Published : 22 Jun 2017 09:59 AM
Last Updated : 22 Jun 2017 09:59 AM

சிற்பிக்குக் காட்சி கொடுத்த அம்மன்

குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயில்

இறைவனும் இறைவியும் தங்கள் உருவத்தைச் சிற்பிக்கு அடையாளம் காட்ட, அதை அப்படியே சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்த ஆலயம் முத்தாரம்மன் கோயிலாகும்.

திருச்செந்தூர் - கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் 12-வது கிலோ மீட்டரில் இருக்கிறது குலசேகரன் பட்டினம். பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரப் பாண்டியனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருளாசி செய்த இந்த இடம் பிற்காலத்தில் அந்த மன்னன் பெயராலேயே குலசேகரன் பட்டினம் என்று மாறியது.

கனவில் வந்த அம்மன்

இங்குள்ள முத்தாரம்மன் கோயில் கருவறையில் இப்போது வழிபாட்டில் இருக்கும் முத்தாரம்மனின் திருவடியில், சுயம்புவாய்த் தோன்றிய சிறிய அம்மன், சுவாமி சிலைகளைக் காணலாம். இது மிகவும் சிறிய அளவில் இருந்ததால் இதைப் பெரிய சிலையாக வடிப்பது எப்படியென்று பக்தர்கள் குழம்பினர். அப்போது ஒருநாள், கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், ‘மகனே... எங்களது உருவத்தைப் பெரிதாக வடிக்கத் தெரிந்த சிற்பி மைலாடியில் இருக்கிறான். அவனைப் போய் பார் ’ என்று சொல்லி மறைந்தாள்.

அதே இரவில், குமரி மாவட்டம் மைலாடியைச் சேர்ந்த சுப்பையா சிற்பியின் கனவில் ஞானமூர்த்தி சுவாமியுடன் காட்சி கொடுத்த முத்தாரம்மன், ‘மகனே.. எங்களின் தோற்றத்தை உற்று நோக்கு. எங்களின் இந்த வடிவத்தை ஒரே கல்லில், ஒரே பீடத்தில் வடித்துக் கொடு. சிலையைப் பெற்றுச் செல்ல குலசேகரன் பட்டினத்திலிருந்து பக்தர்கள் வருவார்கள்’ என்று சொல்லி மறைந்தாள்.

ஒரே பீடத்தில் அம்மன் - சுவாமி

அம்மனே காட்சி கொடுத்து, தனது வடிவத்தைச் சிலையாக வடித்துக் கொடுக்கச் சொன்னதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய சுப்பையா சிற்பி, பொழுது விடிந்ததுமே சிலையை வடிக்கத் தொடங்கினார். கனவில் கண்ட காட்சியைக் கண்முன்னே நிறுத்தி முத்தாரம்மன் - ஞானமூர்த்தி சுவாமி சிலைகளை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தத்ரூபமாய் வடித்து முடித்தார் சிற்பி.

அதேசமயம், அம்மன் கொடுத்த வாக்குப்படி குலசை பக்தர்களை அழைத்துக்கொண்டு மைலாடி வந்து சேர்ந்த முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர், சிற்பியின் வீட்டில் ஞானமூர்த்தீஸ்வரருடன் சேர்ந்த முத்தாரம்மன் சிலை தயாராய் இருந்தது கண்டு வியந்தார். ஊர்மக்களும் மெய்சிலிர்த்துப்போனார்கள். அங்கிருந்து மேளதாளம் முழங்க சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்தாரம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பினார்கள் குலசை மக்கள். அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைதான் தற்போது கோயில் கருவறையில் பிரதான வழிபாட்டில் உள்ளது.

தசரா கோலாகலம்

இத்திருத்தலத்தில் வெள்ளிதோறும் அம்மனுக்கு ராகு கால பூஜை பெண்களால் நடத்தப்படுகிறது. தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் அம்மன் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். அதேபோல், பௌர்ணமி திருவிளக்கு பூஜையும் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது. புரட்டாசியில் நடக்கும் நவராத்திரி தசரா விழாதான் முத்தாரம்மனுக்கு நடக்கும் திருவிழாக்கள் அனைத்துக்கும் முதன்மையானது.

தூத்துக்குடி மாவட்டமே இந்தத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இதற்காக வேண்டுதல் வைத்து 41 நாள்கள் விரதம் இருக்கும் பக்தர்கள், தங்களது உருவங்களை மாற்றி வேடமணிந்து கொண்டு பொதுமக்களிடம் காணிக்கை பெற்று தசரா நாளில் முத்தாரம்மன் வாசலுக்கு வந்து நேர்ச்சை செலுத்துகிறார்கள். அன்று இரவு கடற்கரை மணலில் பக்தர்கள் சூழ்ந்திருக்க முத்தாரம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

குலசேகரன் பட்டினத்தில் எட்டுத்திக்கும் அஷ்ட காளிகளின் ஆட்சி நடக்கிறது. இவர்களில் முதன்மையானவள் முத்தாரம்மன். தொடர்ந்து முத்தாரம்மனைத் தரிசித்து வந்தால் தரித்திரங்கள் விலகி, நற்பலன்களை அடையலாம் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x