Published : 22 Feb 2018 10:38 AM
Last Updated : 22 Feb 2018 10:38 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 20: நம் செயலென எதுவும் உண்டா?

‘ந

ம் செயல்களுக்கு யார் பொறுப்பு?’ என்பது சமய, மெய்யியல் மரபுகளில் ஒரு பெருவழக்காக உரையாடப்பட்டிருக்கிறது. இதற்கென்ன வழக்கு? நம் செயல்களுக்கு நாம்தானே பொறுப்பு? வேறு யார் பொறுப்பாக முடியும்? எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒருவரை அடிக்கிறீர்கள். அதற்கு யாரைப் பொறுப்பாக்குவார்கள்? அடித்த உங்களையா அல்லது நீங்கள் அடிக்கும்போது உங்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்தவரையா? ‘எளிய செய்தியில்லையா? அடித்த என்னைத்தானே பொறுப்பாக்குவார்கள்?’

சரியாகவோ அன்றிப் பிழையாகவோ நீங்கள் ஒன்றை அறிகிறீர்கள். அதைக் குறித்துச் சரியாகவோ அன்றிப் பிழையாகவோ ஒரு கருத்து கொள்கிறீர்கள்; சரியாகவும் பிழையாகவும் உங்களில் சேகரமாகும் கருத்துகள் உங்கள் அறிவைத் தொகுக்கின்றன. தொகுக்கப்பட்ட இந்த அறிவுக்கு யார் பொறுப்பாளி? ‘இதென்ன கேள்வி? தொகுத்துக்கொண்ட நான்தானே பொறுப்பாளி?’

ஏதோ ஒன்றை அடையக் கருதி அதற்காக முயல்கிறீர்கள். தீவிரமான, தவம் என்று சொல்லத்தக்க முயற்சி. இறுதியில் நீங்கள் வெல்லவும் கூடும்; தோற்கவும் நேரிடலாம். வெற்றி, தோல்விகள் இருக்கட்டும்; முயற்சி யாருடையது? ‘வெற்றி தோல்விகளை நுகர்பவனும் நான்; முயற்சியும் எனதே!’

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழ்இடு வானும், நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்

தலையாகச் செய்வானும் தான். (நாலடியார், 248)

வாழ்க்கையில் ஒருவன் நல்ல நிலையை அடைவதற்கும், அந்த நல்ல நிலை குலைந்து கீழ்மைநிலை பெறுவதற்கும், இப்போதிருக்கும் நல்ல நிலையைக் காட்டிலும் இன்னும் சிறந்தநிலை அடைவதற்கும், தலைமைநிலை பெறுவதற்கும் யார் காரணம்? தானேதான் காரணம். தன்னைப் புகழ்மணம் வீசும் பூமாலையாக்கிக் கொள்கிறவனும் தான்; தன்னைப் பிய்த்துப் போட்டுக் குப்பைக்கூளமாக்கிக் கொள்கிறவனும் தான். எல்லாமே தான்தான்—என்று நாலடியாரும் சொல்லவில்லையா? சொல்கிறதுதான். என்றாலும் இன்னொரு பக்கம்,

நானேயோ தவம் செய்தேன்?

சிவாயநம எனப் பெற்றேன்?

தேனாய்,இன் அமுதமுமாய்,

தித்திக்கும் சிவபெருமான்,

தானேவந்து எனதுஉள்ளம்

புகுந்து, அடியேற்கு அருள்செய்தான்

ஊன்ஆரும் உயிர்வாழ்க்கை

ஒறுத்துஅன்றே வெறுத்திடவே!

(திருவாசகம், திருஏசறவு, 10)

உடலின்வழியாக மட்டுமே உயிர் வாழ்கிற, சுகந்தேடும் இந்த வாழ்வை வெறுத்தேன்; உடற்சுகம் குறைத்தேன்; உயிர்ச்சிவம் பெருக்கினேன்; ஆனால், இவற்றையெல்லாம் நானா செய்தேன்? எனதா என் தவம்? எனதா என் முயற்சி? எனதா என் அடைவு? எல்லாம் சிவனுடையதே அல்லவா? என் முயற்சி ஏதும் இல்லாமல், தானாகவே வந்தான்; உள்ளம் குடிகொண்டான்; அருள் செய்தான். எனவே, என் தவம் போற்றி அல்ல; என் சிவம் போற்றி! என்கிறதே மணிவாசகம்?

பட்டினத்தார் என்ன செய்தார்?

இவ்வாறு, தன் அறிவு, தன் முயற்சி, தன் தவம் என்று எல்லாவற்றையும் வேறொருவருக்கு நீரூற்றித் தானஞ் செய்துவிடுவது சரியா?

பத்திரகிரியான் என்றொரு மன்னன். ஒரு நாள் அவனுடைய மாளிகையில் நகைகள் களவாடப்பட்டன. பெருங்களவு. களவாடியவர்கள் களிப்பில் திளைத்தார்கள். களவைப் பங்கமில்லாமல் நடத்திக்கொடுத்த கடவுளுக்கும் ஒரு பங்கைக் கொடுத்துக் களவில் கடவுளையே பங்காளியாக்கிவிடுவது என்பது இப்போது மட்டுமல்ல; களவாடுகிறவர்களுக்கு எப்போதுமே வழக்கம். அந்த வழக்கப்படி, காட்டின் விளிம்பிலிருந்த கோயிலின் முற்றத்தில் நகைகளைப் பங்கிட்டார்கள்; கடவுளின் பங்குக்கு ஒரு மணிமாலை.

அவரவர் பங்குகளை எடுத்துக்கொண்டவர்கள் கடவுளின் பங்கைக் கோயிலின் உள்ளே கல்லாய் இருந்த கடவுளை நோக்கி வீசிவிட்டுக் கிளம்பினார்கள். வீசிய மாலை, கடவுளை எழுதிய கல்லின்மேல் விழவில்லை; அங்கே உடற்சுகம் அறுத்து உயிர்ச்சிவத்தில் திளைத்திருந்த பட்டினத்தாரின்மேல் விழுந்தது. கள்வர்களைத் தேடிப் படையாட்கள் வந்தார்கள்; பட்டினத்தாரையும் அவர்மேல் கிடந்த மணிமாலையையும் கண்டார்கள். பட்டினத்தாரை அடித்து எழுப்பி மாளிகைக்குக் கொண்டுபோனார்கள்.

‘மணிமாலை இங்கே, மற்ற நகைகள் எங்கே?’ என்று மன்னன் விசாரித்தான். பட்டினத்தார் தெரியாதென்றார். சினந்த மன்னன் பட்டினத்தாரைக் கழுவேற்றச் சொன்னான். என்ன செய்வார் பட்டினத்தார்? பாடினார்:

என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!

உன்செய லேஎன்று உணரப்பெற் றேன்இந்த ஊன்எடுத்த

பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை! பிறப்பதற்கு

முன்செய்த தீவினை யோஇங்ஙன் வந்து மூண்டதுவே?

(பட்டினத்தார், பொது, 22)

நானா இதைச் செய்தேன்? இந்த இப்பிறப்பில் நான் செய்யாத செயலுக்கு, என்மேல் வந்து விடிகிறதே அதன் விளைவு? விளங்கிக்கொள்ள முடியவில்லை! ஒருவேளை, நான் பிறப்பதற்கு முன் நிகழ்ந்த ஏதோ ஒரு வினையின் விளைவோ? அப்படித்தான் என்றால், அது என் காட்சிக்கும் அறிவுக்கும் எட்டாதது அல்லவோ? எனக்குத் தொடர்பில்லாத ஒன்றில், என் அறிவுக்கு எட்டாமல் நடந்த ஒன்றில், பொறுப்பேற்பதற்கும் பொறுப்புத் துறப்பதற்கும் பிடிமானம் ஏதும் உண்டோ? எனவே தெய்வமே! இனி நடக்கத்தக்கது எதுவோ அது நடக்கட்டும்!—என்று நெஞ்சோடு புலம்புகிறார் பட்டினத்தார்.

பட்டினத்தாருக்கு நிகழ்ந்ததுதான் கோவலனுக்கும் நிகழ்ந்தது. அதே மாதிரியான திருட்டு நகைக் குற்றச்சாட்டு. அதே மாதிரியான மூடப் படையாட்கள்; அதே மாதிரியான பொறுமையில்லாத மன்னன்; ஏறத்தாழ அதே மாதிரியான தண்டனை. வேறுபாடுகள் மிகச் சில: பட்டினத்தாரிடம் கண்டெடுத்த நகை மன்னனுக்குச் சொந்தமான திருட்டு நகை; கோவலனிடம் இருந்த நகை கண்ணகியின் சொந்த நகை. சைவராகிய பட்டினத்தார் கடைசியில் ‘தெய்வமே’ என்று பாடி, இறையருள் பெற்றுக் கழுமரம் பற்றியெரியப் பிழைத்துக்கொண்டார். சமணனான கோவலன் தனக்கு அருள ஒரு தெய்வமில்லாமல், பொட்டலில் வெட்டுப்பட்டுச் செத்துப்போனான்.

யார் பொறுப்பு?

கதைகளை விட்டுக் கேள்விகளுக்கு வருவோம்: கோயிலில் தியானத்தில் அமர்வது ஒரு குற்றமா? அதற்குத் தண்டனை திருட்டுப்பழியும் கழுவேற்றமுமா? மனைவி, மனமொப்பித் தந்த அவளது சொந்த நகையை, ஆள் தெரியாமல் விற்க முயன்றது ஒரு குற்றமா? அதற்குத் தண்டனை திருட்டுப்பழியும் தலை வெட்டுப்படுதலுமா? இப்படியெல்லாம் நிகழப்போகிறது என்று தெரிந்திருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருப்பார்களா? இவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகே செயலாற்ற வேண்டும் என்பது இயலக்கூடியதா?

நல்லது. இப்போது மைய வழக்குரைக்குத் திரும்புவோம். உங்களுக்கு நிகழ்கின்றவற்றுக்கு, உங்களால் நிகழ்கின்றவற்றுக்கு, யார் பொறுப்பு? நீங்கள் மட்டுமேதானா? நீங்களுமா? நீங்கள் இல்லவே இல்லையா? குழப்பம்! தெளிய வைக்கத் திருமூலர் ஏதும் சொல்கிறாரா?

தான்முன்னம் செய்த விதிவழி தான்அல்லால்,

வான்முன்னம் செய்துஅங்கு வைத்ததோர் மாட்டில்லை;

கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று

நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆனதே (திருமந்திரம் 2848)

நான் என்ன கொஞ்சநஞ்ச வினைகளா செய்திருக்கிறேன்? இப்பிறப்பில், முற்பிறப்புகளில் என்று செய்து குவித்திருக்கிறேன். அவற்றில் ஒரு பகுதியைத்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். எனவே, எனக்கு நிகழ்கின்றவற்றுக்கு, என்னால் நிகழ்கின்றவற்றுக்கு யார் பொறுப்பு என்று கேட்பீர்களேயானால், நானே பொறுப்பு. என் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு நொடியும், ஏன், நான் நின்றிருக்கும் நிலம் முதற்கொண்டு எல்லாமே என் வினைகளால் நானே செதுக்கியவை.

அல்லாமல் வானத்தில் இருக்கிற ஏதோ ஒன்று என் வாழ்க்கையைச் செதுக்கியது என்பீர்களேயானால், அன்பர்களே, அதை ஒப்ப முடியாது!—என்று நிலைபாடு மாறாமல் அடித்துச் சொல்கிறார் திருமூலர். அப்படியென்றால் பட்டினத்தார்களுக்கும் கோவலன்மாருக்கும் என்ன விடை? சிக்கல்தான்!

அறஞ்சார்ந்த விடயங்களில் திருமூலரின் முன்னோடியான திருவள்ளுவரிடம் வழக்கு போனபோது,

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும் (குறள் 169)

ஒருவனுடைய வினைதான் அவனை உருவாக்கும் என்றால், தீயவன் வாழ்கிறான்; நல்லவன் தாழ்கிறானே? ஏன்? ஆராயத்தான் வேண்டும் என்கிறார் வள்ளுவர். வழக்கை இன்னும் விரித்து விசாரிக்க வேண்டியிருக்கிறது.

(விசாரணை தொடரும்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x