Published : 07 Jun 2018 11:03 AM
Last Updated : 07 Jun 2018 11:03 AM

ஆன்மிக நூலகம்: ஞானம் எவ்வாறு வாய்க்கும்?

ஞானம் எவ்வாறு வாய்க்கும்? அதனை நூல்களால் பெறமுடியுமா? அல்லது, உலக ஆசிரியர் ஒருவர் வழியாகப் பெறக் கூடுமா?

உண்மை ஞானத்தை இவ்விரண்டின் வழியாகவும் பெற முடியாது.

உலக அறிவை நூல்களின் வழியாகப் பெறாலம். உண்மை ஞானம் என்பது உலகியலை விட்டு நீங்கிப் பெற வேண்டிய ஞானம். இந்த ஞானத்தை உலக நூல்கள் எவ்வாறு தர இயலும்?

நூல்கள் என்பவை சொற்களின் கூட்டம். சொற்களெல்லாம் மாயையின் காரியங்கள். மாயை என்பது பாசங்களுள் ஒன்று. ஆதலால் சொற்கள் மூலமாக வரும் ஞானம் பாச ஞானமேயாகும். அப்பாச ஞானம் நிலையற்றது; நீங்கக் கூடியது. அத்தகைய நிலையற்ற பாச ஞானத்தால் நிலையற்ற பொருட்களை அறிய முடியுமே அன்றி நிலைத்த மெய்ப்பொருளை அறிய இயலாது.

மேலும் நூல்கள், அவை ஞான நூல்களேயாயினும், உறுதியான அறிவுத் தெளிவத் தரமாட்டா; பல தலைப்பட்ட ஐயவுணர்வுகளையே தருவனவாகும். கடல் நீரை ஒருவர் நேரே பருகினால் அது தாகத்தைத் தீர்க்குமா? அதுபோல ஞான நூல்களை நேரே பயின்றால், அது ஐயங்களைப் பல வகையில் எழுப்புமேயன்றி அந்த ஐயங்களைத் தீர்க்காது.

பக்குவம் வந்த காலத்தில் ஒருவர் ஞான நூலைப் பயின்றால் அப்பொழுதும் ஞான நூல் அவர்க்கு ஞானத்தைத் தராதோ? என்று நீ கேட்கலாம். அப்பொழுதும் தராது என்பதுதான் அதற்கான பதில்.

பையனைப் பள்ளியில் சேர்ப்பதற்கும், படிப்புச் சொல்லித் தருவதற்கும் ஏற்ற பருவம் வந்துவிட்டது என்றாலும் படிப்பறிவைப் பையன் தானாகப் பெற்றுவிட முடியுமா? அதுபோலப் பக்குவம் வந்தாலும் ஒருவர் தாமாக ஞானத்தைப் பெற்றுவிட முடியாது.

உலக ஆசிரியருள் ஒருவர் மூலமாக ஞானத்தைப் பெறலாமோ? எனில், அவர் அதனைத் தருதற்கு உரியர் அல்லர். ஏனென்றால், ஞானத்தைப் பக்குவம் வாராத போது உணர்த்துவதும் குற்றம்; பக்குவம் வந்தவுடன் உணர்த்தாதிருப்பதும் குற்றம் என்று சொல்லப்படும்.

பக்குவம் வாராதபோது ஒருவர்க்கு ஞானத்தை உணர்த்துவது வீண். அதனால் யாதொரு பயனும் விளையாது. தகுதி பெறாத ஒருவர்க்கு ஞானத்தைத் தருவது, வயது நிரம்பாத சிறு குழந்தையின் கையில் பொற் கிண்ணத்தை அளிப்பது போன்றது. குழந்தை அதன் அருமை தெரியாமல் வீசி எறிந்துவிடும். அதுபோலப் பக்குவம் இல்லாதவரும் தாம் கேட்ட ஞானப்பொருளை ஒரு செவியால் வாங்கி மறு செவியால் விட்டுவிடுவர்.

இனி பக்குவம் வந்தவர்க்கு ஞானத்தை உணர்த்தாது விடின், பாசத்தினின்றும் விடுபட அவர்க்கு விருப்பம் இருந்தும் விடுபட மாட்டாராய் அவர் மீண்டும் பந்தத்துட்படுவத்றகு ஏதுவாகும்.

பக்குவம் என்பது ஆன்மாவின் அறிவில் நிகழ்வது. அது புறத்தே புலப்படுவதன்று. ஒருவர்க்குப் பக்குவம் வந்துள்ளது என்பதையும், இன்னும் வரவில்லை என்பதையும் அறிய வல்லார் யார்? உலக ஆசிரியன்மார் அதனை அறியும் வல்லமை உடையவரல்லர். ஆதலால் அவர் பக்குவம் வருதற்கு முன்னேயே ஞானத்தை உணர்த்தப் புகும் குற்றத்துக்கு ஆளாக நேரிடும். அதுபோல, ஞானம் வந்த பின்னும் அதனைத் தராது வாளா இருந்து அக்குற்றத்துக்கு ஆளாகக் கூடும். அது பற்றியே உலக ஆசிரியன்மார் ஞானத்தைத் தருதற்கு உரியரல்லர் என்று சித்தாந்தம் வலியுறுத்துகிறது.

சைவ சித்தாந்த விளக்கம்

ஆ. ஆனந்த ராசன்

நர்மதா பதிப்பகம்

10, நானா தெரு, பாண்டி பஜார்,

தியாகராய நகர், சென்னை- 17

தொலைபேசி : 044- 24336313

விலை : ₹120/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x