Last Updated : 03 May, 2018 11:50 AM

 

Published : 03 May 2018 11:50 AM
Last Updated : 03 May 2018 11:50 AM

காஞ்சிக்குப் பெருமைசேர்க்கும் சஞ்சீவராயர்

 

கோ

யில் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. புகழ்பெற்ற கோயில்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றி ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் அதிகம் அறியப்படாத ஒரு கோயில் அய்யங்கார்குளத்தில் உள்ள சஞ்சீவராயர் கோயில். இந்தக் கோயிலின் பின்புறம் உள்ள கோடையில்கூட வற்றாத அய்யங்கார்குளமும் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் நடவாவிக் கிணறும் அதன் அழகான கட்டுமானமும் வியப்பின் அடையாளங்களாகத் தங்கியுள்ளன. இவற்றை மையமிட்டு உலாவரும் கதைகள் சுவாரசியமானவை.

சுயம்புவான ஆஞ்சநேயர்

காஞ்சிபுரத்திலிருந்து கலவை செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அய்யங்கார்குளம். பாலாற்றின் கரையருகே இயற்கை எழிலுடன் காட்சி தருகிறது இந்த ஊர். அய்யங்கார்குளத்தை அடைந்தவுடனே முதலில் கண்ணில் தென்படுவது சஞ்சீவராயர் (அனுமன்) கோயில்தான். கருங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்ட கோயில் என்று சொல்லப்படுகிறது. கோயிலின் முன்புறம் நெடிதுயர்ந்த தூண்கள் மிகப் பெரிதாகக் காணப்படுகின்றன. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்டது.

“இந்தக் கோயிலில் உள்ள சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் இருகரம் கூப்பிய நிலையில் அயோத்தி இருக்கும் வடக்குத் திசையைப் பார்த்தபடி இருப்பார். ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தபோது, இந்திரஜித் செலுத்திய கொடிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகிவிட்டார். லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தபோது, அதன் ஒரு பகுதி இங்கே விழுந்துவிட்டது. அதிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்தான் சஞ்சீவராய ஆஞ்சநேயர். தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோயில் இது மட்டும்தான். ஆஞ்சநேயருக்கு இங்கும் மட்டும்தான் இவ்வளவு பெரிய தனிக் கோயில் இருக்கிறது” என்கிறார் இக்கோயிலின் உதவியாளர் தங்கவேலு.

பெருங்குளம்

இக்கோயிலின் பின்புறத்தில் படித்துறையுடன் கூடிய பிரம்மாண்டமான குளம் உள்ளது. பார்ப்பதற்கு ஏரிபோல் காணப்படும் இந்தக் குளம் 133 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. அய்யங்கார்குளம் என இந்த ஊருக்குப் பெயர் வருவதற்கு இந்தக் குளம்தான் காரணம். விஜயநகரப் பேரரசு ஆட்சியின்போது லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் என்பவர் இந்தக் குளத்தை வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் பெயரைத் தாங்கி இந்தக் கிராமத்துக்கு ‘அய்யங்கார்குளம்’ என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் குளத்துக்கு ‘தாத சமுத்திரம்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

கோடைக் காலத்தில்கூட அய்யங்கார்குளத்தில் தண்ணீர் முழுமையாக வற்றிப் பார்த்ததில்லை என்பதை இந்த ஊர்க்காரர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

1jpg100

குளச் சிற்பங்கள்

அய்யங்கார்குளத்தின் கரையைச் சுற்றிக் கற்பாறைகளைக் கொண்டு அடுக்கடுக்காகச் சுவர் எழுப்பி இருக்கிறார்கள். கற்பாறைகளுக்கு இடையே அழகிய சிற்பங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பாறைகளுக்கு நடுவே கல்லால் ஆன தட்டும் அதனருகில் காய்கறிகள் வைத்துக்கொள்ள சிறு குழியும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் சாமிக்கு இத்தட்டிலேயே உணவைப் படைத்தார்கள் என்று கூறப்படுகிறது. குளத்தைச் சுற்றியுள்ள இந்த அழகிய வேலைப்பாடுகள் பார்ப்பவர்களை ஈர்க்கின்றன.

நடவாவிக் கிணறு

அய்யங்கார்குளத்தில் உள்ள இன்னொரு சிறப்பு நடவாவிக் கிணறு. அய்யங்கார்குளத்தின் வடக்குக் கரையின் பின்புறம் கலையம்சத்துடன் காணப்படுகிறது இந்தக் கிணறு. நீளவாக்கில் உள்ள இந்தக் கிணற்றின் நாலா புறங்களிலும் உள்ள பக்கவாட்டுக் கற்களில் சப்தகன்னிகளின் சிலைகள் காட்சி தருகின்றன. கிணற்றுக்குள் இறங்க வசதியாகப் படிக்கட்டுகள் உள்ளன. முடிவில் பாதாளத்தில் மண்டபம் ஒன்று தெரிகிறது.

அந்த மண்டபம் முழுவதும் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. அதையொட்டி, கல்லால் ஆன ஏற்றம் பிரம்மாண்டமாக நிற்கிறது. கிணற்றிலிருந்து நீரை இறைக்க ஏற்றத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மண்டபம் மட்டுமல்ல, படிக்கட்டுகள்வரை நீர் நிரம்பிக் கிடக்கிறது. அய்யங்கார்குளத்தைப் போலவே இதுவும் எப்போதும் வற்றாத கிணறு.

இந்தக் கிணறு இங்கே அமைந்ததற்குச் சுவாரசியமான பின்னணி ஒன்று சொல்லப்படுகிறது. “அந்தக் காலத்தில் சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்துக்கு உள்ளே ஒரு கிணற்றைத் தோண்ட முயன்றிருக்கிறார்கள். அப்போது உள்ளே கோழி கூவியதுபோல் ஒரு குரல் கேட்டிருக்கிறது. அதனால் அந்தப் பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருமுறை தோண்ட முயன்றபோது, எண்ணெய் விற்பதுபோல் குரல் கேட்டிருக்கிறது.

அப்போதும் பணியை நிறுத்திவிட்டார்கள். இப்படித் தடங்கல் வந்ததால், மூன்றாவது முறை வேறு பக்கத்தில் கோயிலுக்கு நேர் எதிரே குளக் கரையின் பின்புறம் கிணறு வெட்டப்பட்டது. அதுதான் இந்த நடவாவிக் குளம். இதைப் பாதாளக் கிணறு என்றும் சொல்லுவோம்” என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த ஹரி.

வரதராஜரின் திருமஞ்சனம்

நடவாவிக் கிணற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று உற்சாசம் கரைபுரளும். அன்று காஞ்சி வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றில் எழுந்தருள்கிறார். இதற்காக நடவாவிக் கிணற்றில் உள்ள நீரை இறைத்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். முன்பு ஏற்றம் மூலமே தண்ணீரை வெளியேற்றியிருக்கிறார்கள்.

தண்ணீரை முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்துக் கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார். பின்னர், கிணற்றிலிருந்து எழுந்தருளும் வரதராஜப் பெருமாள், மீண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலுக்குத் திருப்பி எடுத்துச் செல்லப்படுகிறார்.

காலங்களைக் கடந்து அபூர்வமான தன்மைகளுடன் அய்யங்கார்குளமும் நடவாவிக் கிணறும் சஞ்சீவராயர் கோயிலுக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x