Published : 15 Feb 2018 10:30 AM
Last Updated : 15 Feb 2018 10:30 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 19: எதிர்நிலை எடுத்த திருமூலர்

 

தின்பருவத்தில் இருக்கிற பிள்ளைகள், ஏதேனும் ஒரு செயலைக் கவனக்குறைவின் காரணமாக ஒழுங்காகச் செய்யாமல் குழப்பிவிடும்போது, ‘இன்னும் சின்னப் பிள்ளையா நீ? இவ்வளவு வளர்ந்தும் பொறுப்பு வரவில்லையே?’ என்று வீட்டார் கடிந்துகொள்வார்கள். பெற்றவர்கள், பொறுப்பு என்னும் தலைச்சுமையைப் பிள்ளைகள்மேல் சுமத்தத் தொடங்கும் பருவம் அது. சுமத்தத்தான் வேண்டும்; பழக்கத்தான் வேண்டும். அவ்வாறு பொறுப்பைப் பழக்கிவிடாத பெற்றோரைப் பின்னாளில் பிள்ளைகளே திட்டக்கூடும். சான்றாக இந்தப் பழம் பாடல்:

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும்

ஆடையும் ஆதரவாக்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும்

என்னைக் குறித்ததுஅல்லால்,

துள்ளித் திரிகின்ற காலத்தில்

என்றன் துடுக்குஅடக்கிப்

பள்ளிக்கு வைத்தில னேதந்தை

ஆகிய பெரும் பாதகனே.

என் தந்தை எனக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுத்தார். புத்தாடை வாங்கிக் கொடுத்தார். பெற்றது பிள்ளை அல்ல, மூவரும் தேவரும் காணாத பெரும்பேறு என்று என்னைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார். நானும் துள்ளித் திரிந்தேன். என் துடுக்கை அடக்கவில்லை; என்னை முடிவெடுக்கப் பழக்கவில்லை; எதற்கும் பொறுப்பேற்க முடுக்கவில்லை; ஒட்டியும் முட்டியும் வாழ வசக்கவில்லை. அடப் பாதகத் தந்தையே! வெறும் கொள்ளிக்கும் கடனுக்குந்தானா என்னைப் பிள்ளையென்று பெற்றாய்?

ஒரு பயணம் போக வேண்டியிருக்கிறது. பாதை தெரியாதவர் ஒருவர்; பாதை தெரிந்தவர் ஒருவர். பாதை தெரியாதவர் புறப்படத் தயங்குகிறார். ‘நான் இருக்கிறேன்; உன்னைப் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு போவது என் பொறுப்பு! பிறகென்ன அச்சம்? வா!’ என்று துணிவூட்டித் தெரிந்தவர் தெரியாதவரை அழைத்துக்கொண்டு போகிறார்.

காட்டுப் பாதையில் பாதிவழி போனதும், ‘சற்று நில்! இதோ வந்துவிடுகிறேன்!’ என்று சொல்லிவிட்டுத் தெரிந்தவர் காணாமல் போய்விட்டால், தெரியாதவர் என்ன செய்வார்? எங்கே போவார்? பாதை தெரியவில்லை; ‘பாதம் வகுத்ததுதான் பாதை’ என்று போகத் துணிவில்லை; புலி வருமோ நரி வருமோ அன்றி யானைதான் வருமோ என்று நின்ற இடத்திலேயே நிலைகுத்தச் செய்கிறது அச்சம். புறநானூறு சிறப்பாகச் சித்திரிக்கிறது:

‘ஐயோ’ எனில்யான்

புலிஅஞ் சுவலே!

அணைத்தனன் கொளினே,

அகன்மார்பு எடுக்கல்லேன்!

என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை

இன்னாது உற்ற அறன்இல் கூற்றே!

நிரைவளை முன்கை பற்றி

வரைநிழல் சேர்கம்! நடத்திசின் சிறிதே!

(புறநானூறு, 255)

கணவனோடு காட்டுவழியில் வந்தாள் ஒருத்தி. அழைத்துக்கொண்டு வந்த கணவன் பாதிவழியில் திடீரென்று செத்துப் போனான். ஓங்கிய பெருங்காடு. மனைவி கலங்குகிறாள்; பிணத்திடம் புலம்புகிறாள்: ‘ஐயோ’ என்று கத்தினால் குரல் கேட்டுப் புலி வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உன்னை மெல்ல அணைத்துத் தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று பார்த்தால், உன் உடலைச் சுமக்கும் வலு எனக்கில்லை. உன்னை விட்டுப் போகவும் முடியாது; உன்னோடு சேர்ந்து சாகவும் முடியாது. என்ன செய்வேன்? முடிவெடுத்துப் பழகாத நான் என்ன முடிவெடுப்பேன்?

பொறுப்பேற்றுப் பழகாத நான் எப்படிப் பொறுப்பேற்பேன்? நடுக்காட்டில் வந்த இந்த விதி கொஞ்சம் தள்ளிக் காடு கடந்தபின் வந்திருக்கலாகாதா? விதிக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாதா? தெரிந்திருந்தால் என்னை இப்படிப் பதைக்கச் செய்திருக்குமா? எனக்கு நேர்ந்த பதைபதைப்பு இந்தத் துயரத்தை என்மேல் சுமத்திய விதிக்கும் நேரட்டும்.

ஐயா, என் வளையல்களை வேண்டுமானால் கொஞ்சம் பின்னுக்கு இழுத்து ஒதுக்கிக்கொள்கிறேன்; என் முன்கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வந்துவிடுகிறாயா? அச்சமூட்டுகிற இந்தக் காட்டைக் கடந்துவிடுவோம்?

நான் உன் கையில் பிள்ளை

மனிதர்கள் கடவுளைச் சிக்கெனப் பற்றிக்கொள்ளும் இடம் இதுதான். உலகம் காடுபோல அடர்ந்து கிடக்கிறது. பாதைபோல் ஏதோ தெரிகிறது. பாதைதானா? தெரியாது. பாதைதான் என்றால், எங்கே செல்லும் இந்தப் பாதை? தெரியாது. பாதையின் முடிவில் இருப்பது, பெறப்போவது வாழ்வா சாவா? தெரியாது. துணிந்து போகிறேன். கடவுளே, நான் உன் கையில் பிள்ளை; உனக்கே அடைக்கலம். இனி நான் செய்யும் எதுவும் என் பொறுப்பில்லை; உன் பொறுப்பு என்று துணியும் இடம் இது.

அன்றே என்தன் ஆவியும்

உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய்! என்னைஆட்

கொண்டபோதே கொண்டிலையோ?

இன்றுஓர் இடையூறு எனக்குஉண்டோ?

எண்தோள் முக்கண் எம்மானே!

நன்றே செய்வாய், பிழைசெய்வாய்!

நானோ இதற்கு நாயகமே?

(திருவாசகம், குழைத்த பத்து, 7)

‘இறைவா! உன்னைச் சரணடைந்தபோதே நான் உன்னுடைய ஆளாகிவிடவில்லையா? என்னுடைய ஆவி, உடல், உடைமை எல்லாம் உன்னுடையது ஆகிவிடவில்லையா? இனி எதற்கும் நான் பொறுப்பேற்க முடியுமா? நல்லதோ பொல்லதோ, எனக்குப் பொறுப்பு நீயே அல்லவா?’ என்று தன் பொறுப்பைத் துறக்கிறார் மணிவாசகர்.

கடவுளைப் பொறுப்பாக்குதல்

சட்டவியலில் ‘பகரப் பொறுப்புரிமை’ (vicarious liability) என்று ஒன்று பேசப்படும். ஒருவர் செய்யும் செயல்களுக்கான பொறுப்புரிமை, செய்தவரைச் சாராமல் செய்தவருக்குப் பகரமாக நிற்கும் வேறொருவரைச் சாரும் என்பது பகரப் பொறுப்புரிமை. வேலையாள் செய்யும் திமிர்த்தனம் முதலாளியைப் பாதிப்பது மாதிரி, தொண்டன் செய்யும் அடாவடி தலைவனைப் பாதிப்பது மாதிரி, குட்டி குரைத்தது நாய் தலையிலே விழுந்த மாதிரி, பக்தன் அடுத்துச் செய்ததும் அடாது செய்ததும் என்று எல்லாமே கடவுள் தலையிலே வந்து விழும்.

எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கருதுவது பக்தி மரபின் வழக்கம். அதுவரையில் கெட்டிதட்டி இறுகிக் கிடந்த ஏரிக்கரை திடீரென்று உடைந்து வெள்ளம் வெளியேறினால்—கடவுள் செயல்; பல்லாண்டுகளாக விழுதுவிட்டுப் பழுதில்லாமல் பரவிநின்ற மரம் திடீரென்று எரிந்தால்—கடவுள் செயல்; நூற்றாண்டுகளாகச் சிறந்து நிமிர்ந்திருந்த கோயில் மண்டபம் திடீரெனச் சிதைந்து விழுந்தால்—கடவுள் செயல். கல்லாப் பிழை, கருதாப் பிழை, வாய்திறந்து சொல்லாப் பிழை என்று எல்லாப் பிழைகளுக்கும் கடவுளைப் பொறுப்பாக்கி விலகுவார்கள் பக்தர்கள்.

பொறுப்பேற்றல் எப்போதுமே கடினமானதாகத்தான் இருக்கிறது. அதனால் அவ்வப்போது பொறுப்புத் துறப்பை அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள்—சில சமயங்களில் உடனுறை மனிதர்களிடம்; சில சமயங்களில் கடவுளிடமே.

ஆனால், கடவுளைத் தனக்குப் பகரப் பொறுப்பாளி ஆக்குவது திருமூலருக்கு உவப்பான வழியாகத் தெரியவில்லை. எனக்கு எது நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பென்று முழங்குகிறார்:

ஆறுஇட்ட நுண்மணல் ஆறே சுமவாதே

கூறிட்டுக் கொண்டு சுமந்துஅறி வார்இல்லை;

நீறுஇட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்

பேறுஇட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே.

(திருமந்திரம் 2849)

மலையையும் பாறையையும் நிலத்தையும் அறுத்துக்கொண்டு ஓடிவருகிற ஆறு ஓடும்போக்கில் மணலை உருவாக்குகிறது. அடித்து வரப்பட்ட மணலைச் சில இடங்களில் மொத்தித் தள்ளி மேடாக்குகிறது; சில இடங்களில் அரித்தோடிப் பள்ளமாக்குகிறது. மேடோ பள்ளமோ, அதற்குப் பொறுப்பேற்று அந்த மணலைச் சுமப்பது யார்?

மணலை இட்ட ஆறேதான். அவ்வாறு இல்லாமல் ஆற்றுக்குப் பதிலாக அந்த மணலைக் கூறு போட்டுக்கொண்டு சுமப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வாறே என் செயலால் விளைந்த நல்லதோ பொல்லதோ, அதற்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டுமே அல்லாது, வேறொருவரைப் பொறுப்பாக்க முடியாது—கடவுளைக்கூட.

என் செயல்களில் கடவுளை எனக்குத் துணையாகக் கொள்ளலாமே ஒழிய, என் செயல்களுக்குக் கடவுளையே பகரப் பொறுப்பாக்க முடியாது என்று பக்தி மரபின் நிலைக்கு எதிர்நிலை எடுக்கிறார் திருமூலர்.

(அறிதல் தொடரும்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x