Last Updated : 06 Dec, 2017 09:55 AM

 

Published : 06 Dec 2017 09:55 AM
Last Updated : 06 Dec 2017 09:55 AM

சுவாமி சரணம்! 20: 18 மலைகள்... 18 தெய்வங்கள்... 18 படிகள்!

வாழ்க்கையில், அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவதற்கான படிகள், பக்தி, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உண்மை, நேர்மை, ஒழுக்கம் என்று இருக்கின்றன. பக்தி இருந்துவிட்டால், அங்கே தன்னம்பிக்கை வந்துவிடும். நம்பிக்கை இருக்கிற இடத்தில் உழைக்கத் தயங்கமாட்டோம். கடும் உழைப்பைக் கொடுக்கிற போது, எத்தனை தடைகள் வந்தாலும், விடாமுயற்சியுடன் செயல்படுவோம். பக்தியும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கிறவர்கள், உண்மையாய் இருப்பார்கள். நேர்மையுடன் செயல்படுவார்கள். இவை ஒழுக்கத்துடன் வாழக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். ஒழுக்கத்துடன் வாழ்வது குறித்து அடுத்தவருக்கு உதாரணமாய், உதாரண புருஷராய் திகழச் செய்யும்.

சபரிமலையின் பதினெட்டுப் படிகள், பக்தியுடன் அணுகவேண்டியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமான பிரார்த்தனையுடன் அந்தப் படிகளைக் கடக்கும் போது, அந்தப் படிகளின் சக்தி நமக்குள் வியாபிக்கும். நம்மை என்னவோ செய்யும். உலகின் சத்விஷயங்கள் எவையோ, அவற்றை நோக்கி, நம்மை இட்டுச் செல்லும். நகர்த்தும். நலங்கள் யாவும் தந்தருளும்.

பதினெட்டுப் படிகளும் பதினெட்டு மலைகள். பதினெட்டு மலைகளில் உள்ள தேவதைகள். எல்லாத் தருணங்களிலும் தேவதை வழிபாடு, மிக உன்னதமான விஷயங்களைத் தரக்கூடியவை. அதனால்தான் எல்லாக் கிராமங்களிலும் தேவதைகள், கிராம தெய்வங்களாக கோயிலில் குடிகொண்டிருக்கிறார்கள்.

நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் இருக்கும். அந்தக் குலதெய்வங்களை அடிக்கடி வணங்கி வருவோம். குலதெய்வம் இருந்தாலும், இஷ்டதெய்வம் என்று மனதில் வரித்துக் கொண்டு, சில தெய்வங்களை வழிபடுவோம். அதேபோல், சபரிமலையின் பதினெட்டுப் படிகளில் உள்ள, பதினெட்டு மலைகளைச் சேர்ந்த பதினெட்டுத் தேவதைகளை ஆத்மார்த்தமாக, மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள். இந்தப் பிரார்த்தனையின் பலனை, வெகு சீக்கிரத்திலேயெ உணருவீர்கள்.

பதினெட்டு மலைகள், பதினெட்டு படிகளாக இருக்கின்றன அல்லவா. தலைப்பாறை மலை, காள்கெட்டி மலை, புதுச்சேரி மலை, கரிமலை, இஞ்சிப்பாறை மலை, நிலக்கல் மலை, தேவர் மலை, பாதமலை, வட்டமலை, சுந்தரமலை, நாகமலை, நீலிமலை, சபரிமலை, மயிலாடும் மலை, மதங்கமலை, சிற்றம்பல மலை, கவுண்டன் மலை, காந்தமலை எனப்படும் பொன்னம்பல மேடு என பதினெட்டு மலைகளும் பதினெட்டுப் படிகளாக அமைந்திருக்கின்றன.

அதுமட்டும்தானா... இவை மட்டும்தானா?

இந்தப் பதினெட்டுப் படிகளில், பதினெட்டு தெய்வங்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அந்த பதினெட்டு தெய்வங்களும், கடவுளர்களும் நமக்கு ஆசீர்வதித்து அருள்வதாக நம்பிக்கை.

முதலாம் திருப்படியில் சூரிய பகவான், இரண்டாம் திருப்படியில் சிவபெருமான், மூன்றாம் திருப்படியில் சந்திரன், நான்காம் திருப்படியில் பராசக்தி, ஐந்தாம் திருப்படியில் செவ்வாய், ஆறாம் திருப்படியில் முருகப்பெருமான், ஏழாம் திருப்படியில் புதன், எட்டாம் திருப்படியில் விஷ்ணு, ஒன்பதாம் திருப்படியில் குரு பகவான் ஆகியோர் கொலுவிருக்கின்றனர்.

பத்தாம் திருப்படியில் பிரம்மா, பதினோராம் திருப்படியில் சுக்கிரன், பனிரெண்டாம் திருப்படியில் மகாலக்ஷ்மி, பதிமூன்றாம் திருப்படியில் சனீஸ்வர பகவான், பதினான்காம் திருப்படியில் எமதருமன், பதினைந்தாம் திருப்படியில் ராகு பகவான், பதினாறாம் திருப்படியில் சரஸ்வதிதேவி, பதினேழாம் திருப்படியில் கேது பகவான், பதினெட்டாம் படியில் விநாயகப் பெருமான் ஆகியோர் சூட்சும ரூபமாக இருந்து, நமக்கு எல்லா செல்வங்களையும் அனைத்து சந்தோஷங்களையும் தந்தருள்கிறார்கள்.

இங்கே... ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா?

ஒற்றைப்படை வரிசையையும் இரட்டைப்படை வரிசையையும் தனியே கவனித்துப் பாருங்கள். ஒற்றைப்படையில், அதாவது ஒற்றைப்படை வரிசையில், அதாவது, ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, பதிமூன்று, பதினைந்து, பதினேழு ஆகிய படிகளில் நவக்கிரகங்களும் அமைந்திருக்கின்றன.

அதேபோல், இரட்டைப்படை வரிசையில், அதாவது, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பனிரெண்டு, பதினான்கு, பதினாறு, பதினெட்டு ஆகிய இரட்டைப்படை வரிசை கொண்ட படிகளில், தெய்வங்கள் குடியிருக்கின்றன.

இந்தப் பதினெட்டுப் படிகளுக்கு, வெகு விமரிசையாக நடைபெறும் பூஜையைத் தரிசித்திருக்கிறீர்களா. அந்த படிபூஜையைப் பார்த்தால், தரிசித்தால் சிலிர்த்துபோய்விடுவோம். மெய்ம்மறந்துவிடுவோம்.

பதினெட்டுப் படிகளை பூக்களாலும் திருவிளக்குகளாலும் அலங்கரிப்பார்கள். கீழே பதினட்டாம் படி ஏறுகிற இடத்தில், தந்திரி நின்று கொள்வார். அங்கே, பதினெட்டு வெள்ளிக் கலசங்களை வைத்து, அவற்றுக்குப் பூஜைகள் செய்வார். ஒவ்வொரு படியிலும், பூஜை நடைபெறும். படிபூஜை சிறப்புற நடைபெறும்.

அதையடுத்து பதினெட்டுப் படிகளுக்கும் பதினெட்டுக் கலசங்களைக் கொண்டு, அபிஷேகம் நடைபெறும். இதை கலசாபிஷேகம் என்பார்கள்.

பிறகு, தேங்காயை இரண்டாக உடைத்து, அந்தத் தேங்காயில் நெய்யை விட்டு, திரியை வைத்து நெய்விளக்கு ஏற்றுவார்கள். பதினெட்டுப் படிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கும்.

பின்னர், படிகளுக்கு நைவேத்தியமும் பூஜையும் நடைபெறும். பிறகு, பிரசன்ன பூஜை செய்வார் தந்திரி. கற்பூர தீபாராதனை காட்டப்படும். பிரதான தந்திரியும் மற்ற தந்திரியும் பக்தர்களுமாகச் சேர்ந்து பதினெட்டுப் படிகளில் ஏறுவார்கள். ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று நெக்குருகி கோஷமிடுவார்கள்.

அதன் பிறகு, சந்நிதானம். ஐயப்ப சுவாமியின் சந்நிதானம். தகதகவென ஜொலிக்கும் அற்புதமான சந்நிதானம். இந்த சந்நிதியில் உள்ளே குடிகொண்டு, உலகத்தையே தன் அருளால் நல்ல விதமாய் இயங்கச் செய்யும் ஐயப்ப சுவாமியின் மகா சந்நிதானம். அரவணப்பாயசம் நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டுவார்கள். ‘இதுக்குத்தாம்பா வந்தோம். இதைப் பாக்கறதுக்குத்தான்யா வந்தோம். அப்பா... ஐயப்பா... எங்க குடும்பத்தையும் எங்க வம்சத்தையும் காப்பாத்துப்பா. எல்லாரையும் காப்பாத்துப்பா...’ என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொள்வார்கள்.

சாமி அண்ணா, புனலூர் தாத்தா முதலான எண்ணற்ற ஐயப்பனின் பேரருளைப் பெற்ற ஐயப்ப சாமிகள், ஐயப்ப குருமார்கள், மகோன்னதம் அடைந்த மகான்கள், அவர்களுடைய வழிகாட்டுதலால் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு, பிறவிப்பயன் அடைந்ததாக பெருமிதப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் இன்னுமாக, அவர்களின் அடியொற்றி வருகிற பக்தர்கள் பல லட்சக்கணக்கில், வந்துகொண்டே இருக்கிறார்கள்.

பல முறை சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறீர்களா? வருஷா வருஷம், ஐயப்பனைத் தரிசிக்க விரதம் இருப்பவரா நீங்கள்? படிபூஜையை பல முறை தரிசித்திருக்கிறேன் என்று நெகிழ்ந்தும் மகிழ்ந்துமாகச் சொல்பவரா?

இந்த முறை... படிகளின் மகத்துவத்தை அறிந்து, படிகளில் உள்ள தெய்வங்களை மனதில் கொண்டு, படிகளில் உள்ள நவக்கிரகங்களை நெஞ்சில் நிறுத்தி, படியேறுங்கள். பதினெட்டுப் படிகளை வணங்கியபடியே படியேறுங்கள்.

உங்கள் வாழ்க்கை, படிப்படியாய் உயரும். ஐயப்பன் அருளால், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடக்கும்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: சுவாமி சரணம்..! :19 - நீங்கள் ஐயப்பனுக்கு என்ன தரப்போகிறீர்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x