Published : 12 Jul 2018 10:17 AM
Last Updated : 12 Jul 2018 10:17 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 39: மங்கையோடு இருந்தே யோகம் செய்வானை

யிர் வளர்க்க முனைபவர்கள் எப்போதும் பெண்ணைப் புறந்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்

பிடித்திட்டு, என்னைக்

கண்ணால் வெருட்டி, முலையால்

மயக்கிக் கடிதடத்துப்

புண்ணாம் குழியிடைத் தள்ளி, என்

போதப்பொருள் பறிக்க,

எண்ணாது உனைமறந் தேன்இறைவா!

கச்சி ஏகம்பனே!

(பட்டினத்தார், திருஏகம்ப மாலை, 23)

பெண், ஒரு மாயப் பிசாசு. அது என்னைக் கண்ணால் மிரட்டுகிறது; மார்பால் மயக்குகிறது; தன்னால் என்னைப் புதைத்துக்கொள்கிறது; நான் தேடித் திரட்டி வைத்திருந்த அறிவெனும் பெரும்பொருளை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்துச் செல்கிறது. அறிவு மொத்தமும் களவு போய்விட்டதால், ஐயோ, என் இறைவா, கச்சி ஏகம்பநாதனே! உன்னை எண்ணாமல் மறந்துவிட்டேனே கடவுளே! என்று புலம்புகிறார் பட்டினத்தார். புலம்புவது பட்டினத்தார் ஒருவர் மட்டுமல்லர். பலரும்.

மாணிக்கவாசகர் பாடுகிறார்:

பஞ்சாய அடிமடவார்

கடைக்கண்ணால் இடர்ப்பட்டு

நெஞ்சாய துயர்கூர

நிற்பேன்உன் அருள்பெற்றேன்

உய்ஞ்சேன்நான் உடையானே

அடியேனை வருகஎன்று

அஞ்சேல்என்று அருளியவாறு

ஆர்பெறுவார் அச்சோவே.

(திருவாசகம், அச்சோப் பதிகம், 5)

முதிய பெண்கள் பாடுபடுகிறவர்கள். ஏதேனும் ஒன்றின் பொருட்டு எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறவர்கள். நடந்து நடந்து பாதங்கள் தேய்ந்து போனவர்கள். காய்த்துப் போன கட்டைப் பாதங்கள் அவர்களுடையவை. ஆனால், இளம்பெண்களின் பாதங்களோ அப்படியல்ல. இன்னும் உலகியலில் நடந்து பழகாததால் தேய்ந்து போகாத, காய்த்துப் போகாத பஞ்சுப் பாதங்கள். அத்தகைய பஞ்சுப் பாதங்களை உடைய இளம்பெண்கள் தங்கள் கடைக்கண்களை என்மேல் வீசினார்கள்; மனது பொறாமல் அவர்களின் பின்னே ஓடினேன்; அதுவரை நான் தேடியிருந்த முதல் அனைத்தும் அவர்களிடம் சேர வழங்கினேன். பின் ஒன்றும் அற்றவனாய் நிலைகுலைந்து கலங்கி நின்றேன். அந்தவேளையில் ஐயா, உன்னுடைய அருட்கண்களை என்மேல் வீசினாய். ஆடிய ஆட்டம் போதும், என்னிடம் வா என்றாய். அஞ்ச வேண்டாம் என்றாய். அருள் தந்தாய். நல்லவேளை, தப்பித்துப் பிழைத்தேன். நீ எனக்குத் தந்ததைப் போல யார் தருவார்கள் அப்பாவே?

காமம் பேயா, நோயா?

தன்னுடைய உயிர் வளர்ப்புக்கு இன்னோர் உயிரைத் தள்ளலாம் என்றால், இது தகுமோ? இது முறையோ? இது தருமம்தானோ என்று நமக்குத் தோன்றுகிறது. காமம் என்ன அவ்வளவு கடையழிந்ததா? காமம் என்ன பேயா, இல்லை நோயா?

காமம் காமம் என்ப; காமம்,

அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை,

குளகு மென்று ஆள்மதம் போலப்

பாணியும் உடைத்துஅது காணுநர்ப் பெறினே

(குறுந்தொகை, 136)

ஐயோ காமம், ஐயையோ காமம் என்கிறவர்களே! காமம் பேயும் அன்று, நோயும் அன்று. திடீரென்று பெருகுவதும் இல்லை; திடீரென்று தணிவதும் இல்லை. யானை எல்லாக் காலத்திலும் மதம் பிடித்துத் திரிவதில்லை; குளகு என்கிற தழையைத் தின்று திரிகிறபோது அதற்கு மதம் பிடிக்கிறது. அதைப் போலவே பார்க்க வேண்டியவர்களைப் பார்க்கும்போது காமம் ததும்பும்.

இந்தக் காமம் போதம் கெடுக்குமா? உயிரைச் சிதைக்குமா? என்றால், நிலை கொள்ளாமல் அங்குமிங்குமாக ஐந்து திசைவழிகளில் அலைந்து திரிகிற உயிரை ஒருங்கு திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்துவதில்லையா அது?

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள (குறள், 1101)

கண் ஒன்றைக் காட்ட, காது ஒன்றைக் கேட்க, நாக்கு ஒன்றைச் சுவைக்க, மூக்கு ஒன்றை முகர, மெய் ஒன்றை உணர ஐந்து புலன்களும் அவையவற்றின் போக்கில் எது எதிலோ ஈடுபட்டு எங்கெங்கோ சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் நிலையில், ஐந்து புலன்களையும் ஒருங்கிணைத்து ஒன்றில் மட்டுமே திளைக்க வைக்கிற வல்லமை உள்ளதில்லையா காமம்? உயிர்கள் எல்லாவற்றுக்கும் இதுதானே பொது ஞாயம்?

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான்அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்

(தொல்காப்பியம், பொருளியல், 219)

- என்கிறது தொல்காப்பியம். உள்ளமும் உடலும் ஒன்றாய்த் தோய்வதில் வரும் இன்பமே எல்லா உயிர்க்கும் இன்பம். உடலும் உள்ளமும் ஒன்றாய்த் தோயும் இன்பம் எது? மனிதர்களுக்குக் கல்வியில் தோயும்; தவத்தில் தோயும்; தானத்தில் தோயும்; மற்ற உயிர்களுக்கோ? காமத்தில் மட்டுமே தோயும். எனவே, எல்லா உயிர்களுக்கும் பொதுவான தோயும் இன்பம் காமமே.

பெண்ணையும் போற்றிய சமயம்

கடவுளில் பெறுகிற இன்பம் பேரின்பம்; காமத்தில் பெறுகிற இன்பம் சிற்றின்பம்; என்றால், காமம் கடவுளுக்காகக் காட்டப்படுகிற முன்னோட்டம் இல்லையா? நம்மைக் கொஞ்ச நேரத்துக்கேனும் ஒருங்கு திரட்டி வைக்கிற சிற்றின்பந்தானே நம்மை எவ்வெப்போதும் ஒருங்கு திரட்டி வைக்கிற பேரின்பத்துக்கு வழிகாட்டி? ஒரு புட்டித் தேனை வாங்கத் தூண்டுவது ஒரு துளித் தேனின் இன்பமே அல்லவா?

சைவம் பெண்ணைத் தள்ளிவைத்து வளர்ந்த சமயம் அல்ல. அது பெண்ணையும் தழுவி வளர்ந்த இயற்கைச் சமயம். இயற்கைக்கு முரணான எதையும் அது ஒழுக்கத்தின் பெயராலோ சமயத்தின் பெயராலோ வலிந்து திணிப்பதில்லை. காமத்தைச் சைவம் கண்டனம் செய்வதில்லை. காமம் பழகிப் பின் கடவுள் பழகவே அது தூண்டுகிறது. பெண்ணை இழிவு செய்வது சைவத்துக்கு உகந்ததன்று. இறைவனுக்குச் செய்த உருவத்தின் ஒரு பாகத்தில் பெண்ணை வைத்து, ‘மாது ஒரு கூறு உடைய பிரான்’ என்று பக்தர்களைப் பழக்குகிற சமயம் பெண்ணைப் புறந்தள்ளுமா?

மாதர்ப் பிறைக் கண்ணியானை

மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர் சுமந்து ஏத்திப்

புகுவார் அவர்பின் புகுவேன்;

யாதும் சுவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது,

காதல் மடப் பிடியொடும்

களிறு வருவன கண்டேன்;

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதன கண்டேன்

(தேவாரம், 4:3:1)

பெண்கள் தலைச் சடையில் பூச்சரத்தின் கண்ணி ஒன்றைச் சூடிக்கொள்வதுபோலப் பிறைநிலாவைத் தன் சடையில் சூடிக்கொண்டவன். ஐயாறப்பன் கோவிலில் அவனைக் கண்டு வழிபாடு செய்வதற்காகப் பூவையும் நீரையும் எடுத்துக்கொண்டு, அவனையும் அவனில் ஒரு பாகமாகிய மலைமகளையும் வாழ்த்திப் பாடிக்கொண்டு போகிறார்கள் அடியார்கள். அவர்கள் பின்னால் நானும் பேசாமல் போகிறேன். அட, இதென்ன, தன் காதல் துணையோடு வருகிறதே இந்தக் களிற்று யானை? இவை என்ன அம்மையும் அப்பனுமா? இல்லாமல் வேறென்ன? காதல் கொண்டு கலந்து நிற்கிற உயிர்கள் எல்லாமே அம்மையும் அப்பனுந்தான். கடவுளைக் கண்டுகொள்வதற்காகக் கயிலைவரை சென்றேனே! அடக் கடவுளே! காதலைக் கண்டுகொண்ட போதல்லவா கடவுள் தெரிகிறார்? என்று சமணத்திலிருந்து சைவத்துக்கு வந்த துறவியான அப்பர் பாடுகிறார்.

தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்;

தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்;

தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே;

தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே.

(திருமந்திரம் 829)

என்று காமத்தின் செவ்வி தலைப்படுகிறவனுக்குத் தலைமை தருகிறார் திருமூலர். பெண்ணோடு இருந்து போகம் செய்ய எண்ணாமல் பெண்ணோடு இருந்து யோகம் செய்யத் தலைப்பட்டால், அவன் தன் வழியில் தானே உருவாக்கிக்கொண்ட ஞானத்துக்குத் தலைவன்; தன் வழியில் தானே உருவாக்கிக்கொண்ட போகத்துக்குத் தலைவன்; தன்வழியில் தனக்குள்ளே போகும் தலைவன்; தன்வழியில் தன் பொறிகள் ஐந்தையும் ஆளும் தலைவன்.

‘மங்கையோடு இருந்தே யோகு செய்வானை’ என்று பாடுகிறார் திருமாளிகைத் தேவர் (9:13:11). பெண்ணை வேறாக்கிச் செய்கிற எதுவும் நிறைவுறாது. பெண்ணை ஆணும் ஆணைப் பெண்ணும் தனதாக்க வேண்டும்; தானாக்க வேண்டும். மாதொருபாகன் என்பவன் கும்பிடும் கடவுளாக அல்ல, குறிக்கோளைக் காட்டும் கடவுளாக முன்னிறுத்தப்பட்டவன்.

(பேதமற்ற ஞானம் தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x