Last Updated : 20 Jun, 2018 07:19 PM

 

Published : 20 Jun 2018 07:19 PM
Last Updated : 20 Jun 2018 07:19 PM

ஆன்மா என்னும் புத்தகம் 08: ஒரு நேரத்தில் ஒரு செயல்

வியட்நாம் பவுத்த துறவியான டிக் நாட் ஹான், 1968-ம் ஆண்டு வியட்நாம் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் அமைதி உரைகள் நிகழ்த்த பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த உரைகளில், அவர் வியட்நாமின் கிராமப்புற வாழ்க்கைமுறையை எடுத்துக்கூறி, ‘எதிரி’ என்பவனும் எல்லாரையும் போன்றவன்தான் என்பதை அமெரிக்க மக்களுக்கு விளக்கினார். வியட்நாம் போரை மார்ட்டின் லூதர் கிங் எதிர்த்ததற்கு இவரது அமைதி உரைகளின் தாக்கமும் ஒரு காரணம். மார்ட்டின் லூதர் கிங், டிக் நாட் ஹானை நோபல் அமைதிப் பரிசுக்காகப் பரிந்துரை செய்திருக்கிறார்.

டிக் நாட் ஹான் நாடுகடத்தப்பட்டு பிரான்ஸில் வசித்தபோது, தான் வியட்நாமில் தொடங்கிய பவுத்த பள்ளியின் மூத்த பணியாளர் சகோதரர் குவாங் அவர்களுக்கு எழுதிய கடிதமே ‘The Miracle of Mindfulness: An Introduction to the Practice of Meditation’ என்ற புத்தகம். போரின்போது, பவுத்த பள்ளியின் பணியாளர்கள் அமைதியைக் கடைப்பிடிக்க நாட் ஹான் கடிதத்தில் விளக்கியிருந்த தியான பயிற்சிகள் உதவின. இந்தப் புத்தகத்தில் போர், அமைதி ஆகியவற்றுக்கான தீர்வுகளை அவர் முன்வைக்கவில்லை. மாறாக, அன்றாட வாழ்க்கையில் நமது எண்ணங்களை ஒழுங்கமைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறார்.

21chgow_Miracles of Mindfulnessதற்கண உணர்வு

மனிதர்கள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதால் அவர்கள் தற்கண உணர்வுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படவில்லை என்று சொல்கிறார் நாட் ஹான். ஆனால், தற்கண உணர்வேயில்லாமல் பொறுமையின்மை, கோபம் போன்றவற்றுடன் ஒரு பணியைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதையும் அவர் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார். ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டும் செய்வதால் தற்கண உணர்வைக் கைக்கொள்ள முடியும் என்று சொல்லும் அவர், இதன்மூலம் அமைதியை உடனடியாகக் கண்டடைய முடிவதையும் எடுத்துரைக்கிறார்.

தற்கண உணர்வை அடையும் வழிகள்

தற்கண உணர்வின் முரண் என்னவென்றால், அதை நம்மால் எளிதாக மறந்துவிட முடியும் என்பதுதான். நம் எண்ணங்கள் உடனடியாக அலைய ஆரம்பித்துவிடும். இந்தப் புத்தகம் தற்கண உணர்வைத் தக்கவைப்பதற்கான சிறந்த வழிகளை எளிமையாக விளக்குகிறது. ‘மூச்சுப் பயிற்சி’, ‘சுய கண்காணிப்பு’, ‘புன்னகை’, ‘தற்கண உணர்வுக்கான நாள்’ மூலம் தற்கண உணர்வை அடைவதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது.

மூச்சுப் பயிற்சி: “சுவாசத்தை ஆட்சி செய்யக் கற்றுக்கொண்டால், நம் உடல்களையும் மனங்களையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாக அர்த்தம்” என்கிறார் நாட் ஹான். துயரமாக இருக்கும்போது, தியானத்தில் ஈடுபட முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சுவாசத்தின் மீது கவனத்தைத் திருப்பும்போதே துயரச் சுமையிலிருந்து படிப்படியாக விடுபட்டுவிட முடியும் என்கிறார் அவர்.

மூச்சுப் பயிற்சியைச் சரியாக மேற்கொள்பவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும். எண்ணங்கள் தலையில் கூட்டம் கூட்டமாகத் தோன்றிக் கொந்தளிக்கும்போது, உடலுக்குக் கவனத்தைத் திருப்பி பிரக்ஞையுடன் சுவாசத்தை மேற்கொண்டால், மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் ஏற்படுவதை உணர முடியும்.

சுய கண்காணிப்பு: தற்கண உணர்வு என்பது தியானப் பயிற்சியின்போது மட்டும் இருப்பதில்லை. அது இருபத்திநான்கு மணிநேரமும் நம்மிடம் இருப்பது. எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும் நமக்குத் தற்கண உணர்வு இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களைத் தொடர்ந்து நீங்கள் கண்காணிக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களுக்கு நீங்களே அமைதியாக விளக்க வேண்டும். உதாரணமாக, “நான் இந்தப் பாதையின் வழியாக என் கிராமத்துக்குச் செல்கிறேன்” என்று சொல்லும்போது, நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியின் அற்புதத்தையும் உங்களால் பாராட்ட முடியும்.

புன்னகை: காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே புன்னகையுடன் விழிப்பது தற்கண உணர்வை அடைவதற்கான சுவாரசியமான வழி. இந்தப் புன்னகையை நாள் முழுவதும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். கோபமாக இருக்கும்போது, இசை கேட்கும்போது என நேரம் கிடைக்கும்போதெல்லாம் புன்னகையுங்கள். இந்தப் புன்னகை உணர்வுகளில் கரையாமல் தற்கணத்தில் உங்களை இருத்த உதவும்.

தற்கண உணர்வுக்கான நாள்: ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தற்கண உணர்வைப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்துகிறார் நாட் ஹான். அந்த நாளில் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளிப்பது என எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலைப் பொறுமையாகவும் விருப்பத்துடனும் அனுபவித்தும் செய்யச் சொல்கிறார் அவர். வாரத்தில் ஒரு நாள் இந்தத் தற்கண உணர்வுப் பயிற்சியை மேற்கொண்டால் அது வாரம் முழுவதும் பெரும் பயனைத் தரும் என்கிறார் அவர்.

இக்கணமே சிறந்தது

இந்தப் புத்தகத்தில், டால்ஸ்டாய் சொன்ன கதையை டிக் நாட் ஹான் மேற்கோள் காட்டுகிறார். ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் எது சிறந்த நேரம்? ஒரு பணியை இணைந்து மேற்கொள்வதற்கான முக்கியமான நபர்கள் யார்? எப்போதுமே செய்ய வேண்டிய முக்கியமான பணி எது? என்ற மூன்று கேள்விகளுக்கான பதிலை ஓர் அரசர் தேடினார். அவசரகதியான வாழ்க்கையில் எதையாவது சாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் பலரும் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்தக் கதையில் டால்ஸ்டாய் சொல்லியிருக்கும் பதில் இதுதான்: மிகச் சிறந்த நேரம் என்பது இக்கணம்தான். மிக முக்கியமான நபர் என்பவர் எப்போதும் உங்களுடன் இருப்பவர்தான். மிக முக்கியமான பணி என்பது உங்களுடன் சேர்ந்து பயணிப்பவரை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்”.

மனிதகுலத்துக்கு மாபெரும் சேவை செய்வதற்கு நாம் முயன்றுகொண்டிருப்பததைவிட, இப்போது நாம் இருக்கும் நிலையில், நம் அருகிலிருப்பவர்களுக்கு எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்வதே சரியான செயல் என்று சுட்டிக்காட்டுகிறார் டிக் நாட் ஹான். நமக்கு அருகிலிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கு வழிசெய்யாமல் நம்மால் உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற முடியாது என்று இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் அவர்.

21chgow_Thich Nhat Hanh டிக் நாட் ஹான் right

இந்தப் புத்தகத்தை வியட்நாமிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாளர் மோபி ஹோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தியானப் பயிற்சிக்கான ஒரு எளிமையான வழிகாட்டியாக இந்தப் புத்தகம் பார்க்கப்பட்டாலும் ஆழமான மன அமைதிக்கான தேடல் இருப்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது.

டிக் நாட் ஹான்

1926 –ம் ஆண்டு வியட்நாமில் பிறந்தார். தன் பதினாறாவது வயதில் பவுத்த துறவியானார். வியட்நாம் போர் பாதிப்பிலிருந்து அகதிகளை மீட்பதற்காக ‘engaged Buddhism’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். தன் நாற்பதாவது வயதில் வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், பிரான்ஸ் நாட்டில் ‘ப்ளம் வில்லேஜ்’ மையத்தில் தற்போது வாழ்ந்துவருகிறார். இவர், ‘Being Peace’, ‘The Sun My Heart’, ‘Living Buddha’, ‘A Guide to Walking Meditation’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x