Published : 28 Apr 2016 01:23 PM
Last Updated : 28 Apr 2016 01:23 PM

ஆன்மிக நூலகம்: நிசர்கதத்த மஹராஜ் என்பவர் யார்?

நிசர்கதத்த மஹராஜ் அவர்கள் 1897-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி பௌர்ணமி நாளில் பிறந்தார். அது ஹனுமான் ஜெயந்தி பண்டிகை நாள். அவருடைய பிறப்பை அந்தப் புனிதமான நாளோடு தொடர்புபடுத்தி அவருடைய பெற்றோர் அவருக்கு மாருதி என்று பெயர் வைத்தனர்.

அவருடைய தந்தையாருக்கு விஷ்ணு ஹரிபாபு கோரே என்னும் பண்பான, படித்த பிராமண நண்பர் ஒருவர் இருந்தார். கோரே அடிக்கடி மதம் சம்பந்தப்பட்டவைகளைப் பற்றி பேசுவார். அதை சிறுவன் மாருதி உன்னிப்பாகக் கேட்டு, அதில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஆழ்ந்துவிடுவார். கோரே அவருக்கு அக்கறையுள்ள, அன்பான, அறிவுள்ள சரியான மனிதராக இருந்தார்.

மாருதிக்குப் பதினெட்டு வயதானபோது அவருடைய தந்தை இறந்துவிட்டார்- மனைவி, நான்கு மகன்கள், இரண்டு மகள்களை விட்டுவிட்டு, சிறிய தோட்டத்திலிருந்து கிடைத்த சொற்ப வருமானம் கிழவரின் இறப்பிற்குப் பிறகு மேலும் குறைந்தது. அது அவ்வளவு பேரும் சாப்பிடப் போதவில்லை. மாருதியின் மூத்த சகோதரர் வேலை தேடி கிராமத்தை விட்டுப் பம்பாய்க்குச் சென்றார். மாருதி அவரைத் தொடர்ந்து சென்றார். அவர் பம்பாயில் சிறிய சம்பளத்தில் ஜூனியர் குமாஸ்தாவாக ஒரு அலுவலகத்தில் வேலை செய்ததாகவும், வெறுத்துப் போய் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் பிறகு சிறு பொருள்கள் விற்பவராகச் சில்லறை வியாபாரத்தைச் செய்தார். அப்போது குழந்தைகளுக்கான துணிகள், புகையிலை, சுருட்டு ஆகியவற்றை விற்கும் கடையை ஆரம்பித்தார். இந்த வியாபாரம் நாளடைவில் வளர்ந்து, அவருக்கு ஓரளவிற்குப் பொருளாதார வலிமையைத் தந்தது. இந்தக் காலகட்டதில் அவர் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகனும் மூன்று மகள்களும் பிறந்தனர்.

குழந்தைப் பருவம், இளமைப் பருவம், திருமணம், குழந்தைகள் என்று மாருதி வழக்கமான, சாதாரண மனிதன் வாழ்கின்ற, எதுவும் பெரிதாக நிகழாத வாழ்க்கையை, பின்னால் தொடரப் போகின்ற புனிதத்தன்மையைப் பற்றி சிறிதும் அறியாமலே நடுவயது வரை வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய நண்பர்களில் ஒருவர் யஷ்வந்ராவ் பாஃகர் என்பவர். அவர் இந்து மதப் பிரிவுகளில் ஒன்றான நவநாத் சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஒரு ஆன்மிக குருவான சித்தராமேஷ்வர் மஹராஜ் என்பவரின் பக்தர். ஒருநாள் மாலை நேரத்தில் அவர் மாருதியைத் தன் குருவிடம் அழைத்துச் சென்றார். அந்த மாலை வேளை, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக ஆகிற்று. குரு, அவருக்கு ஒரு மந்திரத்தை போதித்து, தியானத்திற்கான குறிப்புகளைக் கொடுத்தார். ஆரம்பகாலப் பயிற்சியின்போது அவர் சில காட்சிகளைக் காண ஆரம்பித்தார். எப்போதாவது மெய்மறந்த நிலைக்கும் செல்வார். அவருக்குள் ஏதோ ஒன்று வெடித்தது. ஒரு பேரண்ட விழிப்புணர்வை, ஒரு சாசுவதமான உயிர்வாழும் உணர்வை அவருக்குள் பிறக்கச் செய்தது. சிறுபெட்டிக் கடைக்காரர் என்னும் மாருதியின் அடையாளம் கரைந்து, ஒளிவீசுகிற தன்மையுடைய நிசர்கதத்தா வெளிப்பட்டார்.

பெரும்பாலான மக்கள், தன் விழிப்புணர்வு என்னும் உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அதைவிட்டு விலக வேண்டும் என்னும் ஆசையோ, வலிமையோ கிடையாது. அவர்கள் தங்களுக்காகவே இருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் சுயதிருப்தியையும், சுயமகிமைப்படுத்தலையும் நோக்கியே இருக்கின்றன. ஆனாலும் சில மகான்கள், ஆசிரியர்கள், ஞானிகள் வெளிப்படையாக அதே உலகத்தில் வாழ்வதாகத் தோன்றினாலும், அதேசமயம் பேரண்ட விழிப்புணர்வுள்ள, அளவற்ற அறிவை உள்ளடக்கிய உலகத்திலும் வாழ்கிறார்கள். தனக்கு ஒளிபொருந்திய அனுபவம் கிடைத்த பிறகு, நிசர்கதத்த மஹராஜ் அப்படிப்பட்ட இருமை வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். அவர் தன் கடையை நடத்தினார். ஆனால், லாப நோக்குடைய வியாபாரியாக இல்லாமல் போனார். பிறகு, தன் குடும்பத்தையும் வியாபாரத்தையும் விட்டுவிட்டு, 1937-ம் ஆண்டு ஒரு ஆண்டியாக யாத்திரைக்காரராக, விரிந்த, பல்வகைப்பட்ட இந்திய மத அரங்கில் மாறினார். தன் மீதிக்காலத்தை, சாசுவதமான வாழ்க்கையை விரும்பிக் கழிக்கும் எண்ணத்துடன் இமயமலையை நோக்கி வெறும் காலுடன் நடக்க ஆரம்பித்தார். ஆனால் சீக்கிரமே அம்மாதிரியான விருப்பத்தின் இயலாமையை உணர்ந்து வீட்டிற்குத் திரும்பினார். சாசுவதமான வாழ்க்கை தேடப்படுவது அல்ல; முன்பே அவரிடம் உள்ளது என்று உணர்ந்து 1938-ம் ஆண்டு அறிந்தார். நான் உடல் என்னும் கருத்திற்கு அப்பால் சென்று விட்டதால் அவர் ஆனந்தமான, அமைதியான, உன்னதமான, அதனோடு ஒப்பிட்டால் எதுவுமே மதிப்பற்றதாகத் தோன்றும் மனோநிலையை அடைந்தார். அவர் மெய்ஞானம் அடைந்தார்.

(‘I am that' நூலின் மொழிபெயர்ப்பு)

 நிசர்கதத்த மஹராஜ்

கண்ணதாசன் பதிப்பகம்

23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,

சென்னை-17

தொடர்புக்கு: 044-24332682

விலை: ரூ.250

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x