Published : 27 Nov 2014 02:55 PM
Last Updated : 27 Nov 2014 02:55 PM

வார ராசிபலன் 27-11-2014 முதல் 03-12-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-ல் புதனோடு கூடியிருப்பதும், குருவால் பார்க்கப்படுவதும் சிறப்பாகும். கேது 6-ல் உலவுவதும் அனுகூலமாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். தந்தையால் நலம் உண்டாகும். கலைஞர்களது நிலை உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். 2-ல் சூரியனும் 4-ல் செவ்வாயும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும்.

ஆன்மிகவாதிகளுக்கும் அறநிலையப்பணியாளர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் மதிப்பு உயரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும். 3-ம் தேதி முதல் குரு 11-மிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். மக்கள் நலம் சீராகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 27, 28, டிசம்பர் 1.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.



விருச்சிகம்

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 9-ல் ,குருவும் 11-ல் ராகுவும் உலவுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். விளையாட்டு, விநோதங்களிலும், போட்டி பந்தயங்களிலும்; வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். நிலபுலங்கள் சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.

உடன்பிறந்தவர்களால் நலம் கூடும். புதியவர்களது தொடர்பு ஆக்கம் தரும். பயணத்தால் முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். 3-ம் தேதி முதல் குரு 10-மிடம் மாறுவதால் மக்கள் நலம் பாதிக்கும். தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் தலைதூக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு..

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், இளநீலம், சிவப்பு.. .

எண்கள்: 3, 4, 6, 9.

பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும். அன்னதானம் செய்வது நல்லது.



தனுசு

உங்கள் ராசிக்கு 10-ல் ராகு 11-ல் சனி 12-ல் சுக்கிரன் ஆகியோர் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் ஓரளவு வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஓரளவு பயன்படும். சமுதாய நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள் லாபம் தரும். தொழிலில் இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். அரசாங்கத்தாராலும் தந்தையாலும் பிரச்னைகள் சூழும். வாரப்பின்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். புதன் 12-ல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். 3-ம் தேதி முதல் குரு 9-மிடம் மாறுவதால் பொருளாதாரப் பிரச்சினை குறையத் தொடங்கும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். முயற்சி வீண்போகாது. மக்கள் நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு, .

நிறங்கள்: கருநீலம், கறுப்பு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 4, 6, 8.

பரிகாரம்: குரு, கேது, சூரியன், புதன் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.



மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 10-ல் சனியும் 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும்.புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 3-ஆம் தேதி முதல் குரு 8-ஆமிடம் மாறுவதால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பிறரது அதிருப்திக்கு ஆளாக நேரலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1, 2.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 8..

பரிகாரம்: செவ்வாய்க்குப் பிரீதியாக முருகனை வழிபடவும்.



கும்பம்

உங்கள் ராசிக்கு 10-ஆமிடத்தில் சூரியன், புதன் ஆகியோர் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது நிறைவேறும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் ஏற்படும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அக்கம்பக்கத்தாரால் பிரச்னைகள் சூழும்.

பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண்வம்பு, வழக்குகளில்பிரவேசிக்கலாகாது. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம். 3-ம் தேதி முதல் குரு 7-மிடம் மாறுவதால் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். வாழ்க்கைத்துணைவரால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 2.

திசைகள்: கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, பச்சை, ஆரஜ்சு.

எண்கள்: 1, 5, 6, 8 .

பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் சுப்பிரமணியரையும் வழிபடுவது நல்லது.



மீனம்

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 9-ல் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் பல உண்டாகும். பண வரவு அதிகமாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கொடுக்கல்-வாங்கல் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களது நிலை உயரும். வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. வாரப் பின்பகுதியில் ஆன்மிக, அறநிலையப்பணிகளில் நாட்டம் உண்டாகும். 3-ம் தேதி முதல் குரு 6-மிடம் மாறுவது சிறப்பாகாது. மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறை உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் செவ்வாய் வலுத்திருப்பதால் சமாளிப்பீர்கள். வேலைப்பளு அதிகரிக்கவே செய்யும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 27, 28 (பகல்), டிசம்பர் 1, 2.

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 9.

பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x