணும். அங்கே என் மக்களுக்கு இலவசமா வைத்தியம் பாக்கணும். உலகம் போற வேகத்துக்கு காணி மக்களையும் ஓட வைக்கணும் இதுதான் என் பிளான்.

நகர்ப்புறத்துல இருக்குற ஸ்டூடன்ட்ஸ் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியா டியூஷன் போவாங்க. எங்க காணி குடியிருப்புல அதுக்கெல்லாம் யாரு இருக்கா? ஆனாலும் ,புள்ளைங்க ஓரளவுக்கு படிச்சு மீடியமான மார்க் எடுத்துடுறாங்க. போதிய விழிப்புணர்வு இல்லாததால அதுக்கு மேல படிக்காம விவசாயம் பாக்கப் போயிடுறாங்க. இந்த குறையை போக்குறதுக்கு அரசாங்கம் ஒரு குழு போட்டு கண்காணிக்கணும்

எஸ்.டி பிரிவினருக்கு மூன்றாம்கட்ட கவுன்சலிங்குலதான் இடம் ஒதுக்குவாங்க. அதனால சென்னையில் பல் மருத்துவக் கல்லூரியில் நான் லேட் அட்மிஷன். 'ஏன் இவ்வளவு லேட்டா வந்து சேர்ந்தீங்க?'ன்னு சக மாணவர்கள் கேட்டப்ப, “நான் பழங் குடியில் காணி இனத்தைச் சேர்ந்த பெண்”ன்னு கம்பீரமா சொன்னேன். நான் இந்த இனம்னு சொல்றதை அவமானமாக நினைக்கல. எனக்கான அடையாளமாகத்தான் பார்க்கிறேன்”

தீர்க்கமாகச் சொன்னார் இவாஞ்சலின்.

சாதிக்கத் துடிக்கும் இந்தக் காணிப் பெண்ணின் கனவுகளும் கற்பனைகளும் கூடிய சீக்கிரம் கைகூடி வரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x