Published : 08 Feb 2018 11:33 AM
Last Updated : 08 Feb 2018 11:33 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 18: தள்ளுவன தள்ளி பின் அமைக

‘ச

மயம்’ என்ற சொல் ‘சமை’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. சமை என்றால் சமைத்தல் என்று பொருள். சமைத்தல் என்றால் ஆக்குதல், நிரப்புதல், பக்குவப்படுத்துதல், பூக்கச் செய்தல், முழுமைப்படுத்துதல் என்று பொருள். காட்டுவிலங்காக இருந்தவனை மனிதனாக ஆக்கி, அவனுடைய பொக்கைகளை நிரப்பி, தன்னையே எண்ணிக்கொண்டிருக்காமல் உடன்வாழும் மனிதர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்கச் செய்து அவனைப் பக்குவப்படுத்தி, அன்பால் பூக்கச் செய்து, முழுமைப்படுத்தித் தெய்வநிலைக்கு ஏற்றுவது எதுவோ அது சமயம்.

வையகத்தில் வாழ்கிறவன், விலங்குகளைப் போல வாழாமல், வாழ வேண்டிய வழிமுறைகளில் வாழ்ந்தால் தெய்வமாகவே மதிக்கப்படுவான் என்று வள்ளுவரும் சொல்கிறார், இல்லையா? வாழ வேண்டிய வழிமுறைகளை வகைதொகைப்படுத்திக் கொடுப்பது சமயம்.

நல்லது. ‘சமயம்’ என்ற சொல் ‘சமை’ என்பதிலிருந்து வந்தது. ‘சமை’ என்ற சொல் எதிலிருந்து வந்தது? ‘அமை’ என்பதிலிருந்து வந்தது. அமை என்றால் ‘ஆக்கு’ என்று பொருள். ஆக்குதல் என்பது குற்றம் களைந்து செம்மைப்படுத்துதல். சோறு ஆக்குகிறோம், இல்லையா? அரிசியில் கிடக்கிற கல்லும் குறுநொய்யும் ஆகிய குற்றத்தைக் களைந்து, அரிசியை உண்ணும் பதத்துக்கு ஆக்கினால் அது சோறு ஆகிறது, இல்லையா? அரிசியைச் சோறாக்குவது சமையல். மனிதனைத் தெய்வநிலைப்படுத்துவது சமயம்.

இப்போதெல்லாம் ஆக்குதல் போன்ற குறிப்புச் சொற்களால் பேசாமல், ‘சாதம் வச்சேன், குழம்பு செஞ்சேன், பொரியல் பண்ணேன்’ என்று பொதுச்சொற்களால் பேசுகிறார்கள் புதுத் தமிழர்கள். அவ்வாறு அவர்கள் வைத்ததால், செய்ததால், பண்ணியதால் இழந்தது ‘ஆக்குதல்’ என்ற ஒற்றைக் குறிப்புச் சொல்லையன்று; மனிதன் தன் நிலை உயர்ந்து தெய்வமாகத் தக்கவன் என்ற சமயக் கருதுகோளை!

உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள்

சமைத்தலில் எப்படி ஆய்தல் (கீரையை ஆய்தல்), களைதல் (கல், குறுநொய் களைதல்), தேர்தல் (பிஞ்சுக் காய் தேர்தல்), பின் ஆக்குதல் (சமைத்தல்) என்ற ஒழுங்குமுறை அமைகிறதோ, அவ்வாறே சமயத்திலும் ஆய்தல், களைதல், தேர்தல், பின் ஆதல் என்ற ஒழுங்குமுறை அமையும்.

சமயம் என்பது தமிழில் மட்டுந்தான் இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது என்று கருத வேண்டாம். சமயத்தைக் குறிக்கிற ஆங்கிலச் சொல்லான Religion என்பதற்கு வேர்தேடிப் போனாலும் ஏறத்தாழ இப்படி ஒன்றுதான் சொல்லப்படுகிறது. Religion என்ற சொல்லுக்கு மூலம் relegere—re+legere—‘மீண்டும் படி’ என்று அதற்குப் பொருள்.

உங்களுக்குச் சொல்லப்படுவதைக் கேட்டுக்கொள்வதோடு அறிதல் முடிந்துவிட்டது என்று நினைத்துப் பேசாமல் இருந்துவிடாதீர்கள். சொல்லப்பட்டதை ஆராயுங்கள்; பொருந்தாதவற்றைக் களையுங்கள்; ஏற்புடையவற்றைத் தேர்ந்துகொள்ளுங்கள்; இவ்வாறு தொகுத்துப் பின் உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள்.

சரி. இவற்றையெல்லாம் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றால், திருமூலர் சொல்கிறார். சொல்லப்பட்டவற்றை அப்படியே வாங்கிக்கொண்டு அமைந்துவிடாமல் அவற்றைக் கேள்வி கேட்டு, ஆராய்ந்து, கொள்பவை கொண்டு, தள்ளுவன தள்ளிப் பின் அமைக என்கிறார்.

அறம் கேட்டும், அந்தணர் வாய்மொழி கேட்டும்,

மறம் கேட்டும், வானவர் மந்திரம் கேட்டும்,

புறம் கேட்டும், பொன்னுரை மேனிஎம் ஈசன்

திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே. (திருமந்திரம் 300)

கேட்பது என்பது சும்மா கேட்பது அல்ல; கேள்வி கேட்பது. கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்—அறத்தை, அந்தணர் வாய்மொழியை, வானவர் மந்திரத்தை! அவற்றைக் கேட்பதோடு வேலை முடிந்தது என்று விலகிவிடாமல் மறத்தையும் கேளுங்கள். மறம் கேட்பது என்பதென்ன? அறத்தின் வழிப்பட்டு அடங்கி அன்பு செலுத்துபவர்கள் இருப்பார்கள். அறம் என்று பேசப்படுவதை மீறி அதிரடியாக அன்பு செலுத்துகிறவர்களும் இருப்பார்கள்தாமே?

ஒரு தீமையை ஒழிப்பதற்காக அறவழியில் போராடுகிறவர்கள் சமூகத்தின்மேல் அன்புடையவர்கள் என்றால், அதே தீமையை ஒழிப்பதற்காக மறவழியில் அதிரடியாகப் போராடுகிறவர்களும் சமூகத்தின்மேல் அன்புடையவர்கள்தாமே? செயலின் விளைவுகளில் வீக்கதூக்கம் இருக்கலாமே தவிர, செயலுக்கு அடிப்படையான சமூக அன்பில் வீக்கதூக்கம் இருப்பதில்லையே? எனவே, அந்த வழிமுறையையும் கேட்டுத் தெளியுங்கள். அத்தோடு நிறுத்திக்கொண்டுவிடாமல் புறம் கேளுங்கள்.

புறம் கேட்பது என்பதென்ன? உங்களில் படிந்து வரும் கருத்துக்கு முரணாக, உங்கள் கருத்தைக் குற்றம் சொல்லி, அதை மறுதலிக்கும்விதமாகப் பேசப்படும் எதிர்க்கருத்து. உங்களுக்குள் படியத் தொடங்கியிருக்கும் கருத்தை உரசிப் பார்த்துக்கொள்வதற்கு எதிர்க் கருத்தையும் கேட்டுத் தெளிய வேண்டாமா? எனவே கேளுங்கள். இப்போது நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் கருத்தின் திறத்தைச் சீர் தூக்கிப் பாருங்கள். வர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டதாக அமைந்து கொள்ளுங்கள்.

கடவுள் வசப்பட மாட்டார்

இதென்ன மடத்தனம்? ஏற்கெனவே எல்லாவற்றையும் கற்றும் கேட்டும் ஆராய்ந்தும் தெளிந்தவர்கள் சொல்கிறார்கள். பிறகென்ன? அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமைவதை விட்டுவிட்டு, நாமும் ஏன் கேள்விகேட்டு அமைய வேண்டும்? அது வெட்டி வேலையில்லையா? என்றால், திருமூலர் சொல்கிறார்:

சிறியார் மணல்சோற்றில் தேக்கிடு மாபோல்,

செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்,

குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை

அறியாது இருந்தார் அவர்ஆவர் அன்றே! (திருமந்திரம் 306)

சின்னப் பிள்ளைகள் மணல்வீடு கட்டி விளையாடும்போது, தலைவியாகப் பாத்திரம் வகிக்கும் பிள்ளை மணலைச் சோறாக இட, தலைவனாகப் பாத்திரம் வகிக்கும் பிள்ளை அந்த மணலைச் சோறாகவே கற்பித்துக்கொண்டு உண்பதாகப் பாவித்து ஏப்பமும் விடும். அது பாவனையே அன்றி உண்மையன்று. அவ்வாறே, மெய்ப்பொருளை மற்றவர்கள் கண்டுசொன்னார்கள்; நான் கேட்டேன்; அவ்வாறு கேட்டதே நான் கண்டுகொண்டதற்குச் சமம் என்று ஒருவர் சொல்வாரேயானால், அது பேதமையே அல்லவா? பாவனையே அல்லவா?

தானே ஆய்ந்து தெளிய வேண்டிய ஒன்றை, யாரும் சுட்டிக்காட்டி அறிவிக்க முடியாத ஒன்றை, யாரோ சுட்டிக்காட்டினார்கள், நானும் அறிந்துவிட்டேன் என்று ஒருவர் பேசுவாரேயானால், அவர் அறியாதவரே அல்லவா? பிள்ளைகள் விளையாட்டு மகிழ்ச்சிக்காகப் பொய்யை மெய்போலப் பாவித்துக்கொள்ளலாம். சமய நெறியில் நிற்பவர்களும் அப்படிப் பாவித்துக்கொண்டால் கடவுள் கைவசப்பட்டுவிடுவாரா?

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து

ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது

வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்

இழுக்குஇன்றி எண்ணிலி காலம் அதாமே. (திருமந்திரம் 305)

கற்று அறிய வேண்டியதை ஐயம் திரிபு அறக் கேள்வி கேட்டுத் தெளிவாக அறிய வேண்டும். அவ்வாறு தேர்ந்து தெளிந்துகொண்ட உண்மைநெறியில் வழுக்காமல் நிற்க வேண்டும். இந்திரன் வழுக்கி விழுந்து அசிங்கப்பட்ட கதை தெரியும் அல்லவா? மெய்யான நெறியைப் பெற்று, வழுக்காமல் அதில் அமைந்து நின்றவர்கள் முற்றும் நிறைந்துவிட்டவர்கள்; பக்குவமாகச் சமைந்துவிட்டவர்கள்.

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்;

இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்;

மகிழநின்று ஆதியை ஓதி உணராக்

கழியநின் றார்க்குஒரு கற்பசு ஆமே. (திருமந்திரம் 308)

சமய நெறியின் இலக்காக நிற்கிற கடவுளை, ‘மிகப் பழைய ஆள், உலகத்தையும் நம்மையும் உருவாக்கியதே கடவுள்தான்’ என்று சிலர் புகழ்கிறார்கள். ‘என்ன பெரிய கடவுள்? இல்லாததைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் மனிதர்கள்’ என்று சிலர் இகழ்கிறார்கள். மகிழ்கிறவர்கள் மகிழட்டும்; இகழ்கிறவர்கள் இகழட்டும்.

நானோ உங்களுக்குச் சொல்கிறேன்: ஆராயுங்கள்; தள்ளுங்கள்; தெளியுங்கள்; கொள்ளுங்கள். அவ்வாறு ஆராய்ந்து கொள்பவர்களுக்குக் கடவுள் என்னும் கருதுகோள் ஒரு காராம்பசு. ஆராயாமலே கண்டுகொண்டதாகக் குதியாட்டம் போடுபவர்களுக்குக் கடவுள் ஒரு கற்பசு. கறப்பதாக நினைத்துக்கொண்டு காம்புகளை இழுக்கலாமே ஒழியப் பால் வராது.

கற்பசுக்களைக் கறக்க முயல்கிறவர்கள்தாம் உலகத்தில் கணக்கின்றி இருக்கிறார்கள். பதுக்கி வைத்திருக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தி ஆட்டம் காட்டுகிறார்கள். சமயங்கள் மனிதனைச் சமைத்து அவனைத் தெய்வநிலைக்கு உயர்த்த முடியாமல் போக என்ன காரணம்? சமயங்களுக்குத் திறம் போதவில்லையா அல்லது மனிதர்களுக்கு உண்மையை அறிய வேண்டும் என்கிற முயற்சி போதவில்லையா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

(இருளில் வெளிச்சம் படும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x