Published : 26 May 2016 12:45 PM
Last Updated : 26 May 2016 12:45 PM

நியூஜெர்சியில் காஞ்சிப் பெரியவர்

அமெரிக்காவில் காஞ்சி மடத்தின் பக்தர்கள் ஒன்று கூடிக் கடந்த இருபதாண்டுகளாகக் காஞ்சி சங்கராச்சார்யார்களின் ஜெயந்தி விழாவை முக்கியமான நகரங்களில் நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் மஹாபெரியவர் மணிமண்டபம் வந்த பிறகு, அமெரிக்காவிலும் காஞ்சி மஹாபெரியவருக்கு ஒரு மணி மண்டபம் சிறிய அளவிலாவது அமைக்க வேண்டும் என்ற கனவு கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இருந்து வந்தது. ஒரு வருடத்துக்கு முன்பு அது செயலாகத் தொடங்கியது.

செயலின் முதல் கட்டமாகச் சில பக்தர்கள் பஞ்சமி திதி, அனுஷ நக்ஷத்திரம் கூடிய நாளன்று, காஞ்சிபுரம் மஹாபெரியவரின் அதிஷ்டானம் சென்று தங்கள் எண்ணம் நிறைவேற சங்கல்பம் செய்துகொண்டனர்.

இந்த சங்கல்பம் செய்துகொண்ட நாளன்று (புதன் கிழமை) ஆயுஷ்மான் யோகமும், பவ கரணமும் கூடியிருந்தது பின்னர்தான் தெரிய வந்தது. இந்து சமய சாஸ்திரத்தில் “ஆயுஷ்மான் பவ சௌம்ய” என்ற ஒரு ஆசீர்வாதச் சொற்றொடர் உண்டு. மேலும் சாஸ்திரத்தின்படி இந்த யோகம், கரணம், வாரம் கலந்த நாள் அமைவது மிகவும் அரிது என்றும், அந்த சமயத்தில் எடுக்கப்படும் சங்கல்பத்திற்க்கு தெய்வீக ஆசி ஏராளம் என்றும் கூறப்படுகிறது.

இதுவே அமெரிக்காவில் மணி மண்டபம் அமைக்க மஹாபெரியவர் கொடுத்த ஒப்புதல். இதனைத் தொடர்ந்து பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீமுகமும், பாதுகைகளும் கொடுத்து இக்காரியம் நிறைவேற ஆசீர்வதித்தார். பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (ஸ்ரீ பால பெரியவர்) இதையொட்டி ஒரு அனுகிரஹ மொழி செய்து ஆசீர்வதித்தார்.

கடந்த ஒரு வருடத்தில், பக்தர்கள் “சனாதன தர்மா பௌண்டேஷன்” என்ற அறக்கட்டளையை நிறுவி அமெரிக்காவில் உள்ள நியுஜெர்சி மாகாணத்தில் மணி மண்டபம் வருவதற்கான வேலையில் இறங்கி விட்டனர். அக்டோபர் 2015-ல் நிஜெர்சியில் உள்ள ப்ளெமிங்டன் (Flemington) என்ற சிறிய நகரில் பத்து ஏக்கர் பரப்பளவில் ஒரு நிலத்தை வாங்கித் தேவையான அரசாங்க ஒப்புதல்களைப் பெறும் செயல்முறைகள் நடந்துவருகின்றன.

ஏழு வருடங்களுக்கு முன் ஒரிக்கை மணிமண்டபதிற்காக வடிவமைக்கபட்டு அங்கு வாசம் செய்துகொண்டிருந்த மஹாபெரியவர் “உத்சவ மூர்த்தி” நியுஜெர்சி மஹாபெரியவர் மணிமண்டபதிற்கு “மூலவர்” ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் “ஒரிக்கை உற்சவர்” “நியுஜெர்சி மூலவர்” ஆனார்.

ஒரிக்கை மணிமண்டபத்தின் அறங்காவலர்கள் மனதார அனுப்பிய மூலவர் ஒரு வியாழக்கிழமை அன்று நியுஜெர்சி வந்தடைந்தது. மூலவர் நியுஜெர்சி வந்த அந்த நாளில், நூறு வருடங்களுக்கு முன் மஹாபெரியவரின் பீடாரோஹன பட்டாபிஷேகமும், கனகாபிஷேகமும் நடந்தது. கடல் கடந்து வாழும் பக்தர்களுக்கு வழிகாட்டும் மகானாக நியூஜெர்சியில் பெரியவர் குடியிருப்பது பக்தர்களுக்கெல்லாம் மனோபலம் தருவதாக உள்ளது.

மஹாபெரியவர் புராணம் இணையதளம்

சனாதன தர்ம பௌண்டேஷன் சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமையன்று (May 22 2016) மகாபெரியவர் 123-வது ஜெயந்தி, நியுஜெர்சி மார்கன்வில் ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்றது. கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், பாதுகா அபிஷேகம். சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, த்ரிசதி அர்ச்சனை என வெகு விமரிசையாக, சம்பிரதாயமாக ஜெயந்தி விழா நடந்தேறியது.

மேலும், திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி, குரு நாமசங்கீர்த்தனம், 108 குழந்தைகள் செய்த மகாபெரியவர் அஷ்டோத்தர அர்ச்சனை, மகாபெரியவர் வீதி ஊர்வலம் என மஹாபெரியவர் ஜெயந்தி சிறப்பாக நடந்தது. சனாதன தர்மா பௌண்டேஷன் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், நியுஜெர்சி மகாபெரியவர் 123-வது ஜெயந்தி மஹோத்ஸவத்தின் புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் கண்டு மகிழ http://mahaperiyavapuranam.org/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x