Last Updated : 19 Dec, 2017 02:58 PM

 

Published : 19 Dec 2017 02:58 PM
Last Updated : 19 Dec 2017 02:58 PM

சுவாமி சரணம்! 32: மன்னன் சூட்டிய மணிகண்டன் திருநாமம்!

 

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் என்று பார்த்தால், இந்த உலகில் மிகச் சிலரே அதாவது நம்மை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், புரியாதவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே கொண்ட மிகச் சிறிய உலகம்தான் நம்முடையது. இதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா. அவர்களை, அதாவது அந்த மிகச் சிலரை, நாம் புரிந்து கொள்வதே இல்லை. அவர்களும் நம்மை உணர்ந்து கொள்வதே கிடையாது.

புரிந்து கொள்ளாததால்தான், உணர்ந்து கொள்ளாமல் இருப்பதால்தான் இங்கே பிரச்சினைகள். உறவுகள் முட்டிக் கொண்டு, முகம் திருப்பிக் கொள்வதற்கு ஆரம்பமே புரிந்து கொள்ளாததுதான். நம்முடைய பெயரையும் ஊரையும் குணங்களையும் சோகங்களையும் வலிகளையும் நம் குடும்பப் பின்னணிகளையும் தெரிந்து கொண்டிருக்கிற அந்த மிகச் சிலரில், நல்லவர் கெட்டவர் என்பதையெல்லாம் என்பவரையெல்லாம் பகுத்துப் பிரித்து தெரிந்து கொள்ளாமலே இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘ஏன் அவன் என்னைப் புரிஞ்சுக்காமலயே இருக்கான்’ என்று புலம்பாதவர்களே இங்கு இல்லை. ‘நான் உம் மேல எவ்ளோ பிரியம் வைச்சிருக்கேன் தெரியுமா’ என்று கேட்காதவர்களே இல்லை. யாரோ யாரிடமோ இந்த வார்த்தையைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். இதுபோல் நொய்மையான, மோசமான சூழல் வேறு எதுவுமே இல்லை.

ஆனால் பிறந்த அந்தக் குழந்தைக்கு எல்லாமே தெரிந்திருந்தது. அருகில் நிற்பவர்களையெல்லாம் அறிந்திருந்தது. பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன், குழந்தைக்கு அருகில் வந்தான். அழுது கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடன் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் பூரித்துப் போனான் மன்னன்.

சுற்றுமுற்றும் பார்த்தான். குழந்தை அழுதுகொண்டே இருந்தது. நாலா திசையிலும் பார்த்தான். குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. ‘ஏம்பா... குழந்தையைப் பெத்தவங்க, சொந்தக்காரங்கன்னு யாராவது அந்தப் பக்கம் இருக்காங்களானு பாருங்க’ என்று மன்னன் சொல்ல... வீரர்கள் குறுக்கும்நெடுக்குமாக ஓடினார்கள். எல்லா திசையிலும் பறந்தார்கள். குழந்தை அழுது கொண்டேதான் இருந்தது.

'அழாதேடா... அழாதேடா...’ என்று சொல்லிக் கொண்டே. அந்தக் குழந்தையை அப்படியே வாரியெடுத்து அணைத்துக் கொண்டான் மன்னன். அவ்வளவுதான்... குழந்தை அழுகையை நிறுத்தியது. மன்னனின் முகத்தையே பார்த்தது. சிரித்தது. நெக்குருகிப் போனான் மன்னன்.

வீரர்கள் மூச்சிரைக்க ஓடிவந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் கடந்தும் தேடிவிட்டோம். எவரையும் காணோம் மன்னா என்றார்கள். அதிர்ந்து போனான் மன்னன். குழந்தையை யார் போட்டது. போட்டுவிட்டு போய்விட்டார்களே. என்னடா இது உலகம். ச்சே..! அலுத்துக் கொண்டான். நல்லவேளை... யானோயோ புலியோ, கரடியோ சிங்கமோ வந்திருந்தால் என்னாகியிருக்கும். நினைக்கும்போதே கலவரமானான்.

சரி... நடப்பது நடக்கட்டும். இது என் குழந்தை. என் ராஜா. பந்தளதேசத்து இளவரசன் இவனே! பூரிப்புடனும் புளகாங்கிதத்துடனும் குழந்தையை நெஞ்சில் அணைத்தபடி அரண்மனைக்குக் கிளம்பினான். புத்திர சோகம், புத்திரன் இல்லையே என்கிற பெருஞ்சோகம் அவன் முகத்தில் காணாது போயிருந்தது.

மகாராணி, இன்னும் குதூகலமானாள். குழந்தையை கண்ணில் ஒற்றிக் கொண்டாள். நெஞ்சில் வைத்துக் கொண்டாள். விரல் வருடினாள். தலை வருடினாள். கன்னம் வருடினாள். ‘இது இனி நம் குழந்தைதானே. யாரும் வரமாட்டார்கள்தானே. வந்து, என் குழந்தை. கொடு குழந்தையை என்று கேட்டு நம்மிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளமாட்டார்கள்தானே..! மன்னனிடம் கேட்டாள். யாரும் வரமாட்டார்கள். வந்தாலும் தரவேண்டாம். பார்த்துக் கொள்ளலாம். இது நம் குழந்தை. பிள்ளை இல்லாத நமக்கு, இறைவனே தந்த கொடை இது! என்று கண்ணீர் மல்க, மகிழ்ந்தான்.

பந்தள தேசத்தின் அரண்மனையே அல்லோலப்பட்டது. எல்லோரும் உற்சாகத்தில் திளைத்தார்கள். பந்தள தேசம் முழுவதும் மெல்ல மெல்லப் பரவியது. அந்த தேசத்தின் மக்கள், நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். நெகிழ்ந்தார்கள். மகிழ்ந்தார்கள். ஆரவாரித்தார்கள். ஆர்ப்பரித்தார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். அரண்மனை நோக்கி ஓடி வந்தார்கள். ‘எங்க ராஜகுமாரனைப் பாக்கணும்’ என்று உற்சாகத்துடன் குரல் கொடுத்தார்கள்.

அந்தக் குழந்தை, வந்த நேரமே... எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. குழந்தையே இல்லாத மன்னனுக்கும் மகாராணிக்கும் மிகப்பெரிய நிம்மதியும் நிறைவும் கிடைத்தாகிவிட்டது. இனி இந்த உலகத்துக்கே நிம்மதியும் நிறைவும் சந்தோஷமும் ஆனந்தமும் கிடைக்கப் போகிறது, கிடைத்துக் கொண்டே இருக்கப் போகிறது என்பதையெல்லாம் எவரும் அறிந்திருக்கவில்லை.

'ஆமாம்... குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்’ என்று ராணி கேட்டாள். மன்னன் யோசித்தான். பிறகு அவளிடம், 'குழந்தையின் கழுத்தில், சின்னதாக மணி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது பார்த்தாயா’ என்றான் மன்னன்.

குழந்தையின் கழுத்தைப் பார்த்தாள். கழுத்தையொட்டி மணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. கழுத்தையும் மணியையும் மெல்ல தடவினான் மன்னன்.

'குழந்தைக்குச் சூட்ட பெயர் கிடைத்துவிட்டது’ என்றான் மன்னன். என்ன என்ன... மகாராணி ஆர்வத்துடன் காது தீட்டி, கேட்டாள்.

‘நம் குழந்தையின் பெயர்... மணிகண்டன்’ என்றான் மன்னன்.

இன்றைக்கும் சபரிமலை சந்நிதானத்தில்... சந்நிதிக்கு எதிரில் உள்ள சிறிய மண்டபத்தில்... மணியாக இருந்து மணியோசையாய் எல்லோருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான் மணீகண்ட சுவாமி.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x