Last Updated : 01 Jan, 2018 11:32 AM

2  

Published : 01 Jan 2018 11:32 AM
Last Updated : 01 Jan 2018 11:32 AM

ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

ஜோதிடம் என்பது கலை. அந்தக் கலையைப் பயில்வது சுலபம். சுவாரஸ்யம். ஜோதிடம் என்பது கணக்கு. அந்தக் கணக்கை நாமே போட்டு, விடை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையை, நம் வாழ்க்கையை நாம் வாழாமல் எப்படி? ஆகவே ஜோதிடம் குறித்து உங்களுடன் பேசுவதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷமே!

இந்தத் தொடரில், ஜோதிடத்தைப் பற்றியும் ஜோதிடத்தில் உள்ள சில தோஷங்கள் பற்றியும் பேசுவோம்.

ஜோதிட ரீதியாக உள்ள சில தோஷங்கள் பற்றி சிலர் அறியாமையால் குழப்பங்களை ஏற்படுத்தி வீண்பயத்தை பரப்புகிறார்கள்.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரிவான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும், உங்கள் முன் வைக்கப் போகிறேன்.

இந்தத் தொடர் மூலமாக, உங்கள் குழப்பங்களுக்கு விடை காணவும் தேவையற்ற பயங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜோதிடம் என்பது எத்தனை எளிமையானது, எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்களே உணருவீர்கள். உங்கள் ஜாதகத்தை உங்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்று முழுமையாகப் பேசுவோம்!

குரு வாழ்க! குருவே சகலமும்! குருவே துணை!

முதலில் எல்லோருக்கும் உள்ள ஆரம்பக் கேள்வி... ஜோதிடம் என்றால் என்ன? ஒருவகையில்... இதுதான் ஆரம்பக் கல்வி!

வாழ்க்கை என்னும் இருள் சூழ்ந்த பாதைக்கு வழிகாட்டுவது ஜோதி என்னும் ஜோதிடம்! ஜோதி என்றாலே நெருப்பு. இந்த பிரபஞ்சம் இயங்குவது, கிரகங்கள் இயங்குவது, என அனைத்துமே சூரியன் எனும் ஜோதியால்தான்.

ஒருவருக்கு ஜாதகத்தைக் கணிக்கும்போது, லக்னம் என்னும் புள்ளியிலிருந்தே ஜாதகம் இயங்கும்.

இந்த லக்னம் என்பது சூரியனின் ஒளிப்புள்ளி. எனவே லக்னம் என்பதை உயிர் என்னும் ஆத்மா என்று சொல்வதே பொருந்தும். அதனால்தான் சூரியனுக்கு ஆத்மகாரகன் என்றே பெயர்.

இப்படி நம் உயிர் தொடங்கி உலகின் அனைத்து இயக்கங்களும், கிரகங்களும், அந்த கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களும், சூரியனின் தலைமையைக் கொண்டே இயங்குகின்றன.

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள 12 ராசிகள், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் அமைவைப் வைத்தே ஒரு ஜாதகம் கணிக்கப்படுகிறது.

இப்படிக் கணிக்கப்படும் ஜாதகங்களில் நம்முடைய எதிர்காலம் முதலான அனைத்து விஷயங்களும் உள்ளன. எந்த நேரத்தில் எந்த பலனைத் தரவேண்டும் என்பதை தசாபுத்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எப்படித் தரவேண்டும் என்பதை கோச்சார கிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

விதி, மதி, கதி என்ற மூன்று அம்சங்களே ஜோதிடத்தில் பிரதானமானது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்த வல்லுநர்கள்.

1. விதி என்பது நமக்கு என்ன விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுவது.

2. மதி என்பது இப்படி விதிக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்பதைக் காட்டுவது.

3. கதி என்பது மாற்றியமைக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவது என்பதைக் குறிக்கிறது.

இப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களில் தோஷங்கள் என சில அமைப்புகளை ஜோதிடர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

என்னென்ன தோஷங்கள்?

· செவ்வாய் தோஷம்.

· ராகு-கேது தோஷம்.

· சனி தோஷம்.

· ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

நாம் இப்போது பார்க்கப்போவது இந்த தோஷங்கள் என்ன செய்யும்? இந்த தோஷங்கள் உண்மையிலேயே பார்க்கப்படவேண்டியதா? தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? கவலைப்பட தேவையில்லையா? தோஷத்தை மீறினால் ஏதாவது பாதிப்பு வருமா? பாதிப்பு வரும் என்றால் அதற்குப் பரிகாரம் உண்டா? என பலவிதமாக ஆராய்ந்து எளிமையாகவும், உங்களுக்கு புரியும்படியாகவும் விளக்கிச் சொல்லப்போகிறேன்.

முதலில் செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம்.

ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது தான்.

அப்படி இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?

உண்மையில்... செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.

தோஷம் என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது. சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.

ஒருவர் ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம் உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.

உண்மையில், முன்காலத்தில் சுக்கிரனுக்கும், செவ்வாய் தோஷம் பார்க்கப்பட்டு வந்தது. அப்படி சுக்கிரனுக்கும் சேர்த்து பார்க்கப்படும் பட்சத்தில் இங்கு ஒருவருடைய ஜாதகம் கூட, செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கவே முடியாது.

காலப்போக்கில் சுக்கிரனுக்கு... செவ்வாய் தோஷம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது லக்னம் மற்றும் ராசிக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.

சாபம் என்றால் சாப விமோசனம் இருப்பது போல், தோஷம் என்றால் தோஷ நிவர்த்தி அல்லது விமோசனம் கண்டிப்பாக உண்டு.

நாம் ஏற்கனவே கூறியபடி லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாக” சொல்லிவிட முடியாது.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மிதுனம், கன்னி லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள் உண்டு.

இன்னும் தோஷநிவர்த்திகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

- தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x