Last Updated : 16 Apr, 2015 01:19 PM

 

Published : 16 Apr 2015 01:19 PM
Last Updated : 16 Apr 2015 01:19 PM

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா?

விவிலிய வழிகாட்டி

சதா கத்திக்கொண்டும் கோபப்பட்டுக்கொண்டும் இருப்பவர்களை ‘மூளைக் கொதிப்புள்ளவர்கள்’ என்று நாம் அருவருப்புடன் கடந்து போய்விட நினைக்கிறோம். ஏன் அந்த மூளைக் கொதிப்பாளராக நாமேகூட இருக்கலாம்.

எரிச்சல், இயலாமை, போதாமை, தோல்வி ஆகியவற்றை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கோபப்படுகிறோம். இதற்கு அடிப்படையான காரணம் நாம் எல்லாருமே ஏதாவதொரு விதத்தில் குற்றங்குறை உள்ளவர்களாய் இருக்கிறோம்.

“நாம் எல்லாரும் பல முறை தவறு செய்கிறோம்” என விவிலியத்திப் யாக்கோபு தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார். பல நேரங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் நமக்கு அற்புதமாக ஒரு தரிசனத்தை தனது மூன்றாம் அத்தியாயம் வழியே கற்பிக்கிறார். அதைக் கூர்ந்து நோக்கினால் கோபத்துக்கான கடிவாளம் உங்கள் கைகளில் கிடைத்துவிடும். வாருங்கள் யாக்கோபுவுக்குள் நுழைவோம்.

ஒரே நாவிலிருந்து

யாக்கோபு சொல்கிறார்: “நாம் எல்லாரும் பல முறை தவறு செய்கிறோம். பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்; அவன் தன்னுடைய முழு உடலையும் கடிவாளம்போட்டு அடக்க முடிகிறவனாக இருப்பான். குதிரைகளை அடக்க நாம் அவற்றின் வாயில் கடிவாளம் போடும்போது வேகமும் சக்தியும் கொண்ட அந்த விலங்கின் முழு உடலையும் கட்டுப்படுத்திவிடுகிறோம் அல்லவா?

கப்பல்களைப் பாருங்கள்! அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், பலத்த காற்றினால் அலைக்கழிக்கப்பட்டாலும், கப்பலோட்டி மிகச் சிறிய சுக்கானைக் கொண்டே தான் விரும்புகிற திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகிறான்.

அதேபோல், நாவும்கூட ஒரு சிறிய உறுப்புதான். ஆனாலும் அது மிகவும் பெருமையடிக்கிறது. சிறிதளவு நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது பாருங்கள்! நாவும் நெருப்புதான். நம்முடைய உறுப்புகளில் ஒன்றான இந்த நாவு அநீதி நிறைந்த உலகமாக இருக்கிறது. ஏனென்றால், அது நம் முழு உடலையும் கறைபடுத்தி, நம் வாழ்க்கையை நாசமாக்கிவிடுகிறது; கெஹென்னாவைப் போல் அழித்துவிடுகிறது.

கெஹென்னா

தமிழ் விவிலியத்தில் லூக்கா புத்தகத்தின் 12-ம் அத்தியாயம் 5-ம் வசனத்தில் கெஹென்னா என்ற வார்த்தை ‘நரகம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெஹென்னா என்பது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எருசலேம் நகருக்கு வெளியே புறநகர் பகுதியாக இருந்தது. இங்கே எருசலேமில் சேகரிக்கப்படும் குப்பைக் கூளங்கள் கொட்டி எரிக்கும் ஒரு இடமாக இருந்தது. குப்பைக் கூளங்களோடு பிணங்களும் அங்கு எரிக்கப்பட்டன.

இதனால் கெஹென்னா 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு இடமாக இருந்தது. அங்கே தூக்கி வீசப்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கும் உயிர்த்தெழுதலுக்கும் தகுதியற்றவையாக யூதர்களால் கருதப்பட்டன. ஆகவே, கெஹென்னா என்பது நித்திய அழிவுக்கு ஓர் அடையாளமாக யூதக் கலாச்சாரத்தில் அடையாளம் பெற்றது.

எல்லா வகையான காட்டு விலங்குகளையும் பறவைகளையும் ஊரும் பிராணிகளையும் கடல் விலங்குகளையும் மனிதனால் அடக்கிவிட முடியும், அடக்கியும் இருக்கிறான். ஆனால், நாவை எந்த மனிதனாலும் அடக்க முடியாது. அது தீங்கு விளைவிப்பது, அடங்காதது, கொடிய விஷம் நிறைந்தது.

அந்த நாவினால் நம்முடைய தகப்பனாகிய யெகோவாவை நாம் போற்றுகிறோம். ஆனால் ‘கடவுளுடைய சாயலில்’ படைக்கப்பட்ட சக மனிதர்களை அதே நாவினால் சபிக்கிறோம். போற்றுதலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன.”

தொடர்வது சரியா?

யாக்கோபு மேலும் தொடர்கிறார். “என் சகோதர, சகோதரிகளே, இது இப்படியே தொடர்வது சரியல்ல. ஒரே நீரூற்றிலிருந்து தித்திப்பான தண்ணீரும் கசப்பான தண்ணீரும் சுரக்குமா? அத்தி மரம் ஒலிவப் பழங்களையோ, திராட்சைக் கொடி அத்திப் பழங்களையோ கொடுக்குமா? அதேபோல் உவர்ப்பான நீரூற்று தித்திப்பான தண்ணீரைக் கொடுக்குமா? உங்களிடையே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ளவர் யார்? இவற்றை நல்ல நடத்தையின் மூலமும், ஞானத்தால் வருகிற சாந்த குணத்தின் மூலமும் அவர் காண்பிக்கட்டும்.

உங்கள் இருதயங்களில் மிகுந்த பொறாமையும் பகைமையும் இருக்கிறதென்றால், நீங்கள் பெருமையடித்துக்கொள்ளாதீர்கள்; சத்தியத்துக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். இப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் அல்ல. மாறாக இது உலகப் பிரகாரமானது; மிருகத்தனமானது; பேய்த்தனமானது. பொறாமையும் பகைமையும் எங்கே வாழ்கின்றனவோ, அங்கே கலகங்களும் கீழ்த்தரமான செயல்களும் நடந்தபடியே இருக்கும்.

கட்டுப்படுத்தும் ரகசியம்

கோபத்தின் மூலாதாரத்துக்கான காரணத்தை இதுவரை துல்லியமாக எடுத்துவைத்த யாக்கோபு, சமாதானம் எனும் அற்புத சாதனம் கோபப்படுகிறவர்களையும் கோபத்தை எதிர்கொள்கிறவர்களையும் விடுவிக்கும் ஆற்றல் படைத்தது என்பதைச் சொல்கிறார்.

“ பரலோகத்தி லிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாகவும், பின்பு சமாதானம் பண்ணுவதாகவும், நியாயமானதாகவும், கீழ்ப்படியத் தயாரானதாகவும், இரக்கமும் நற்செயல்களும் நிறைந்ததாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிவேஷமற்றதாகவும் இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் சமாதானச் சூழலில் நீதியின் விதையை விதைத்து, அதன் கனியை அறுவடை செய்வார்கள்” என்கிறார்.

இனி நடைமுறையில் நம் கோபத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம். உங்களுடைய கோபத்துக்கு அணை போடுவது கடினமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். முதலில் உங்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் சில தவறான கருத்துகளை ஒதுக்கித்தள்ளுங்கள்.

“என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய குடும்பமே கோபத்துக்குப் பேர்போனது!” என்று எண்ணாதீர்கள். இது மிகத் தவறான மதிப்பீடு. குடும்பம், நீங்கள் வசிக்கும், வேலை செய்யும் சுற்றுச்சூழல், அல்லது இன்னபிற காரணங்களால் விரைவில் கோபம் கொள்ளும் சுபாவம் உங்களுக்கு இருக்கலாம்.

ஆனால் கோபம் வரும்போது அதை நீங்கள் கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா, அல்லது அது உங்களைக் கட்டுப்படுத்துவதை விரும்புகிறீர்களா? மற்றவர்கள் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் எனும்போது நீங்களும் அதைக் கற்றுக்கொள்ளலாம்! இதற்கு “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என எபேசியர் (4:31) புத்தகம் வழிகாட்டுகிறது.

அதேபோல் கோபம் வந்தால் அதை உள்ளுக்குள் அடக்கி வைப்பதைவிடக் கொட்டித் தீர்ப்பதுதான் நல்லது என்று நீங்கள் முயல்பவராக நீங்கள் இருந்தால் இரண்டுமே உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானவையாக இருக்கலாம். உங்களுடைய வேதனையைக் ‘கொட்டித் தீர்க்க ஒரு காலம் உண்டு என்பது வாஸ்தவமே” என்கிறது யோபு (10:1). அதற்காக, யாரிடம் போய்க் கோபத்தைக் கொட்டித்தீர்க்கலாம் எனப் பார்த்துக்கொண்டிருக்க அவசியமில்லை.

கோபத்தில் கொப்பளிக்காமலேயே உணர்ச்சிகளைத் தெரிவிக்க உங்களால் பழகிக்கொள்ள முடியும். இதைத்தான் “ எஜமானனோ ஊழியக்காரனோ சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய் நடந்துகொள்கிறவனாகவும் தீங்கைப் பொறுத்துக் கொள்கிறவனாகவும் இருவருமே இருக்க வேண்டும்” என்கிறது தீமோத்தேயு(2:24).

ஆனால் “நான் எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொண்டால் என்னை ஏறி மிதிப்பார்கள்” என்று நினைப்பீர்களானால் ‘நீங்கள் சுயக் கட்டுப்பாடுடன் நடப்பதற்கு நெஞ்சுரம் தேவை’ என்பது மற்றவர்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் அப்படி நடக்கும்போது அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக மதிப்பார்கள்.

இந்தக் குணமே சமாதான குணம் “கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாகுங்கள்” என்று ரோமர்(12:18) சொல்வது இதைத்தான். முயன்று பாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x