Last Updated : 26 Apr, 2018 10:09 AM

 

Published : 26 Apr 2018 10:09 AM
Last Updated : 26 Apr 2018 10:09 AM

ஆன்மா என்னும் புத்தகம் 01: மனிதர்கள் என்கிற இயந்திரம்

ஜார்ஜ் ஐவனோவிச் குர்ஜிப், நவீன காலத்தின் குருவாக அறியப்படுகிறார். சமூகம் வழக்கமாகச் சிந்திக்கும் முறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளாமல் ஒருவரால் தனது உண்மையான தனித்துவத்தை அடைய முடியாது என்று அவர் வலியுறுத்தினார். நியூசிலாந்து சிறுகதை எழுத்தாளர் கேத்ரின் மேன்ஸ்ஃபீல்டு, கட்டிடக் கலைஞர் ஃபிராங்க் லோய்ட் ரைட், எழுத்தாளர் பி.எல். ட்ராவெர்ஸ், கணிதவியலாளர் ஓஸ்பென்ஸ்கி போன்றவர்கள் இவருடைய மாணவர்கள். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த தத்துவ அறிஞர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது சிந்தனைகளும் பயிற்சிகளும் உலகம் முழுவதும் கலை, இலக்கிய, அறிவியல் ஆளுமைகளைப் பாதித்துள்ளது.

சந்திப்புகள் வழிகாட்டுதல்கள்

1,300 பக்கங்களில் அவர் எழுதிய ‘All and Everything, or Beelzebub’s Tales to His Grandson’ புத்தகம் அவரின் முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், அவர் இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக எழுதிய ‘மீட்டிங்ஸ் வித் ரிமார்க்கபிள் மென்’ (Meetings with Remarkable Men) அவரது தத்துவங்களைச் சுவாரசியமாகவும் எளிமையாகவும் விளக்குகிறது. அவர் இந்தப் புத்தகத்தில் ‘குறிப்பிடத்தக்கவர்கள்’ என்று அவருடைய வழிகாட்டிகள், நெருங்கிய நண்பர்கள், உலகப் பார்வையை உருவாக்கியவர்கள் போன்றவர்களின் சந்திப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

அவரது ஆன்மிகச் சிந்தனையையும் ஆளுமையையும் கட்டமைக்க இவர்கள் எந்தவிதத்தில் உதவியிருக்கிறார்கள் என்று இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ‘குறிப்பிடத்தக்கவர்கள்’ வரிசையில் முதலில் குர்ஜிப் தன் தந்தையைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து குர்ஜிப்பின் ஆசிரியர் போர்ஷ், கேப்டன் போகோஸியன், ரஷ்ய இளவரசர் யூரி லுபோவெட்ஸ்கி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஸ்கிரிட்லோவ், புத்தக விற்பனையாளர் யேலோவ் என வெவ்வேறு தளங்களில் அவர் சந்தித்த நபர்களைப் பற்றிய அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

26chgow_Gurdjieff bookrightவித்தியாசமான சுயசரிதம்

இந்தப் புத்தகம் வழக்கமான சுயசரிதமாக இல்லாமல் மற்றவற்றிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது. அவரின் இளமைக் காலம், ஞானத்தைத் தேடிக் கீழை நாடுகளுக்கு அவர் சென்ற பயணங்கள் ஆகியவற்றை இந்தப் புத்தகம் சுவாரசியமாகப் பதிவுசெய்திருக்கிறது. அவர் தன் சுயசரிதத்தைத் தான் சந்தித்த மனிதர்களின் துணிச்சல், உறுதி, ஞானம், மதிநுட்பம், விடாமுயற்சி போன்ற குணாம்சங்களின் மூலம் விளக்கிஇருக்கிறார். இறுதியில், அது அவர் வாழ்க்கையில் சந்தித்த குறிப்பிடத்தக்கவர்ளைப் பற்றிய சுயசரிதமாக மட்டுமில்லாமல், அவரது தத்துவங்களையும் வழிகாட்டுதல்களையும் உதாரணங்களுடன் விளக்கும் ஓர் ஆன்மிக வழிகாட்டி நூலாகவும் விளங்குகிறது. கடினமான தருணங்களில் மனிதர்கள் எப்படி வாழ்வது, வளர்ச்சியடைவது என்பதை அவர் இந்தப் புத்தகம் முழுவதும் விளக்கிஇருக்கிறார்.

தேடல்களும் பதில்களும்

இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றிய கதைகளை விளக்கும்போது சில கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவரது வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன. அவர் புத்தகத்தில் பதிலளித்திருக்கும் கேள்விகள்:

என்ன மாதிரியான குறிப்பிடத்தகுந்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன்?

கிழக்கே எந்த மாதிரியான அற்புதங்களைப் பார்த்தேன்?

மனிதன் ஓர் ஆன்மாவா, அந்த ஆன்மா அழிவற்றதா?

மனிதனுக்குத் தனி விருப்புறுதி உண்டா?

வாழ்க்கை என்றால் என்ன? அதில் ஏன் துன்பம் இருக்கிறது?

நான் மறைஞானத்தையும் ஆன்மிக அறிவியலையும் நம்புகிறேனா?

மனோவசியம், ஈர்ப்பியல், தொலைஉணர்வு என்றால் என்ன?

இந்தத் தேடல்களில் எல்லாம் எனக்கு எப்படி ஆர்வம் வந்தது?

‘ஒரு விஷயம் உங்களுக்கு உண்மையாகப் பட்டால், அது உண்மையாகத்தான் இருக்கும். உங்கள் வாழ்க்கைக்கான அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது’. இது குர்ஜிப்பின் தத்துவமாக அறியப்படுகிறது. மனிதர்கள் ஆன்மாவுடன் பிறந்தவர்கள் அல்ல என்கிறார் குர்ஜிப். மனிதர் தமது பழக்கங்கள், நம்பிக்கைகள், விருப்பங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் என்கிறார். அந்தப் பிரக்ஞையைக் கொண்டு தங்கள் விருப்பங்களுடன் போராடுவதன் மூலமே மனிதர் தமது ஆன்மாவை அடைய முடியும் என்று சொல்கிறார். மனிதர்களை இயந்திரமாக அவர் பார்த்தார். எண்ணங்கள், உணர்வுகளை ஒரு இயந்திரத்தின் முறைமையாக அணுகினார். தனது இயந்திரத்தின் மேல் வேலை செய்வதன் வாயிலாகவே மனிதர் விடுதலையை அடைய முடியும் என்கிறார். 20-ம் நூற்றாண்டில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஓஷோவின் மீது தாக்கம் செலுத்தியவர் இவர்.
 

26chgow_Gurdjieff ஜார்ஜ் குர்ஜிப் ஜார்ஜ் ஐவனோவிச் குர்ஜிப்

இவர் 1877-ம் ஆண்டு, ஆர்மேனியாவிலுள்ள அலெக்சாந்தராபோல் நகரில் பிறந்தார். பல ஆண்டுகள் பயணம் செய்த பிறகு, அவர் 1913-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு வந்தார். நான்கு ஆண்டுகள் அங்கே தங்கியிருந்த பிறகு, ஐரோப்பாவில் பயணம் செய்து உரையாற்றினார்.

அவரது பயிற்சிகளை தார்தாரியப் பழங்குடிகள், சூபி துறவிகளிடமிருந்து வடிவமைத்துக் கொண்டார். 1922-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் ‘Institute for the Harmonious Development of Man in Fontainebleau’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அவரது முக்கியப் படைப்பாக ‘All and Everything, or Beelzebub’s Tales to His Grandson’ கருதப்படுகிறது. 1949-ம் ஆண்டு அவர் காலமானார்.

உலகம் முழுவதும் மக்கள் மீது தாக்கம் செலுத்திய மெய்ஞ் ஞானம், ஆன்ம மேம்பாடு, ஆன்மிக, சமய நூல்களையும் ஞானாசிரியர்களையும் அறிமுகப்படுத்தும் புதிய பகுதி இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x