Last Updated : 10 Dec, 2015 11:48 AM

 

Published : 10 Dec 2015 11:48 AM
Last Updated : 10 Dec 2015 11:48 AM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: குறைபோக்கிக் குணம் அருளும் கோவள நாயகர்

சென்னையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் மாமல்லபுரத்துக்கு அருகிலுள்ள கோவளத்தில் நபித்தோழர்களில் ஒருவரான தமீம் அன்சாரி பாபா தர்கா அமைந்துள்ளது.

தமீம் அன்சாரி அல்-கஜ்ராஜ் எனும் அரேபியக் குலமரபைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையார் பெயர் யூ ஆர் என்றும், ஜைத் இபுன் அசீம் அன்சாரி என்றும் கூறப்படுகிறது. இளம்வயதிலேயே மெய்ஞானத்திறன் பெற்ற தமீம் அன்சாரி போர் வீரராகவும் இருந்தார். நபித்தோழர்களான 313 சஹாபாக்களுடன் பத்ரு போரில் அவர் கலந்து கொண்டார்,

தமீம் அன்சாரி ஆலமுல், ஜின் எனப்படும் ஜின் வர்க்கத்தினரின் மறைவிடத்தில் ஐந்து ஆண்டுகள் தங்கி இஸ்லாமியப் போதனைகளை வழங்கி வந்தார். அவர் அங்கு செல்வதற்கு முன் ஒரு புனித மோதிரத்தை, நபிகள் நாயகம் அன்பளிப்பாக வழங்கினார். இறுதிநாள் வரை அதை விரலில் அணிந்திருக்கும்படியும் கூறினார்கள். அது அவருக்குப் பலமாகவும் பாதுகாப்பாகவும் அமைந்ததாகக் கருதப்படுகிறது.

கலீபா உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அரேபியாவிலிருந்து ஆசியக் கண்டத்திற்கு பயணம் செய்ய விரும்பினார் மகான் தமீம் அன்சாரி அதன்படி சிந்து பிரதேசத்திற்கு வந்து 18 ஆண்டுகள் தங்கி திருப்பணியாற்றினார்,

பல அற்புதங்களை நிகழ்த்தி எண்ணற்ற மக்களுக்குப் பரிகாரம் வழங்கிவந்த தமீன் அன்சாரி, தமது மறைவுக்குப் பிறகு சீடர்கள் செய்யவேண்டிய கடமைகளை முறையாக எடுத்துரைத்தார். குறிப்பாக, தமது உடலை ஒரு பேழையில் வைத்து கடலில் சேர்த்துவிட வேண்டும் என்று கூறினார்.

கோவளத்தில் கரைசேர்ந்த புனிதப்பேழை

அதன்படி, தமீம் அன்சாரி பாபா இறைவனடி சேர்ந்ததும் அவரது நல்லுடல் ஒரு புனிதப் பேழையில் வைத்து கடலில் விடப்பட்டது. அந்தப் பெட்டி ஐந்து ஆண்டுகள் கடலிலேயே பயணித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பெரிய மீன் ஒன்று அவரது உடல் இருந்த புனிதப்பேழையை கோவளம் கடற்கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தது.

கனவில் வந்த செய்தி

வாலாஜா நவாப்பாக இருந்த முஹம்மது சாததுல்லா கான் ஒரு கனவு கண்டார். தமீம் அன்சாரி அவர்கள் நவாப் முன்னால் தோன்றி, கோவளம் கடற்கரைக்கு வந்து தமது உடலை எடுத்து அடக்கம் செய்யும்படிகேட்டுக் கொண்டார். அதன்படி நவாப் கோவளம் கடற்கரைக்குச் சென்று பேழையைக் கண்டார். திறந்து பார்த்தார், மகானின் புனித உடலைக் கண்டு நவாப் வியந்தார். சில ஆவணங்களும் அந்தப் பெட்டியில் இருந்தன.

தமீம் அன்சாரி பாபா அவர்களின் நல்லடக்கச் சடங்கை வாலாஜா நவாபே நடத்தினார். அடக்கம் செய்வதற்கு முன் அங்கு திரண்டிருந்த மக்கள் அனைவரும் பாவாவின் மாசு மருவற்ற அழகிய உடலையும், ஒளி வீசும் முகத்தையும் பார்த்துப் பரவசமடைந்தனர். அவர்களின் நல்லாசியைக் கோரினர். மகான் பாதுகாத்து வைத்திருந்த ஆவணங்களை ஆர்வத்துடன் படித்து அவர்கள் புத்துணர்ச்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது,

புனித இறைநேசர் தமீம் அன்சாரியின் உடல் தங்கிய இடத்திலேயே தர்கா எழுந்தது. மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோவளம் தர்காவைக் கட்டுவதில் வாலாஜா நவாபே முக்கிய பங்காற்றினார். .

கோவளம் தர்காவில் கிடைக்கும் சுவையான சிவப்பு நிற பூந்தியும் , இளஞ்சிவப்பு நிற மலர்களும் பிரபலமானவை.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் வியாழக்கிழமை, கோவளம் தர்காவுக்கு வந்து வழிபடுவதற்கான சிறப்புத்தினமாகக் கருதப்படுகிறது. அவர்களுக்காக தமீம் அன்சாரி நாயகர் இறைவனின் நல்லருளை வேண்டி, தமது நல்லாசியுடன் குறைகளையும், பிரச்சினைகளையும் அகற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x