Published : 17 May 2018 10:44 AM
Last Updated : 17 May 2018 10:44 AM

தெய்வத்தின் குரல்: மௌனம் ஈஸ்வர ஆராதனைக்குச் சாதனம்

மௌ

னம் என்றால் எந்த விதத்திலும் அபிப்ராயம் தெரிவிக்காமலிருக்க வேண்டும். வாயை மட்டும் மூடிக்கொண்டு ஏதாவது ஜாடை காட்டித் தெரிவித்துக்கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை. அவசியமானதற்கு மட்டும் எழுதி வேண்டுமானால் காட்டலாம். ‘காஷ்ட மௌனம்’என்று மரக்கட்டை மாதிரி இருப்பதாகச் சங்கல்பித்துக் கொண்ட சமயங்களில் ஜாடை காட்டுவது, எழுதிக் காட்டுவது எதுவுமே நிச்சயமாகக் கூடாது.

ஆரம்பத்தில் எல்லாக் காரியங்களையும், எண்ண ஓட்டத்தையும் விட்டு மௌனமாயிருப்பதென்றால் முடியாதுதான். அந்த நிலையில் சைகை, எழுதிக் காட்டுவது இவற்றோடாவது மௌனம் இருக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான். என்ன ஜாடை காட்டினாலும், எழுதினாலும் பேசுகிற அளவுக்கு வளவளப்பும் விருதாவும் இருக்காது அல்லவா? சதா அரித்துக்கொண்டிருக்கிற நாக்கை எப்படியும் அன்றைக்குக் கட்டிப் போடுகிறோமல்லவா? அந்த மட்டுக்கும் நல்லதுதான்.

இப்படி ஆரம்பித்து, அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாகச் சித்தத்தின் ஆட்டங்களை விட்டுவிட்டு, மௌனம் என்றால் மனசுக்குப் பரம சாந்தி என்று ஆக்கிக்கொண்டு, அப்படியே அலையில்லாத சமுத்திரம் மாதிரி ஆகிவிட வேண்டும். குறைபாட்டுடனாவது ஏதோ ஒரு இடத்தில் ஆரம்பித்துவிட வேண்டும். அப்பியாசத்தால் குறைகள் குறைந்துகொண்டே போய் பூர்ண நிலை வரும்; நிஜ மௌனம் சித்திக்கும்.

தனி ஆராதனை தேவையில்லை

இப்போது ஆரம்பிக்கிற மௌனம் ஈச்வர ஆராதனைக்கு ஒரு சாதனம். பிற்பாடு பூர்த்திஸ்தானத்தில் அந்த மௌனமே, ‘ஈச்வரன் வேறேயாக இல்லை. அவனுக்குத் தனியாக ஆராதனை என்று பண்ண வேண்டியதில்லை’ என்ற த்ய லக்ஷ்யமாக நிஜ ரூபத்தில் பிரகாசிக்கும். வாய் பேசவில்லை என்பது மட்டுமின்றி, கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, எல்லாவற்றுக்கும் மேலே மனசில் ஓர் எண்ணம்கூட எழவில்லை என்று ஆகிவிடுவதுதான் அந்த லக்ஷ்ய ஸ்திதியான நிஜ மௌனம்.

நாம் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும்போதுகூட எறும்பு ஒன்று மேலே ஊறினால் அதை அப்படியே தேய்த்து விடுகிறோம்; கொஞ்சம் குளிர்காற்று அடித்தால் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறோம்; பக்கம் மாறிப் படுக்கிறோம். காலமே (காலையில்) எழுந்திருக்கிற போது நமக்கே இது எதுவும் ஞாபகமிருப்பதில்லை. அதாவது இந்த விஷயங்கள் பூர்ணமாக நம் ப்ரக்ஞைக்கு எட்டாமலே இப்படியெல்லாம் பண்ணியிருப்போம். ஆனாலும், அந்தத் தூக்க நிலையில்கூட சரீராபிமானம் போகாததால்தான் சரீர ரக்ஷணைக்காக இந்தக் காரியங்களைப் பண்ணியிருக்கிறோம்.

எந்தக் காரியமானாலும் அதை மூளையின் இயக்கத்தின் கீழே நரம்பு மண்டலம்தான் பண்ணுகிறது. அது உள்ளே இத்தனை சரீராபிமானம் ஊறியதாக இருக்கிறது. நம் இச்சையின் பேரில் ‘வாலன்டரி’யாக இல்லாமல், தன்பாட்டுக்கு நரம்புகள் அநேகக் காரியங்களைப் பண்ணுகின்றன. கழுத்து, இடுப்புப் பக்கங்களில் ஏதாவது நிமிண்டுகிற மாதிரிப்பட்டால் ‘குறுகுறு’ என்று பண்ணிச் சிரிப்பாக வருகிறது. பயமாஇருந்தால் ‘அல்ப ஸங்க்யை’ வருகிறது; பெரிய கஷ்டம் வந்தாலோ வயிற்றையே கலக்குகிறது. ஒருத்தன் கொட்டாவிவிட்டால் மற்ற பேரும் கொட்டாவிவிடுகிறோம். இதெல்லாம் நரம்புகளின் ‘இன்வாலன்டரி’ காரியங்கள்.

வெற்றி கண்ட ‘ஜிதேந்திரியன்’

நிஜ மௌனத்தில் எப்படியிருக்கும்? உடம்பின் மேல் மலைப் பாம்பே போனாலும் தெரியாது. ஒரு reflex-ம் இருக்காது. குளிரோ வெயிலோ எதுவானாலும் தெரியாமல் அடித்த சிலையாக நிஷ்டையில் இருப்பான். தேஹாத்ம புத்தி அடியோடு போய்விட்டதால், தேஹரக்ஷணை பண்ணிக்கொள்ள வேண்டுமென்று உள்ளூர இருக்கும் அபிமானம் இன்வாலன்ட்ரியாகக்கூட இல்லாமல் போய், அவனுடைய நரம்பு சலிக்கவே சலிக்காது. அவன்தான் எல்லாப் புலன்களையும் அடக்கி வெற்றி கண்ட ‘ஜிதேந்திரியன்’.

நிஜ மௌனத்துக்கு நம்மைப் பழக்கிக்கொண்டோமானால், அப்படிச் செய்யும்போது நம்முடைய மனுஷ்ய வேகங்கள், பாவங்கள் எல்லாம் போய்விடும். உள்ளுக்குள்ளே இருக்கிற பொறி, பரமாத்ம ஜ்யோதிஸ்ஸின் பொறி, இப்போது நம்முடைய இந்திரிய ஜீவனத்திலே சாம்பலில் மூடிப்போனதுபோல் மங்கி இருக்கிற பொறி, மௌன ஸாதனையில் கண கண வென்று ஜ்வலிக்க ஆரம்பிக்கும். எந்தப் பரமாத்மா ஜ்யோதிஸ்ஸிலிருந்து இந்தப் பொறி வந்ததோ அதை நோக்கிப் போய் அதிலே கலந்து அதுவாகவே ஆகிவிடுவதற்காக.

அது மேலே மேலே பிரகாசித்துக்கொண்டு போகும். இப்படி நடக்க நடக்க இப்போது நம்மிடம் பற்றியெரிகிற இந்திரிய வேகங்கள் தணிந்து மங்கி அணைந்துகொண்டே வரும். கடைசியில் ஏக ஜ்யோதிஸ்ஸாக, ‘நிவாத தீபம்’ என்கிறபடி, காற்றடிக்காத இடத்தில் உள்ள தீபமாக ஆத்மா மட்டுமே ப்ரகாசிக்கும். ஜீவாத்மா, பரமாத்மா என்ற பேதமில்லாத ஏக ஜ்யோதிஸ். அதுதான் மௌனத்தின் பூர்த்தி ஸ்தானம்.

ஜலத்தை கலக்கு கலக்கு என்று கலக்கிக்கொண்டிருந்தால் அதற்குள்ளே இருக்கிற ஒரு முத்து எப்படித் தெரியும்? நாம் அநேக எண்ணங்களால் மனசைக் கலக்கிக்கொண்டிருப்பதால்தான் உள்ளேயிருக்கும் ஆத்மா என்ற முத்து தெரியவில்லை. எண்ண அலைகளையெல்லாம் நிறுத்திவிடுவதுதான் நிஜ மௌனம். அதற்கு உபாயமாயிருப்பது இப்போது நாம் அனுஷ்டிக்க வேண்டிய வாய் மௌனம். யோக ஸாம்ராஜ்யத்துக்குள்ளே பிரவேசிப்பதற்கு முதல் வாசலே மௌனம்தான் என்று ஆசார்யாள் “விவேக சூடாமணி” யில் சொல்லியிருக்கிறார்: யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத : (ச்லோ.367) .

(தெய்வத்தின் குரல் மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x