Published : 17 May 2018 10:44 AM
Last Updated : 17 May 2018 10:44 AM

கோவிந்தனுக்கு உபதேசித்த ஆலமர்ச் செல்வன்

தி

ருமாலுக்கு சிவபெருமான், குருவாக வீற்றிருந்து உபதேசம் செய்த திருத்தலம் கோவிந்த வாடி. இங்கே மூலவராக வீற்றிருந்து தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

குபன் என்ற அரசனுக்கும் ததீசி முனிவருக்குமிடையே பகை ஏற்பட்டது. இது பற்றி திருமாலிடம் குபன் முறையிட்டான். தம் பக்தனைக் காக்கும் பொருட்டு, திருமால் ததீது முனிவர்மீது சக்கராயுதத்தை ஏவினார். முனிவரின் வஜ்ஜிர உடலைத் தாக்க முடியாமல் சக்கராயுதம் மடிந்தது. இதையடுத்து, திருமால், ஸ்ரீதேவி- பூதேவிகளுடன் பூலோகம் வந்தார்.

அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி, அதில் நீராடி சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். திருமாலின் தவத்துக்கு மகிழ்ந்து காட்சி கொடுத்த சிவபெருமான், குருவாகி உபதேசித்தார். அந்தப் புராணப் பெருமைமிக்க க்ஷேத்திரம்தான் கோவிந்தவாடி. பின்னர் அருகிலுள்ள திருமால்பூரில் ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனைப் பூஜித்து சக்கராயுதம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அழகிய கல்வேலைப்பாடுகள்

கர்ப்பக்கிரக வெளிச்சுவரில் பத்தடி உயரக் கருங்கல் அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘கும்பஞ்சாரா’ என்னும் அழகு மிகுந்த கல் வேலைப்பாடுகள் கண்டு ரசிக்கத்தக்கவை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோயிலில், ஒரே விமானத்தினடியில் தனித்தனிச் சன்னிதிகளில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும் கிழக்கு நோக்கி கைலாசநாதர் - அகிலாண்டேசுவரி அம்பாளும் வீற்றிருக்கிறார்கள்.

இங்கே சுமங்கலி பூஜை செய்து, அம்பாளை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். நாகதேவதை சன்னிதியில், தேங்காயில் நெய் தீபமேற்றி வழிபட எல்லாக் கஷ்டங்களும் நீங்கிவிடுமென்று கருதப்படுகிறது. பக்தர்களே தேங்காயை உடைத்து அர்ச்சகரிடம் தரலாம். ஆறடி உயரத்தில் அருள்பாலிக்கும் ஆலமர்ச் செல்வனை வணங்குவோருக்கு குருதோஷம் நீங்கிக் குருபலம் கூடுகிறது.

ஆகவே, குருகோயில் என்றே இக்கோயில் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்குத் தனித்துக் காட்சி தந்தவர் என்பதால் தட்சிணாமூர்த்திக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் ‘கயிலாயம்’ அமைப்பில் மண்டபம் உள்ளது. கூர்மம், எட்டு யானைகள், எட்டு நாகங்கள், எட்டு சிம்மங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் வீர ஆசனங்களாக இருக்க அதன் மீதமர்ந்து ஞானம் அளிக்கிறார் தட்சிணாமூர்த்தி. நெற்றியில் மூன்று கண்கள், தலையில் பிறைச்சந்திரன், கங்காதேவியுடன் காட்சி தருகிறார்.

சிவதீட்சை பெற்ற பெருமாள்

சிவதீட்சை பெற்றதால் இங்கே பெருமாளுக்குச் சந்தனம், குங்குமம் கலந்து நாமம் இடுகின்றனர். சந்தன குங்கும கோவிந்தன் என்று அழைக்கப்படும் பெருமாள், தாயார்களுடன் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

சித்திரை மாதம், விசாக நட்சத்திரத்தன்று நடக்கும் விபூதிக்காவடி விழாவின்போது தட்சிணாமூர்த்திக்கு விபூதி அபிஷேகம் செய்து தரப்படும்.

பிரகாரத்தில் ஒரே சன்னிதியில் உள்ள நாகதேவதை, ராகு-கேதுவுக்குப் பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே பாலாபிஷேகம் செய்து வழிபட நாகதோஷம், ராகு-கேது தோஷம் நீங்குகிறது. நாக தேவதை தனது இருகால்களையும் பாதி மடக்கிய நிலையில் தவக்கோலத்தில் கைகூப்பி வித்தியாசமாகக் காட்சி தருகிறார்.

எப்படிச் செல்லலாம்?

காஞ்சிபுரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அரக்கோணம் செல்லும் சாலையில் திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோவிந்தவாடி உள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தினமும் திருமால்பூருக்கு ரயில் சேவை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x