Last Updated : 17 May, 2018 10:45 AM

 

Published : 17 May 2018 10:45 AM
Last Updated : 17 May 2018 10:45 AM

கிறிஸ்துவின் தானியங்கள்: வாழ்வு தரும் உணவு

மனிதரின் அடிப்படைத் தேவைகளில் உணவும் நீரும் முதன்மையானவை. சாதாரண உணவு உயிரோடு இருப்பதற்கு உதவுகிறது. ஆனால், கடவுள் தரும் உணவு உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. இங்கு வாழ்வு எனக் குறிப்பிடப்படுவது ஆன்மிகம் சார்ந்தது. உயிரோடு வாழ்வது என்பது கடவுளோடு இணைந்த வாழ்வு. அந்த வாழ்வு அவருடைய மகன் இயேசுவால் எளிதாக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவை அன்றாட வயிற்றுப் பாட்டுக்கான உணவை வழங்கும் வல்லமை பெற்றவர் என்று, அவர் செய்த சில அற்புதங்களைக் கண்டு அவரை ஓர் உணவுத் தொழிற்சாலையாகக் கருதிக்கொண்டார்கள். அவரிடம் திரும்பத் திரும்ப அதையே எதிர்பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசுவின் பதில் அவர்களைத் தெளிவடையச் செய்தது.

பசியும் இல்லை தாகமும் இல்லை

யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 6-ல் 30 முதல் 35 இறைவசனங்களை வாசித்துப் பாருங்கள். இயேசு, கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மக்களில் சிலர் அவரிடம் வந்து, “ஐயா…நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் அருள் அடையாளம் காட்டுகிறீர். எகிப்திலிருந்து மீட்டுவரப்பட்ட எங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் தங்கியிருந்தபோது ‘மன்னா’ என்ற உணவை உண்டார்களே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளப்பட்டது’ என மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவை அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார். உடனே அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது”என்றார்.

நம்பிக்கையின் உயர்வு

இயேசுவை அன்றாடம் அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு அவர் வழியே உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் தண்ணீருக்குக் கூட வழியில்லாத பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ‘மன்னா’என்னும் உணவைப் பெற்றுக் கொடுத்தார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ‘தோரா’ என்னும் திருச்சட்டத்தை வழங்கினார்.

இதைத் தங்கள் ஆன்மிக வரலாற்றின் மூலம் அறிந்து வாழ்ந்த மக்கள், இயேசுவும் அதே உணவைப் பெற்றுத்தருவார் என நினைக்கிறார்கள். இயேசுவால் செய்ய முடியாத அதிசய செயல் ஏதாவது உண்டா எனத் தங்களின் எதிர்பார்ப்புக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அதிசயமான விதத்தில் ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய நிகழ்வும் அவர்கள் இப்படி எதிர்பார்க்கக் காரணமாக அமைகிறது.

ஆனால், இயேசு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை அவர்களுக்கு வழங்குகிறார். அது மன்னாவைப் போல் சில காலம் மட்டுமே தரப்பட்ட உணவு அல்ல. என்றும் ஜீவித்திருக்கும் உயிருள்ள உணவு. இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும். இது எவ்வாறு நிகழும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார். முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும்.

நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு இறை நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இயேசுவை நம்புவது என்றால் என்ன? வரலாற்றில் வாழ்ந்து, இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே கையளித்ததால் நமக்கு உணவாக மாறினார். இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்.

உயிருள்ள உணவு

இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும். இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடக்கும் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு. நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே தன் மகனின் வழியாக நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் ஏற்பாடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x