Last Updated : 22 Jun, 2017 10:00 AM

 

Published : 22 Jun 2017 10:00 AM
Last Updated : 22 Jun 2017 10:00 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 34: தோன்றாப் பெருமையன் இறைவன்

முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் காணும் நுட்பம் - மணிவாசகப்பெருமான் நமக்குத் தந்த பெருங்கொடைகளுள் ஒன்று! இதைப் பாடும் திருவாசகங்கள், தமிழர்களின் தத்துவ மரபின் செறிவை உலகுக்குப் பறைசாற்றும் சான்றாவணங்கள்!

ஒளியும் இருளும் இறைவனே!

நாமறிந்த ஒளியும் இருளும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை; ஒளி தோன்றினால் இருள் விலகும்; ஒளி மறைந்தால் இருள் சூழும். ஆனால்,

“சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே!” என, இறைவனே ஒளிமயமாகவும், செறிந்த இருளாகவும் இருக்கிறான் என்கின்றார் மணிவாசகர்.

இப்பிரபஞ்சத்தில் காணப்படும் சூரியன், சந்திரன் உள்ளிட்ட, சுடர்வீசி ஒளிரும் பொருளனைத்தும் இறைவன் எனும் திருவுருவின் விளக்கமே. அக இருளை (ஆணவம்) நீக்கும் அறிவொளியான இறைவனை ‘சோதியனே’என்றழைப்பது பொருத்தமே. ஆனால், ‘துன்னிருளே’என்றழைப்பது ஏன் என்று நாம் திகைக்கிறோம்; மணிவாசகர் நம்மைத் தேற்றுகிறார்.

உயிரைப் பிடித்த அறியாமை என்னும் ஆணவ இருள் நீங்கவே, மாயையை இயக்கி, உடல்பிறவிகள் தந்தான் இறைவன்; பல்வேறு பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகளால் தொடர்ந்து பிறவிகள் வருகின்றன.

மறைத்து அருளும் இறைவன்

மனிதன் செய்த முன்வினைகளிலிருந்து ஒரு பகுதியை அனுபவித்துத் தீர்க்க ‘விதி’க்கப்பட்டு, பிறவிக்கு வருகிறான். இவ்விதியையும், இன்னும் பலப்பல பிறவிகளுக்காகக் காத்திருக்கும் மீதமுள்ள பழைய வினைகளையும், மனிதன் அறிந்தால், அவனால் கவலையின்றிச் சுதந்திரமாக இப்பிறவியில் வேலை செய்ய முடியாது. எனவே, இவற்றை மனிதனிடமிருந்து மறைத்து அருளுகிறான் இறைவன். இறைவனின் இச்சக்தி ‘மறைப்பாற்றல் (திரோதானம்)’ எனப்படும். ‘மறைத்தல்’ இறைவனின் ஐந்தொழிலில் ஒன்று.

எங்கெல்லாம் அறிவொளி இல்லையோ, அங்கெல்லாம், அறியாமை இருள் சூழ்கிறது. மனிதனின் அறிவை மறைக்கும், அக இருளாம் ஆணவத்தால், இறைவனை மறைக்க முடியாது; ஏனெனில், இறைவன் எங்குமிருப்பவன்; ஆணவத்துக்குள்ளும் இருப்பவன்.

மனிதனின் அறியாமை இருளைப் போக்க, ஒளிமயமான (சோதியனான) இறைவனே, துன்னிருளாகி (இருளுக்கும் இருளாகி), தன்னுடன் வாழ்வதை மனிதன் அறிவதில்லை; கருணையுடன் துன்பத்தில் பங்கெடுத்து, மனிதனுடன் வாழ்கிறான் இறைவன். எனவேதான் “சோதியனே! துன்னிருளே!” என்கிறார் பெருமான்.

இருளும் அறிய முடியாத நுட்பமான இருளாக மறைந்திருப்பதால், இறைவனை ‘துன்னிருளே’ என்றார் மணிவாசகர். வெளிப்பார்வைக்கு முரண்பாடாகத் தோன்றுவதே, உற்றுநோக்கினால் முழுமையாகத் தெரியும். சரிதானே?

முரண்பாடுகளில் முழுமை கண்ட ஞானக்குழந்தை

மதுரை சொக்கநாதப்பெருமானைப் பாடும், முரண்பாடுகளில் முழுமை தரிசித்த திருஞானசம்பந்தரின் பாடல் இது.

குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!

சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!

கற்றநூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை

முற்றும் நீ! புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே! (திருமறை:3:52:3)

‘அனைவரும் செய்கின்ற குற்றங்களாகவும், நல்ல குணமாகவும் இருப்பது நீயே! எம் அன்புத்தலைவனும், தொடர்ந்து ஒளிரும் ஜோதியும் நீயே! படித்த நூல்களும், நூல்தரும் கருத்துகள், பொருள், இன்பம் அனைத்தும் நீயே! முன்னிருந்து இப்படிப் பலவாறாகப் புகழ்ந்துரைக்கப்படும் எங்கள் இறைவனே! சர்வமும் நீயே!’ என்றார் ஞானக்குழந்தை சம்பந்தர்.

முரண்பாடுகளில் முழுமை காணும் பாடலாசிரியர் வைரமுத்துவின் ஓர் அற்புதமான தாய்மைக் கவிதை இங்கு குறிப்பிடத்தகுந்தது (திரைப்படம்: ‘கன்னத்தில் முத்தமிட்டால்’). ‘சோதியனே! துன்னிருளே!’ என்னும் இவ்வான்கலந்த மாணிக்கவாசகம் கவிப்பேரரசின் சிந்தையிலும் கலந்து வைரவரிகளாக மாறியது. தாய்மை உணர்வின் நிபந்தனையற்ற எல்லை கடந்த அன்பு, முரண்பாடுகளை வென்று முழுமையடைந்து, மானுடமும் முழுமை இறைமையும் சங்கமிக்கும் காவியத்தை, கவிப்பேரரசின் சொல்லோவியத்தில் காணுங்கள்.

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

...

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

மரணம் ஈன்ற ஜனனம் நீ! . . .

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!

இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!. . . என்கிறார் வைரமுத்து.

நமக்கெல்லாம் தாயாகிய இறைவன், நம் ஒவ்வொருவரின் பின்னும் புறம் புறம் திரிந்து, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, அன்பைப் பொழிகிறான். நாமோ, அவனுக்குப் பகையாகவும், முள்ளாகவும், இடியாகவும், எழுத்துப்பிழையாகவும் மாறித் துன்பம் தருகிறோம். தாயான இறைவன், நம் பிழைகளை மன்னித்து, நம் குற்றங்களைக் குணமாகக் கொண்டு, அருள்கிறான். முரண்பாடுகளில் முழுமையைக் காணும் இக்கவிதையில், இறைமையும் மானுடமும் சங்கமிக்கின்றன.

மெய்ம்மையும்! பொய்ம்மையும்!

பொற்சுண்ணம் இருபதாவது பாடலில், முரண்பாடுகளை இறைவனின் வடிவமாகப் போற்றிப் பாடுகிறார் மணிவாசகர். “வேதமும் வேள்வியும் ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப்பொருளும் ஆனவரும், ஒளியும் இருளும் ஆனவரும், துன்பமும் இன்பமும் ஆனவரும், பாதியும் முழுதும் ஆனவரும், உயிர்களுக்குப் பந்தமுமாகவும் வீடுபேறாகவும் ஆனவரும், அனைத்துலகுக்கும் முதலும் முடிவும் ஆனவருமான இறைவனை நீராட்டுவதற்குப் பொன்போலும் வாசனைப்பொடியை நாம் இடிப்போம்” என்கிறார் பெருமான்.

வேதமும்! வேள்வியும்! ஆயினார்க்கு! மெய்ம்மையும்! பொய்ம்மையும்! ஆயினார்க்குச்

சோதியுமாய்! இருள்! ஆயினார்க்குத் துன்பமுமாய்! இன்பம்! ஆயினார்க்குப்

பாதியுமாய்! முற்றும்! ஆயினார்க்குப் பந்தமுமாய்! வீடும்! ஆயினாருக்கு!

ஆதியும்! அந்தமும்! ஆயினாருக்கு! ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே! (திருவாசகம்: பொற்சுண்ணம்.20)

முரண்பாடுகளில் முழுமையான இறைவனைக் காட்டும் மேற்கண்ட திருவாசகத்தை இப்போது மீள் வாசிப்பு செய்யலாம். ‘வேதமும்’என்பதற்கு வேதமுடிவு உணர்த்தும் ஞானமும் என்றும், ‘வேள்வியும்’என்பதற்கு வினைகளைப் பெருக்கும் கருமகாண்ட வேள்விகள் என்றும் பொருள். கருமம் செய்வதால் உண்டாகும் வினைப்பயன்களைத் துய்த்த பிறகு, வேதமுடிவு உணர்த்தும் ஞானமாக இறைவனை உயிர்கள் உணர்கின்றன.

‘மெய்ம்மை’ என்னும் நிலைத்த பொருளான இறைவனே, ‘பொய்ம்மை’ என்னும் நிலையாத பொருளுக்கு உள்ளும் இருக்கிறான்; உடலில் உயிர்போல, நிலையாப்பொருள் உள்ளிட்ட எல்லாப் பொருட்களிலும் நீக்கமறக் கலந்து நிற்பதால், இறைவனே நிலையாப்பொருளும் ஆகிறான்.

சோதி (ஞானம்), இறைவனது இயற்கை தன்மை; இருள் என்னும் அஞ்ஞானத்திலும் (ஆணவம்), மறைப்பாற்றலாய் நிற்பதால், இறைவனே இருளும் ஆகிறான். இயல்பில் பேரின்ப வடிவானவன் இறைவன்; இறைவன் செய்யும் மறைத்தல் தொழிலால் பிறவித் துன்பம் வருவதால், இறைவன் துன்பமாகிறான்.

புறநானூறு காட்டும் இறைவனின் தொன்மைக்கோலம்!

ஒரு பாதியில் இறைவனும், மறுபாதியில் அம்மையுமாய், அம்மையப்பன்வடிவில் நிற்கும் நிலையையும், இரண்டும் ஒன்றுபட்டு, முழுமையான சிவப்பரம்பொருளாகும் நிலையையும் பாடுகிறார் மணிவாசகர். இதே கருத்தை, புறநானூறு இறைவாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார்

“பெண்உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” (புறநானூறு: இறைவாழ்த்து)

என்று பதிவு செய்துள்ளார். ஒருபாதி எம்பிராட்டியும் மறு பாதி எம்பெருமானுமாக, ஒரே வேளையில், ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்கும் அம்மையப்பன் திருக்கோலம் மிகத் தொன்மையானது. சக்தியைத் தமக்குள்ளாக்கிச் சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு நிற்கும் கோலத்தில், சிவம் மட்டுமே தோன்றும்.

சிவத்தில் தோன்றும்! அடங்கும் சிவத்துள்!

தோற்றுவிக்கும் முறையில், சிவத்திலிருந்து சக்தியும், சக்தியிடத்திலிருந்து மற்ற தத்துவங்களெல்லாம் தோன்றும். ஒடுங்கும் முறையில், தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்று அடங்க, இறுதியில் யாவும் சக்தியுள் அடங்கி, அப்பால் அச்சக்தியும் சிவத்துள் அடங்கும், ‘ஒடுங்கும்முறை’யை இப்புறநானூறு இரண்டாவது வரி சொல்கிறது.

ஆணவ மலத்தின் கட்டிலிருந்து உயிரை விடுவிக்க, தனது மறைப்புச் சக்தியால் உடல்பிறவிப் பந்தத்துள் உயிர்களைச் செலுத்தி, உயிரின் அறிவைத் தொழிற்படுத்தும் இறைவனே, பேரின்பப் பிறவா நிலையான வீடுபேறும் ஆவான். அத்தகைய இறைவனிடம் நாம் எப்பொருட்களைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதைக் கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு: krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x