Published : 01 Mar 2018 10:59 AM
Last Updated : 01 Mar 2018 10:59 AM

மலை மீது ஒரு தியான அறை

அகவொளி அடைவதற்கு முன் மரம் வெட்டினேன், நீரிறைத்தேன்

அகவொளி அடைந்த பின்…. மரம் வெட்டுகிறேன், நீரிறைக்கிறேன்.

- ஒரு ஜென் மொழி

விண்மீன்கள் பல இன்னும் பிரகாசித்துக்கொண்டிருந்தாலும் கிழக்கு அடிவானம் லேசாக வெளுக்க ஆரம்பித்திருந்தது. கீழே பள்ளத்தாக்கிலிருந்து ஒரு காட்டுக்கோழி விட்டுவிட்டுக் கூவியது. ஆண்களும் பெண்களும் வரிசையாக ஓசையின்றி அந்தக் கண்ணாடிச் சாளரங்கள் கொண்ட தியான அறைக்குள் சென்று அமர்கிறார்கள். வெளியே மங்கலாக மலைத்தொடர்கள் தெரிகின்றன.

கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பெருமாள்மலை கிராமத்தில் போதி ஜென்டோ ஜென் ஆசிரமத்தில் ஒரு நாளின் ஆரம்பம். முதல் தியானத்தின் தொடக்கம். ஜென் மாஸ்டர் சாமி ஏற்கெனவே வந்து தன் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

பவுத்தத்தின் ஒரு பரிமாணமாகக் கிளைத்த ஜென் சித்தாந்தம் தென்னிந்தியாவிலிருந்து சீனாவுக்கு போதி தர்மனால் எடுத்துச் செல்லப்பட்டது என்பது ஐதீகம். போதி தர்மனின் வாழ்க்கை வரலாறே 645-ம் ஆண்டில் தாவோ சுஆன் என்பவரால் எழுதப்பட்டது. ஒரு பிராமண அரசருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் மகாயான பவுத்த சித்தாந்தத்தைப் பரப்ப சீனாவுக்குப் பயணித்தார். இந்தியாவில் தியான் என்று அறியப்பட்ட இந்த தியான முறை ஜப்பானுக்குப் பரவியபோது அங்கு ஜென் என்று மருவியது. தியானிப்பதற்குத் தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்த அவர் கி.பி. 562-ல் அங்கே காலமானார்.

ஜப்பானில் இந்தச் சித்தாந்தம் வளர்ந்து கலை, இலக்கியம், தற்காப்பு எனப் பல தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரங்கக் கலையில் ‘நோ’ நாடகமும் இலக்கியத்தில் ‘ஹைக்கூ’ கவிதையும் ஜென் தத்துவத்தின் பரிமாணங்களே. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேலைநாடுகளில் பவுத்தம் பற்றிய அக்கறை வளர்ந்ததைத் தொடர்ந்து, ஜப்பானிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கும் ஜென் பரவியது.

ஜப்பானுக்குச் சென்ற துறவி

திண்டுக்கல்லைச் சேர்ந்த சேசுசபை துறவி சுவாமி என்றழைக்கப்படும் அருள் மரிய ஆரோக்கியசாமி 1950-களில் ரமண மகரிஷியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். அந்தத் தளத்திலிருந்து ஜென் கருத்தாக்கத்துக்கு அவர் கவனம் சென்றது. ஒரு நல்கை அவர் வழி வந்தபோது, ஜப்பானுக்குப் பயணித்து காமகூரா நகரில் ஜென் மாஸ்டர் யமாதா கோவுன் ரோஷியிடம் மாணவனாகச் சேர்ந்தார். பதினோரு ஆண்டுகள் கழித்து அவரே ஒரு மாஸ்டராகி இந்தியா திரும்பினார்.

1992-ல், அமைதி சூழும் பெருமாள் மலையில் போதி ஜென்டோவை நிறுவி நடத்தி வருகிறார். ஜென்டோ என்ற சொல் தியான அறையைக் குறிக்கும். அ மா சாமி (AMA Swamy) என்றறியப்படும் இந்த ஜென் துறவியிடம் பாடம் கற்க உலகெங்கிலிருந்தும் மாணவர்கள் வருகிறார்கள். வருடத்தில் சில மாதங்கள் இவரும் வெளிநாடுகளுக்குச் சென்று தன் மாணவர்களைச் சந்திக்கிறார்; பயிலரங்குகள் நடத்துகிறார்.

வாழ்க்கைப் பார்வையை மாற்றும் தியானம்

மாணவர் தயாராயிருக்கும்போது ஆசிரியர் தோன்றுகிறார் என்று ஜென்னில் கூறப்படுவதுண்டு. ஆசிரியர் ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்பட கோவான் என்று குறிப்பிடப்படும் புதிரை மாணவர் விடுவிக்க வேண்டும் என்று ஒரு பாரம்பரியம் உண்டு.

ஒரு கை ஓசை எது? நீ பிறக்கும் முன்னே உன் முகம் எப்படி இருந்தது? போன்ற கேள்விகளுக்குப் பதிலைத் தேட வேண்டும். இவற்றுக்கு தர்க்கரீதியில் பதில் கூற முடியாது. அனுமதி கிடைத்தபின் நீண்ட நாட்கள் - பல ஆண்டுகள் - தியானத்துக்குப் பின் சடோரி (satori) எனப்படும் அகவொளியை (enlightenment) அவர் அடையக்கூடும். தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கெல்லாம் சடோரி அனுபவம் கிடைக்கும் என்பது உறுதியில்லை.

சிலருக்கே இந்த பாக்கியம். அகவொளி அனுபவத்துக்குப் பின் அவரது வாழ்க்கை பாணியை மாற்றத் தேவையில்லை. ஆனால், வாழ்க்கையைப் பற்றிய அவரது பார்வை மாறியிருக்கும். நாம் தேடும் நிம்மதி, திருப்தி எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு வாழ்க்கையைத் தொடர அகவொளி உதவும். அந்த வாழ்வில் நிகழ்காலம், இக்கணம் மட்டுமே நிதர்சனம்.

தியானத்துடன் ஒதுக்கப்படும் பணிகள்

கொடைக்கானல்-வத்தலகுண்டு சாலையிலுள்ள பெருமாள் மலை கிராமத்திலிருந்து உள்ளே மூன்று கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள போதி ஜென்டோவில் எளிமையான, ஆனால் வசதியான தனித்தனி அறைகள். உங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டவுடனேயே மெளன விரதம் தொடங்கிவிடுகிறது. இங்கு அமைதி மிகவும் முக்கியம். காய்கறி நறுக்குவது, பாத்திரங்களைக் கழுவுவது, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது, தோட்ட வேலை, நூலக மேற்பார்வை எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் என்ன வேலை என்பது ஒதுக்கப்பட்டுவிடுகிறது. நாள் முழுவதும் தியானம்தான். அவ்வப்போது உரை இருக்கும். மாணவர்களின் கேள்விகளுக்கு, சாமி பிரத்யேகமாகச் சந்தித்துப் பதிலளிப்பார் (காண்க www.bodhizendo.org). அவரது எளிமையான, கூர்மையான பதில்கள் மின்னல் கீற்று போல் வருகின்றன.

கட்டுரையாளர், தொடர்புக்கு:
theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x