Published : 14 Dec 2017 12:22 PM
Last Updated : 14 Dec 2017 12:22 PM

சங்கடங்களைத் தீர்க்கும் சனி பகவான்

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூரில் சனீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. செண்பகநல்லூர் என்ற பகுதியை அரசாண்ட மன்னன் தினகரன், குழந்தைப்பேறின்மையால் கவலை அடைந்தான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டினான். அப்போது அவனுக்கு அசரீரி கேட்டது. அதில் அவனது வீட்டுக்குச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்துவரவேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்தது.

12MAPCS_KUCHANOOR-SANISVARAR குச்சனூர் மூலவர் சனீஸ்வரர்.

சில நாட்களில் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறுவனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்தான். அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அரசனும், அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத்திறனுடன் இருந்தான். சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான்.

இந்நிலையில் அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்ததால் பெரும் துன்பத்துக்கு ஆளானான். தந்தையின் துன்பத்தைக் கண்டு வருந்திய சந்திரவதனன், சுரபி நதிக்கரையில் இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து வழிபடத் தொடங்கினான். மனமிறங்கிய சனீஸ்வரர் அவன் முன் தோன்றி, “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முற்பிறவி பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்கு பல துன்பங்கள் வருகின்றன.

இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மைகள் அளிக்கப்படும்” என்றார்.

சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். சனீஸ்வரர் அவனுடைய தந்தைக்குப் பதிலாக, அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்தக் காலத்தில் அவனுக்கு பல துன்பங்கள் வரும். அந்த துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும் என்றார். சனீஸ்வரர் அளித்த துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வரர், இந்த ஏழரை நாழிகைக் கால சனிதோஷம்கூட சந்திரவதனனின் முற்பிறவியின் வினைகளுக்கேற்பதான் வந்ததாகவும், இனி யாருக்கும் எக்குறையும் இருக்காதென்றும் உறுதி அளித்தார்.

உடனே சந்திரவதனன் சனீஸ்வரரிடம் சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை அந்த துன்பத்தில் இருந்து மீட்க, அங்கேயே எழுந்தருள வேண்டினான். சனீஸ்வரரும் அதை ஏற்று அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார். சந்திரவதனன், சுயம்பு வடிவிலான சனீஸ்வரர் தோன்றிய அந்த இடத்தில் சிறிய கோயிலை அமைத்து அதற்கு குச்சுப்புல்லால் கூரையை அமைத்தான். அதன் பிறகு செண்பகநல்லூர் என்றிருந்த ஊர் குச்சனூர் என்று பெயர் மாற்றமடைந்ததாக வரலாறு.

டிசம்பர் 19-ம் தேதி சனிப் பெயர்ச்சி

வருகிற (டிச.) 19-ம் தேதி காலை 9.59 மணிக்கு சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். தொடர்ந்து இரண்டரை ஆண்டு காலம் அந்த ராசியில் சஞ்சாரம் செய்து சனிபகவான் அருளாசி வழங்குவார். இந்த சனிப் பெயர்ச்சியால் மேஷம், கடகம், துலாம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறுவர். அதே வேளையில் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் அவசியம் பரிகாரம் செய்து கொண்டு சனி பகவானின் அருளை பெறலாம்.

இந்த சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு பரிகார ராசிக்காரர்களுக்காக குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை 10 நாட்கள் தினமும் காலை 6 மணி முதல் - 9 மணி வரையிலும், 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 4.30 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x