Last Updated : 10 May, 2018 10:20 AM

 

Published : 10 May 2018 10:20 AM
Last Updated : 10 May 2018 10:20 AM

கிறிஸ்துவின் தானியங்கள்: இறைவனின் ஆட்சியை உணருங்கள்

க்தியில் முற்றிப்போனவர்களுக்குக்கூட ஒருநாள் இந்தச் சந்தேகம் தோன்றும்! கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதுதான் அந்தச் சந்தேகம். இன்னும் சிலர் வாழ்நாள் முழுவதும் கடவுளைக் கண்டுவிட முடியாதா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார்கள். கடவுள் இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்? உண்மையிலேயே அவர் இருக்கிறார் என்பதற்கு இந்த உலகில் காணப்படும் தீர்க்கமான ஆதாரங்கள் என்ன என்றெல்லாம் தேடிக்கொண்டிருப்பார்கள். கடவுள் பற்றி சந்தேகம் மனித உள்ளத்தில் எழக்கூடியது இயல்பானதுதான். ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதும் காரணங்களை, விளக்கங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

சீடரின் சந்தேகம்

பரலோகத் தந்தை தந்த பத்துக் கட்டளைகளை மீறாமல் வாழும் வழிமுறைகளை மக்களுக்குப் போதனையாக வழங்கினார். அவர் அரும்பெரும் அற்புதச் செயல்கள் பலவும் புரிந்தார். அவருடைய சொற்களும் செயல்களும் கடவுளின் மாட்சியையும் இந்த உலகத்தின் மீதான அவரது ஆட்சியையும் மக்களுக்கு எடுத்துக்காட்டின. அப்படியிருந்தும் இயேசுவோடுகூட இருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்ற சீடர்கள் இயேசுவின் போதனைகளை நேரடியாகக் கேட்டார்கள். அவர் புரிந்த அற்புதச் செயல்களை அருகிலிருந்து கண்ணாரக் கண்டார்கள். எனவே, அவர்கள் இயேசு யார் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், சீடர்கள் சிலர் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அவருடைய முதன்மையான சீடர்களில் ஒருவரான பிலிப்புவின் கூற்று வெளிப்படுத்துகிறது. அவர் இயேசுவைப் பார்த்து “ கடவுளாகிய தந்தையை எங்களுக்குக் காட்டும்” என்று கேட்டார்.

தந்தையை அடையும் வழி

புனித யோவான் எழுதிய நற்செய்திப் புத்தகம் அதிகாரம் 14-ல் 6 முதல்14 வரையிலான வசனங்களை வாசித்தால் பிலிப்புவுக்கு இயேசு எடுத்துகாட்டிய உண்மை புலப்பட்டுவிடும்.

அக்காலத்தில் தோமாவை நோக்கி இயேசு கூறியது: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். இயேசு இப்போது பிலிப்பை நோக்கி: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உன்னோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பதே ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று கேட்கிறாயே..? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை.

என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில், நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்” என்றார்.

நம்பிக்கையே அஸ்திவாரம்

கடவுளாகிய தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவை பிலிப்பு புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு, இயேசு வேறு என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால், பிலிப்புவின் தவறான பார்வையை இயேசு திருத்தினார். தந்தையால் அனுப்பப்பட்டு இயேசு இவ்வுலகுக்கு வந்தவர்; இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம். ஆனால், இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் அவர் எடுத்துக்காட்டிய இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையே அஸ்திவாரம்.

தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் “என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என இயேசுகூறுகிறார். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை என்பதைக் கண்டறிவோம். அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு.

நமக்கான பாடம்

இயேசுவிடம் சந்தேகம் எழுப்பிய பிலிப்புவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உண்டு. கடவுளாகிய தந்தையின் மீது கொண்ட ஆர்வத்தின் விளைவாக அவரது மறுவடிவமாகத் தன் அருகிலேயே இருந்த இயேசுவை பிலிப்பு உணரத் தவறிவிட்டார். “அனைத்துக்கும் மேலாக இறையாட்சியைத் தேடுங்கள், மற்ற அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” என்று மொழிந்த இயேசுவின் சொற்கள் இந்த இடத்தில் இன்னும் பொருத்தமானவை. இறையாட்சி என்பது கடவுள் காட்டிய வழியில் வாழ்வது. அப்படி வாழ்ந்தால் பிலிப்பைப் போல் சந்தேகங்கள் நமக்கு எழ வாய்ப்பில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x