Published : 30 Oct 2014 11:30 AM
Last Updated : 30 Oct 2014 11:30 AM

சரிதம் கேட்ட பலன்

ஒரு புண்ய சரித்திரம் கேட்டால் இன்னின்ன பலன் என்று முடிவில் ‘பல ச்ருதி' சொல்வார்கள். ஆசார்ய சரிதம் கேட்டதன் பலன் நமக்கே நன்றாகத் தெரியும். எப்பவும் ஏதாவது அழுக்குப்பட்டுக்கொள்கிற மனசு அவர் சரித்திர ச்ரவணத்தில் நிர்மலமாக இருந்தது. அவருடைய சாந்தம், ப்ரேமை எல்லாம் நம் மனசிலேயும் கொஞ்சம் ‘டால்' அடித்துக் கொண்டேயிருந்தது.

‘சரித்திர பலன்' என்பது சரிதம் நமக்கு அளித்தப் பலன் மட்டுமில்லை. அதைக் கேட்டதற்குப் பலனாக நாம் என்ன பண்ணப்போகிறோம் என்பதுதான். ஆசார்யாளுக்கு நாம் பண்ணக்கூடிய பிரதிபலன் எதுவுமேயில்லை. அவருக்கு எதுவும் வேண்டவும் வேண்டாம்.

அவர் எதைப் பெரிய பிரதிபலனாக நினைப்பாரென்றால், சரிதம் கேட்கிற வரையில் நாம் நிர்மலமாக, சாந்தமாக, பிரேமையாக இருந்ததை எக்காலமும் அப்படியே இருக்கும் விதமாக ஸ்திரப்படுத்திக் கொள்வதைத்தான். அப்படி ஆவதற்கு, சாஸ்த்ரோக்தமான காரியம் எல்லாம் பண்ணவேண்டும். ஈச்வர பக்தி பண்ணவேண்டும்.

இதனால் மனசு நன்றாகச் சுத்தியாகி ஒன்றிலேயே நிற்க ஆரம்பித்தபின் ஞான விசாரத்த்துக்குப் போகலாம். இப்போது கர்மா, பக்திகளை விடக்கூடாது. ஆனாலும் அத்வைதத்துக்குத்தானே அவர் முக்கியமாக வந்தார். அதைப் பற்றி பாவனையாகவாவது ஒரு நினைப்பு தினமும் ஐந்து நிமிஷமாவது இல்லை இரண்டு நிமிஷமாவது இருக்கவேண்டும்.

“நான் அழுக்கே இல்லை. அழுகையும் பயமும் கோபமும் ஆசையும் போட்டு அழுக்குப் பண்ணுகிற வஸ்து இல்லை. பரம நிர்மலமாக, பிரசாந்தமாக இருக்கிற, எதுவும் படாத, அழுக்குக் கறையே இல்லாத ஆகாசம் மாதிரி நான்.

என்னவோ இப்படி ஓயாமல் உழப்பறிந்து கொண்டிருந்தாலும் சும்மாயிருக்கிற பரம சுகமே நான்'' என்று இரண்டு நிமிஷம் நினைத்துக் கொண்டால் ஆசார்யாள் ரொம்ப ப்ரீதியாகி விடுவார். இந்தப் பாவனை முற்றி அனுபவமாவதற்கு அனுக்ரஹிப்பார்.

ஆசார்யாள் இன்று இல்லாவிட்டாலும், தமக்குப் பதிலாக என்றைக்கும் இருக்கும்படியாக பக்தியாகவும் ஞானமாகவும் ஏராளமாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவற்றில் கொஞ்சமாவது தினமும் அவசியம் பாராயணம் பண்ணணும். பண்ணினால் அவரையே நேரில் பார்க்கிற மாதிரி பக்தியும் வரும். ஞானமும் வரும்.

எத்தனையோ ஆசார்யாள் உண்டு. ஒருத்தர், ‘சுவாமிக்கு சேவகனாக சதா கைங்கர்யம் பண்ணிக் கொண்டிரு, அதுதான் மோட்சம்' என்பார். இன்னொருத்தர் ‘சூன்யமாகப் போய்விடு, அதுதான் மோட்சம்' என்பார். இன்னொருத்தர், ‘சுவர்க்கம் என்ற இன்ப லோகத்திற்கு எல்லா இந்திரிய சுகங்களும் யதேஷ்டமாக அனுபவித்துக் கொண்டிரு. அதுதான் மோட்சம்' என்பார். இன்னொருத்தர், ‘உனக்கு ரொம்பப் பாப கர்மா இருக்கிறது. அதனால் உனக்கு மோட்சமே கிடையாது. நித்ய நரகம்தான்' என்றுகூடச் சொல்வார்.

ஆசார்யாள்தான், “அப்பா, இப்பவும் எப்பவும் மோட்சத்திலேயே இருந்து கொண்டிருப்பவன்தான். மாயையின் பிராந்தியில்தான் அது உனக்குத் தெரியவில்லை. இந்தப் பிராந்திக்கு ஆளாவது மனசுதான். ஞானத்தினால் அதை அழித்துப்போட்டு விட்டாயானால் அப்போதே மோட்சானுபவம்தான். மோட்சத்திலே வேறே ஒரு சுவாமியிடம் போகவில்லை நீயேதான் சுவாமி, நீயேதான் பரமாத்மா” என்றவர், பாபிகளுக்கு நித்ய நரகம் என்று அவர் சொல்லாதது மட்டுமில்லை. அவர்களுக்கும் உய்வு உண்டு என்று சொல்வதோடும் நிறுத்திக் கொள்ளவில்லை.

இதற்கெல்லாம் மேலே பாபி, பாபி என்கிறவனும் பரமாத்மாவேதான் என்பதாக, பதிதோத்தாரணத்தின் உச்சிக்குப் போனவர் நம் ஆசார்யாள். தம்முடைய அத்வைதத்தால் பதிதனை யும் பரப்ரம்மமாக்கிய ஆசார்யாளைப் போலப் பதித பாவனர் யாருமில்லை.

கன்னட பாஷையில் “மங்களம், குரு சங்கரா” என்று பாட்டு இருக்கிறது. அதில் “பாதகனெனு பரமாத்மனு மாடிதே” (பாதகனையும் பரமாத்மாவாக ஆக்கியவர்) என்று வருகிறது.

அப்படிப்பட்ட ஆசார்யாளுக்கு, லோக மங்களகாரகரான சங்கரருக்கு நாமெல்லாரும் மங்களம், ஜய மங்களம் சொல்லுவோம். “ஜய ஜய சங்கர” என்று மங்கள கோஷம் போடுவோம். அவருடய சுப நாமத்திற்கே ஜய சப்தம் விசேஷமாக உரித்தானது. ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால் நம்முடைய தமிழ் தேசத்தின் மகா பெரியவர் ஒருவர் ‘நாவுக்கு அரசர்' என்று ஈச்வரனே பட்டம் கொடுத்த அப்பர் சுவாமிகள் சொல்லியிருப்பதன் ப்ரமாணத்தில்தான்.

அவர் திருவாரூர் திருத்தாண்டகம் ஒன்றில் என்ன சொல்கிறாரென்றால், “ஏ நெஞ்சமே இப்படி வா, எங்கிட்டே நீ கொஞ்சங்கூட நிலை கொள்ளாமல் அலைந்தபடி இருக்கியே... நீ நிலையான ஸ்தானத்தைப்பெற ஆசைப்பட்டால் என்ன பண்ணணுமென்று சொல்கிறேன். கேட்டுக்கொள்.

தினமும் விடிவதற்கு முந்தி சுவாமி கோவிலுக்குப் போ. சந்நிதியைப் பெருக்கி மெழுகு. சுவாமிக்குப் புஷ்பஹாரம் சமர்ப்பணம் பண்ணு. வாக்புஷ்பத்தாலும் ஸ்தோத்ர அலங்காரம் பண்ணு. வாயாரப் பாடு. தலையாரக் கும்பிடு. கூத்தாடு. ‘சங்கரா! ஜய! போற்றி! போற்றி!' என்றும், ‘கங்காஜடாதரா!' என்றும், ‘ஆதிப் பொருளே, ஆரூரனே!' என்றும் அலறி கோஷம் போடு” என்கிறார். சங்கர நாமாவோடுதான் ஜய சப்தத்தைச் சேர்த்துச் சொல்லி, அது போதாதென்று தமிழிலும் ஒன்றுக்கு இரண்டாகப் “போற்றி” போட்டிருக்கிறார்.

மாணிக்கவாசகர். அவர் ரொம்ப அத்வைதமாகவே சொன்னவர், மகா பெரியவர். அவரும் அந்தாதி கிரமத்தில் பாடியிருக்கிற ‘திருச்சத'கத்தில் ஒரு அடியை 'சங்கரா போற்றி போற்றி' என்று முடித்துவிட்டு, அடுத்த அடியும் ‘சங்கரா போற்றி' என்றே ஆரம்பித்திருக்கிறார்.

ஆசார்யாளுக்கு எப்போதும் “ஜய ஜய, ஹர ஹர!” போட்டுக் கொண்டேயிருப்போம். ஜய சப்தம் நமக்கு ஆத்ம ஜயத்தைக் கொண்டுவந்து கொடுக்கும். ஹர சப்தம் தப்பை, தீமையை எல்லாம் போக்கிவிடும். நாம் எல்லோரும் நன்றாக, ஒற்றுமையாக இருக்க அவருடைய ஸ்மரனையே போதும்.

தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி
(ஸ்ரீசங்கர சரிதம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x