Last Updated : 05 Mar, 2015 10:39 AM

 

Published : 05 Mar 2015 10:39 AM
Last Updated : 05 Mar 2015 10:39 AM

கடவுளைச் சந்திக்கும் தருணம்

கடவுளுக்கும் மனிதனுக்கும் பாலமாக இருப்பது பிரார்த்தனை. ‘கர்த்தர் கற்பித்த ஜெபம்’ அனைத்துப் பிரிவு கிறிஸ்தவ மக்களாலும் பின்பற்றப்படுகிறது. இந்த இறைவேண்டலில் ''எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்'' என்றொரு வரி இருக்கிறது (மத் 6:13; லூக் 11:5). நம் மீது அன்பு செலுத்தும் கடவுள் நம்மைச் சோதனையில் விழச் செய்வாரா என்ற கேள்வி எழலாம். நல்லது எது, கெட்டது எது என்பதைச் சிந்தித்து அறியும் அறிவை மனிதனுக்குக் கடவுள் கொடுத்தார்.

ஆனால் சிந்திக்கும் அறிவு கொடையாகத் தரப்பட்டும் தீமையின் பக்கம் சாய்வதில் மனித இனத்துக்கு அப்படியொரு வேட்கை. எனவேதான் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ‘சோதனை எனும் சாதனத்தைக் கட்டாயம் கடந்து வந்தே தீர வேண்டும் என்ற நிலையைக் கடவுள் நிலைநாட்டியிருக்கிறார். சோதனையில் நாம் வெற்றி பெறுகிறோமா இல்லை தோற்றுப்போகிறோமா? நமது தேவ விசுவாசம் என்ன என்பதை நமக்கு வரும் சோதனைகள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒரு சோதனை நம்மை நாமே புடம் போட்டுக்கொள்ளக் கடவுள் தரும் அற்புத வாய்ப்பு. சோதனைகளைச் சாதனைகளாய் மாற்றிக்கொள்வது நமது கையில்தான் இருக்கிறது.

இயேசு சோதிக்கப்படுதல்

கடவுள் இயேசுவாய் பூமியில் அவதரித்தபோதும் மனித வாழ்க்கைக்குரிய சோதனைகளை அவர் எதிர்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார். இயேசு சோதிக்கப்பட்டதை மத்தேயுவும் லூக்காவும் விரிவாகத் தந்துள்ளனர் (மத் 4:1-11; லூக் 4:1-13); தீய சக்தியாகிய சாத்தானின் சோதனைக்குப் பிறகு இயேசு இன்னும் அதிக உறுதியோடு செயல்படுகிறார்.

இயேசுவின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூய ஆவியானவர் அவரை வழிநடத்திச் சென்றதாகப் புனித மாற்கு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். முதலில் தூய ஆவி இயேசுவின் திருமுழுக்கின்போது அவர்மீது இறங்கி வருகிறார் (மாற்கு 1:10). திருமுழுக்குப் பெற்றபின் இயேசு தூய ஆவியால் ''பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்'' (மாற்கு 1:12). கிரேக்க மூல விவிலியத்தில் '' பாலைநிலம் நோக்கி துரத்தப்பட்டார்'' என்று விவரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தூய ஆவி இயேசுவின் வாழ்வில் “வல்லமையோடு செயல்பட்டார்'' என்பதை மாற்கு எடுத்துக்காட்டுகிறார்.

பாலைநிலம் என்பது இஸ்ரவேலரின் வாழ்வில் மைய இடம் வகித்தது. அங்குதான் இஸ்ரவேல் மக்கள் வழிநடத்திச் செல்லப்பட்டனர். பல சோதனைகளுக்கு உட்பட்டனர். இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கிய யோவானும் பாலைநிலத்திலேயே வாழ்ந்து வந்தார்; அங்கிருந்தபடிதான் மன மாற்றம் அடையுங்கள் என்று மக்களுக்கு நற்செய்தி வழங்கிவந்தார். அதை மக்களும் காது கொடுத்துக் கேட்டனர். காரணம் கடும் பாலை நிலத்தில் உணவும், தண்ணீரும் இல்லாமல் உயிர்வாழும் அற்புதம் தூய ஆவியின் வரத்தைப் பெற்றவர்களால் மட்டுமே சாத்தியம் என மக்கள் நினைத்தார்கள்.

யோவானைப் போலவே தனது அவதார நோக்கத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும்முன் இயேசுவும் பாலைநிலத்திற்குப் போகிறார்; அங்கே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்; தம் பணிக்காலத்தின்போது பாலைநிலத்தைத் தேடிச்சென்று அங்குக் கடவுளோடு தனித்திருப்பார் இயேசு (மாற்கு 1:35,45; 6:31-32,35). அந்த வேளைகளில் எல்லாம் தூய ஆவி இயேசுவோடு இருப்பார்; இயேசுவுக்குத் தூண்டுதல் நல்குவார்; இயேசுவை வழிநடத்திச் செல்வார் என்பதை மாற்குவின் அத்தியாயம் விவரிக்கிறது. கொடிய வெப்பம் மட்டுமே வாழும் சூழல் என்ற பாலை நிலம், நம் வாழ்வின் இக்கட்டான தருணங்களுக்கு குறியீடாவதை எண்ணிப் பாருங்கள்.

இறைவார்த்தையை வாழ்வோடு இணைப்போம்!

பாலைநிலத்தில் நாற்பது நாட்கள் உணவு உண்ணாமல் தனது பரலோகத் தந்தையை நோக்கித் தவமிருந்த இயேசுவுக்குப் பசி பெரும் சோதனையாக வந்து சேர்கிறது. அப்போது சாத்தான் அவரை நெருங்கி “ நீர் கடவுளின் மகன் என்றால் இதோ இந்தக் கற்களை அப்பம் ஆக்கும்” என்று சவால் விடுகிறது. இயேசு நினைத்திருந்தால் தனது வல்லமையால் அவ்வாறு செய்திருக்க முடியும்.

மாறாக “மனிதன் அப்பத்தினால் அல்ல; தந்தையின் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர் வாழ்வான்” என்று சாத்தானுக்குப் பதிலடி கொடுத்தார். இயேசு சோதனைகளில் வெல்வதைச் சாத்தானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இயேசுவைப் போலவே வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள நம்மைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை நம் வாழ்வோடு இணைத்துப் பார்த்தால் நாம் கற்றுக்கொள்வது என்ன, நமக்கு வருகின்ற சோதனை என்னவென்பதை நாம் அடையாளம் காணலாம். எவ்வகையான சோதனை என அடையாளம் காணும்போது அதை எதிர்ப்பதற்கான தெளிவு பிறக்கும். சோதனை எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சில வேளைகளில் சோதனை முகமூடி அணிந்து வரலாம்.

எடுத்துக்காட்டாக, ஏன் பொருட்களை அதிக லாபம் வைத்து விற்கிறீர்கள் என்று உங்கள் மனசாட்சி உங்களைக் கேட்டால், எனக்கு இருக்கும் கடன்களை அடைக்க என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் செய்துகொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கடனை அடைக்க வேண்டியது உங்கள் கடமை என்பதை மறந்து அதை அடுத்தவர் தலையில் சுமத்த நினைப்பது, சோதனையில் நீங்கள் தோற்றுப்போகிறீர்கள் என்பதையே காட்டுகிறது.

சோதனையைத் துணிவோடு எதிர்க்க வேண்டும். உள்ளார்ந்த மனத்திடம் வேண்டும்; அதற்கான பயிற்சியும் வேண்டும். அதை நீங்கள் இயேசு எனும் முன்மாதிரியிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். சில சோதனைகளை உங்கள் சொந்த சக்தியால் முறியடிக்க முடியாது. அப்போது கடவுளின் அருளை நாடுவது எளிதானது. அதுபோன்ற இக்கட்டான வேளையில் “ஆண்டவரே எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்” என்ற ஜெபம் உங்களது சோதனையிலிருந்து கடந்து வருவதற்கான மனத்திடம் அளிக்கும்.

சிலர் சோதனையை எதிர்மறையாகப் பார்ப்பர். அதாவது சாத்தான் என்னும் தீய சக்தியோடு நாம் போராடுவதை மட்டுமே அவர்கள் கருதுவார்கள். ஆனால் சோதனை என்பதைக் கடவுளை நாம் சந்திக்கின்ற தருணமாகவும் எடுத்துக்கொள்ளலாம். கடவுளின் உதவியை நாம் கேட்டு அவருடைய துணையோடு சோதனையை எதிர்த்து நிற்க வேண்டும். அப்போது சோதனையிலிருந்து நாம் புடமிடப்பட்ட பொன்னாக வெளிவருவோம். இயேசு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால் இறுதியில் அவரே வெற்றிபெற்றதோடு அதிகத் திடத்தோடு தம் பணியைத் தொடர்ந்தார். அதுபோல நாமும் சோதனையைக் கடவுளின் சக்தியோடு எதிர்கொண்டால் கடவுளின் அருள்துணையை நம் வாழ்வில் உணர்வோம்; அதிக ஊக்கம் பெற்றுச் சோதனையிலிருந்து வெளிவருவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x