Last Updated : 16 Dec, 2017 02:56 PM

 

Published : 16 Dec 2017 02:56 PM
Last Updated : 16 Dec 2017 02:56 PM

சுவாமி சரணம்..! 30: வரமே சாபமான கதை தெரியுமா?

'நல்லவங்களுக்குத்தாம்பா எப்பவும் எதுனா ஒரு குறையையும் வருத்தத்தையும் கொடுத்துடுறான் கடவுள். நம்மளை சோதிக்கறதே வேலையாப் போச்சு கடவுளுக்கு’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள் நிறைந்த உலகம் இது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நல்லதும்கெட்டதுமானதுதான் இந்த வாழ்க்கை என்பது தெரியவரும். நல்லது நடந்துகொண்டிருக்கும் போதே, கெட்டதும் தடக்கென்று வரும். கெட்டதாகவே வந்து கொண்டிருக்கும் போது, ஏதேனும் ஒரு நல்லது நடந்து, மலரச் செய்யும்.

’நல்லவங்களுக்குத்தாம்பா எப்பவும் சோதனை’ என்று அலுப்பும்சலிப்புமாகச் சொல்லிக்கொண்டே இருப்பவர்களா நீங்கள். இனி சொல்லாதீர்கள். தங்கத்தைத்தான் புடம் போடுவார்கள். தகரத்தையா புடம் போடுவார்கள். சோதனை யாருக்கெல்லாம் வருகிறதோ... அவர்களை நோக்கி கடவுள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறார் என்றே அர்த்தம். அங்கே அந்த மனிதர்களைக் கொண்டு, அவருக்கும் உலகுக்குமான வாழ்க்கைப் பாடத்தை கடவுள் உணர்த்துகிறார் என்று அர்த்தம்.

நம் வீட்டில் கல்யாணம் என்றால், உறவுகளையும் நண்பர்களையும் தெரிந்தவர்களையும் அறிந்தவர்களையும் அழைக்கிறோம். முக்கியமாக, முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஆசிர்வதிக்கும்படி அழைக்கிறோம். அப்பேர்ப்பட்ட தேவர்களுக்கு , துர்வாச முனிவரின் கோபத்தால் சாபம் கிடைத்தது. சாபத்தால், பொலிவையெல்லாம் இழந்தார்கள். இழந்ததைப் பெற வேண்டுமெனில், பலம் கிடைக்க வேண்டும். பலம் கிடைக்க, கடலில் அமிர்தம் கடைய வேண்டும். இந்த அமிர்தத்தைச் சாப்பிட்டால், பலம் கிடைக்கும். ஆனால் அமிர்தம் கடையவே பலமில்லை. அதற்கு பலம் பொருந்திய அசுரர்கள் தேவைப்பட்டார்கள். அசுரர்களும் வந்தார்கள். ஆனால் அமிர்தம் வந்ததும் பிடுங்கிக் கொண்டார்கள். அப்போது மகாவிஷ்ணு., மோகினிப் பெண்ணாய் அவதாரம் எடுத்தார். கொஞ்சிப் பேசி, அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து வாங்கினாள். அமிர்தத்தை தேவர்கள் அனைவருக்கும் வழங்கினாள். பலம் கிடைத்தது. பலன் பெற்றார்கள். சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார்கள். நல்லதுகெட்டதுகளை உணர்த்துவதற்காகவே, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார்.

அதேபோல், மகிஷி எனும் அரக்கியை அழிக்க, ஓர் அவதார நிகழ்வும் அதையொட்டி மக்களுக்கும் உலகுக்கும் ஏதோவொன்றை உணர்த்தவும் திருவுளம் கொண்டார் இறைவன். அதற்காகத்தான், அப்படியொரு வரத்தைக் கேட்கும் உணர்வைத் தூண்டினார் திருமால். ஆணும் ஆணும் இணைந்ததால் பிறக்கும் ஆண்மகன், 12 வயது பாலகனாய் இருக்கும் வேளையில், என்னைக் கொல்லுகிற சக்தி இருக்கவேண்டும் என வரம் கேட்டாள்.

இந்த வரத்தைக் கேட்டவளைக் கொண்டு வரம் கேட்டவளையே அழிப்பதற்கான முயற்சிதான் அவதாரம். மீண்டும் மோகினி அவதாரம். மோகினியாய் வந்து, பிறகு ஐயப்பனை உருவாக்குகிற அவதாரம்!

அவதாரம் எடுப்பதில்தான் மகாவிஷ்ணு அசகாயசூரராயிற்றே. எத்தனையோ அவதாரங்களை எடுத்திருக்கிறார். இந்த உலகத்தை உய்விக்க, பலப் பல அவதாரங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவ்வளவு ஏன்... இதே மோகினி அவதாரத்தை, பாற்கடலைக் கடையும் போது, அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்க எடுத்தார் அல்லவா. அதேபோல் ஐயப்ப சுவாமிக்காக, அவரின் வருகைக்காக இன்னொரு முறை மோகினி அவதாரம் எடுத்தாரில்லையா.

அதேபோல், மோகினி அவதாரம் இன்னொரு தடவையும் எடுத்தார். அதையும் பார்த்துவிடுவோம்.

இப்படித்தான் பஸ்மாசுரன் எனும் அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவனுக்கு முன்னே நின்று காட்சி கொடுத்தார். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். ‘நான் யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் உடனே எரிந்து சாம்பாலாகிவிட வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்’ என்று கேட்டான்.

சிவபெருமானும் அந்த வரத்தைக் கொடுத்தார்.

ஆனால், பஸ்மாசுரனுக்கு திடீரென வந்தது சந்தேகம். உலகில், சந்தேகம் யாரைவிட்டது. ‘நாம் நினைத்தபடி, வரம் கொடுத்துட்டாரா, இல்லையா. நிஜமாவே, தலைல கை வைச்சா, எரிஞ்சு பஸ்பமாகுமா. யோசித்தான். சந்தேகப்பட்டான். சோதித்துப் பார்க்கலாமே என முடிவு செய்தான். அதன்படி தலையில் கை வைத்து சோதிக்க முடிவு செய்தான். அவன் யார் தலையில் கைவைக்க முடிவு செய்தான் தெரியுமா? சிவபெருமான் தலையில் கைவைக்க முடிவு செய்தான்.

தானம் கொடுத்த மாட்டையே பல்லைப் பிடுங்கிப் பார்த்த கதை என்பார்களே. அதேபோல், வரம் கொடுத்தவரின் தலையிலேயே கை வைக்க நினைத்தான் பஸ்மாசுரன். அப்போது சிவபெருமானைத் தேடி பஸ்மாசுரன் ஓட... அங்கே அழகிய இளம்பெண், தேவதை மாதிரி ஒருத்தி, மோகினி போன்ற வசீகரம் கொண்டவள் அவனுக்கு எதிரே வந்து நின்றாள். நின்றது... மோகினி அல்ல. மோகினியாய் வந்த திருமால். சிவனாரக் காக்க திருமால் மோகினியாய் வந்தார்.

அவளைப் பார்த்ததும் கிறங்கிப் போனான் பஸ்மாசுரன். ‘வா... ஆடுவோம். உனக்கும் எனக்கும் போட்டி’ என்றாள். அவளை அடையும் நோக்கத்தில் சரியென்றான். ஆட்டம் தொடங்கியது. அவள் ஆடினான். அவளும் ஆடினாள். மோகினி வலது காலை தூக்கினாள். அவனும் வலது கால் தூக்கி ஆட்டம் போட்டான். பிறகு இடது காலால் கோலமிடுவது போல் தரையில் விரல்களால் வித்தை காட்டினாள். அவனும் விரல்களால் கோலமிட்டான்.

மோகினி, வலது கரத்தைத் தூக்கினாள். அவனும் கையைத் தூக்கினான். அதில் அபிநயம் பிடித்துக் காட்டினாள். அவனும் அபிநயம் பிடித்தான். இதேபோல் இடது கையால் அபிநயம் பிடித்தாள். அவனும் இடது கையால் அபிநயம் பிடித்தான்.

மீண்டும் வலது கையைத் தூக்கினாள். அவனும் தூக்கினான். வலதுகையால் தலையைத் தொட்டாள். அவனும் தொட்டான். அவ்வளவுதான்... பஸ்பமானான். வரமே சாபமாகிப் போனது பஸ்மாசுரனுக்கு!

ஆக... மோகினிக்கு வருவோம். மோகினியாய் உருவெடுத்து மூன்றாவது முறையாக, வலம் வரப்போகிறார் திருமால். மகிஷி எனும் அரக்கியை அழிக்க, மணிகண்ட அவதாரத்தை நிகழ்த்தப் போகிறார் பரமேஸ்வரன்.

இது சைவமும் வைணவமும் இணைந்த மற்றொரு சரிதம். அந்தச் சரிதத்தின் நாயகன். ஸ்ரீமணிகண்ட சுவாமி.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x