Published : 04 Jul 2018 05:10 PM
Last Updated : 04 Jul 2018 05:10 PM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 38: மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

பு

லன்களின்வழி போவது குற்றம் என்றும், புலன்களின் போக்கை மறுப்பதும் மறிப்பதுமே விடுதலைக்கான வழிமுறை என்றும்தான் துறவு நெறிகள் பேசுகின்றன. புலன்களின்வழி போகும் உள்ளத்தை மறித்து இழுப்பது மிகவும் கடினம். பள்ளத்தை நோக்கிப் பாய்வது நீரின் இயல்பாவதுபோல, எப்போதும் இன்பத்தை நோக்கிப் பாய்வதே உயிரின் இயல்பு.

புலன்கள் தங்கள் செய்திகளை மனத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றன. ஒரு குளத்தைப் போல இருக்கும் மனத்தில் புலன்கள் கற்களை வீசி அலை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அலை பாய்கிற மனக்குளம் யாரையும் நிலைகொள்ள விடாமல் செய்கிறது. மனம் அடங்காமல் ஏதொன்றும் இயலாது.

தான்என்ற ஆணவத்தை நீக்க மாட்டார்;

சண்டாளக் கோபத்தைத் தள்ள மாட்டார்;

ஊன்என்ற சுகபோகம் ஒழிக்க மாட்டார்;

உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார்;

பான்என்ற ஞானவெள்ளம் உண்ண மாட்டார்;

பதறாமல் மவுனத்தே இருக்க மாட்டார்;

வான்என்ற பொருள்என்ன எளிதோ மைந்தா?

மகத்தான மனம்அடங்க எய்யும் காணே!

(சட்டைமுனி முன்ஞானம் நூறு, 32)

- என்கிறார் சட்டைமுனிச் சித்தர். ஆணவம், கோபம், சுகபோகம், பெண் இன்பம் எதையும் கைவிடுவதில்லை; குறைந்தபட்சம் அமைதி காக்கவும் முடிவதில்லை; விடுதலையைத் தேடுகிற முயற்சியும் இல்லை; அதற்கான விருப்பமும் இல்லை; எதுவுமே இல்லாமல் விடுதலை எப்படிக் கிடைக்கும்? அது என்ன அவ்வளவு எளியதா? அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம்? மனம் அடங்க வேண்டும்; அடங்கினால் விடுதலை கைகூடும் என்கிறார்.

ஆனாலும்,

தெளிவதுதான் எளிதல்ல வாய்ப்பேச்சல்ல

சிங்காரப் பெண் கண்டால் ஞானம் போச்சே!

(சட்டைமுனி முன்ஞானம் நூறு, 89)

என்ற சிக்கலையும் சொல்கிறார்.

மாறுஆன பெண்ஆசை விட்டேன் என்பார்;

மருவிஅவள் தனிப்பட்டால் சரணம் செய்வார்!

தாறுஆன சயனத்தில் பெண்தான் சொல்லில்,

சதாசிவனால் முடியாது; மற்றோர் ஏது?

(சட்டைமுனி முன்ஞானம் நூறு, 87)

‘மருவு பெண் ஆசையை விட்டேன்’ என்று சொல்கிறவர்களெல்லாம், தனியாக ஒரு பெண் எதிர்ப்பட்டு விருப்பமும் தெரிவித்தால், மண்டியிட்டுக் கும்பிட மாட்டார்களா? ‘வேண்டாம்’ என்று சொல்வதற்குச் சதாசிவனாலேயே முடியாதே, இவர்கள் என்ன?

போகத்தை ஓகமாக்கிய திருமூலர்

இங்கேயும் தலைகீழ்ப் புரட்டொன்றைச் செய்கிறார் திருமூலர். பெண்ணாசையின்மீது கண்டனங்களே நிறைந்திருக்கிற உயிர்த் தொழிற்களத்தில், பரியங்க யோகம் என்ற பெயரில் அதை அனுமதித்துக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள யோசனை சொல்கிறார். பரியங்கம் என்றால் கட்டில். பரியங்க யோகம் என்பது கட்டில்மேல் செய்கிற ஓகம். போகத்தை ஓகமாகவும் சிற்றின்பத்தைப் பேரின்பமாகவும் ஆக்குகிற முயற்சி.

பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே முற்ற வரும்பரிசு உந்தீபற...

பேரின்பம் ஆன பிரமக் கிழத்தியொடு

ஓர்இன்பத்து உள்ளான்என்று உந்தீபற...

(திருவுந்தியார், 33 மற்றும் 34)

-என்று பாடுகிறது சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான திருவுந்தியார். பேரின்பத்தின் தொடக்கம் சிற்றின்பம்; சிற்றின்பம் முற்றினால் பேரின்பம். கடவுளே தனக்குரிய பெண்ணோடு கலந்து பேரின்பம் பெறுகிறான் என்று பேசுகிறது.

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம்; வைகலும்

எண்ணில்நல் லகதிக்கு யாதும்ஓர் குறைவுஇலை;

கண்ணில்நல் அஃதுஉறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

(தேவாரம், 3:24:1)

என்று சம்பந்தர் பாடும்போது தொனிப்பதும் அதுதான். விடுதலை வேண்டுமானால் புலன்களை ஒறுக்க வேண்டும், பெண்ணை மறுக்க வேண்டும் என்று சிலரால் உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: இந்த மண்ணுக்கு உரிய விதத்தில் நலமான இன்ப வாழ்வை நீங்கள் வாழலாம்; அடைய விரும்புகிற விடுதலையும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் கடவுளைப் பாருங்கள்; அவரே பெண்ணோடுதான் இருக்கிறார்.

நாவுக்கரசர் இன்னும் பேசுகிறார்:

ஒருத்திதன் தலைச்சென் றாளைக்

கரந்திட்டான்; உலகம் ஏத்த

ஒருத்திக்கு நல்லன் ஆகி

மறுப்படுத்து ஒளித்து மீண்டே

ஒருத்தியைப் பாகம் வைத்தான்;

உணர்வினால், ஐயம் உண்ணி,

ஒருத்திக்கும் நல்லன் அல்லன்,

ஒற்றியூர் உடைய கோவே!

(தேவாரம், 4:45:6)

தன் தலையில் உட்கார்ந்த கங்கையிடம் அவள் ஒருத்திக்கு மட்டுமே நல்லவன்போல நாடகம் நடித்து, உமையாளுக்குத் தெரியாமல் கங்கையைச் சடையால் மூடி மறைத்தான்; மற்றொருத்தியாகிய உமையாளைக் கங்கைக்குத் தெரியாமல் தன் உடம்பின் ஒரு பாகத்திலேயே ஒளித்து வைத்தான். பிச்சை எடுத்துத் தின்கிறவன் செய்கிற சேட்டையைப் பார்த்தீர்களா? அவளுக்கு நல்லவன் என்று அவளிடமும் இவளுக்கு நல்லவன் என்று இவளிடமும் வேடம் போடுகிற இவன் எவளுக்குமே நல்லவன் இல்லை.

புலன்களை மறுதலிக்காமல் உடன்படுவது

எனவே புலன்களை, மாற்றுப் பாலினத்தை மறுதலிக்காமல் உடன்படுவதும், அவற்றில் தோய்ந்து கடப்பதும் சைவ மரபின் பொதுவான முன்வைப்பு. அதனை மிகவும் ஊக்கமாக, போகமும் ஒருவகை ஓகமே என்றும் போகத்தின் வழி ஓகம் என்றும் அயராமல் முன்னெடுக்கிறவர் திருமூலர்.

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய

வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்

காசக் குழலி கலவி யொடும்கலந்து

ஊசித் துளைஉறத் தூங்காது

போகமே

(திருமந்திரம் 825)

ஒப்பனைக்கான உருப்படிகளைப் பூசி, தலைமுடியில் வாசனை நெய்கள் தடவி, சீவிச் சிங்காரித்து, நறுமணமுள்ள பூவையும் சூடி வரும் பெண்ணோடு கலக்கலாம்; கலக்கும்போது அவளிடத்தில் கவனம் வைக்காமல், உங்கள் மூச்சு மடங்கித் திரும்புகிற ஊசித் துளையில் கவனம் வைத்தால், உங்கள் போகம் ஓகமாக மடைமாறும்.

யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்து

ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குஉறாப்

போகம் சிவபோகம் போகிநல் போகமாம்

மோகம் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

(திருமந்திரம் 1960)

ஆண், பெண் இருவரின் தேகமும் கலந்து தழுவினாலும் அறிவு கலங்கி அழியாதிருக்க வேண்டும். மோகத்தோடு தழுவுவது கோளாறு. மோகம் அறிவைக் கலக்கி அழிக்கும். மோகம் கொள்ளாது தழுவினால் அங்கே விளைகிற போகம் சம்போகமில்லை; சிவபோகம். இவ்வாறு அறிவு அழியாமல் கலப்பதே ஓகம்.

பார்இல்லை நீர்இல்லை பங்கயம் ஒன்றுஉண்டு

தார்இல்லை வேர்இல்லை தாமரை பூத்தது

ஊரில்லை காணும் ஒளிஅது ஒன்றுஉண்டு

கீழ்இல்லை மேல்இல்லை கேள்வியில் பூவே

(திருமந்திரம் 844)

ஒரு தாமரைப் பூக்க வேண்டுமானால் மண் வேண்டும்; நீர் வேண்டும்; வேர் வேண்டும்; தண்டு வேண்டும்; பூப்பதைக் காண்பதற்கு ஊர் வேண்டும்; காட்டும் ஒளி வேண்டும்; இவற்றில் ஒளியைத் தவிர எதுவுமே இல்லாத நிலையில் ஒரு பூப்பூத்தது என்று சொன்னால் நம்புவீர்களா? அதென்ன பூ அது, விண்ணிலும் மண்ணிலும் கேள்விப்படாத பூ என்பீர்கள். அது காட்சியில் விளைந்த பூ அன்று; கருத்தில் விளைந்த பூ. பரியங்க ஓகமும் அந்தப் பூவைப் போலத்தான். ஓகம் என்றால் ஆசனங்கள் செய்ய வேண்டும்; காடு, மலை போன்ற இடங்களில் தனித்திருக்க வேண்டும் என்பனவெல்லாம் இல்லாமல், கட்டிலில் துணையாளுடன் அறிவு சிதையாமல் கூடிக் கிடப்பதும் ஓகந்தான் என்று பேசுகிறார் திருமூலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x