Last Updated : 05 Dec, 2017 09:40 AM

 

Published : 05 Dec 2017 09:40 AM
Last Updated : 05 Dec 2017 09:40 AM

குருவே... யோகி ராமா..! 6: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஆம்புலன்ஸ் ஒன்று பரபரப்புடன் பின்னே வந்தால் என்ன செய்வீர்கள். சைரன் ஒலிக்க, வேகமாக வந்துகொண்டிருந்தால் நாம் என்னவெல்லாம் செய்யமுடியும்?

முதலில் அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழியைத் தரவேண்டும். அந்த வாகனம், தங்குதடையின்றி விருட்டென்று சாலையைக் கடக்க வசதியாக, அப்படியே இடதுபக்கமாக நகர்ந்து அந்த ஆம்புலன்ஸ் முன்னேறுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பிறகு, ரெட்சிக்னலே போட்டிருந்தால் கூட, டிராஃபிக் போலீஸ்காரர், சட்டென்று பச்சைக்கு மாற்றி, தடையின்றி ஆம்புலன்ஸ் செல்ல அடுத்த வழியை உண்டுபண்ணித் தருவார். இன்னும் வாகன நெரிசல் என்றால், சிக்னலையே நிறுத்திவிட்டு, மற்ற வாகனங்களை சைகை மூலமாக நிறுத்திவிட்டு, சற்றே ஒதுக்கிவிட்டு, ஆம்புலன்ஸ் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார்.

அடுத்தகட்டமாக, ஆம்புலன்ஸ் கடக்கும் போது, ‘உயிர் பிழைக்க வேண்டுமே...’ எனும் பிரார்த்தனை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆம்புலன்ஸில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா... தெரியாது. ராமசாமியா குப்புசாமியா... அதுவும் தெரியாது. கமலாவா விமலாவா... தெரியவே தெரியாது.

அவர் என்ன ஜாதி. அது முக்கியமே இல்லை. அவ்வளவு ஏன்... உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த நபர், நல்லவரா கெட்டவரா... அவசியமே இல்லை. பாலினமோ பெயரோ ஜாதி மதமோ, நல்லவர் கெட்டவர் குணாதிசயங்களோ அவசியமே இல்லை. முதலில் அவர் உயிர் பிழைக்க வேண்டும். அதுவே எல்லோர்க்குமான சிந்தனை. பிரார்த்தனை. வேண்டுதல்.

என் அப்பா, அம்மா இருக்கும்போது, யாரேனும் இறந்துவிட்டால், இறந்துவிட்டதாக செய்தி வந்தால், இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தினால், எப்படி இறந்தார் தெரியுமா என்று எவரேனும் விவரித்தால்... சட்டென்று அப்பாவையும் அம்மாவையும் நினைத்துப் பதறிவிடுவேன்.

உடனே, ஊரிலிருக்கும் அம்மாவுக்குப் போன் செய்வேன். சாப்பிட்டியா, என்ன சமைச்சே, வத்தக்குழம்பு பண்ணலியா என்றெல்லாம் பொதுவாய்க் கேட்டுவிட்டு, அப்படியே அப்பாவிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசுவேன். அந்தப் பேச்சு ‘உடம்பைப் பாத்துக்கோ’ என்பதாக இருக்கும்.

பிறகு அன்றாடப் பணிகளில் மூழ்கிவிடுவோம். இங்கே யாரோ ஒருவரின் மரணம் ஏதோவொரு வகையில் லேசாய் உலுக்கிப் போட, உறவுகள் மீதான அன்பும் கரிசனமும் உடனே வந்துவிடுகிறது. மரணம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரும் எனும் நிஜம் தெரிந்திருந்தாலும் அந்த நிஜத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டெல்லாம் வாழத் தயாராக இல்லை நாம். ஏன்... மரணம் எப்போதுமே பயம். மரண பயம்.

இவற்றையும் தாண்டி ராம்சுரத் குன்வர் எனும் சிறுவன்... பனிரெண்டு வயதுச் சிறுவன் யோசித்தான். குருவியை அடிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை. விரட்ட வேண்டும் என்பதற்காகவே செய்த செயல் அது. கையில் உள்ள கயிறால், குருவியை விரட்ட, அந்தக் கயிறு குருவி மீது பட, அதில் சுருண்டு செத்தேபோனது குருவி. துடித்துப் போனான் சிறுவன்.

ஓர் உயிரைக் கொன்றுவிட்டோமே என்று கலங்கினான். துக்கித்துப் போனான். கண்ணீர் விட்டு அழுதான். விளையாட்டு பாதியில் நிற்கிறது. போய் விளையாடலாம். விளையாடினால் இந்தத் துக்கம் காணாது போகலாம். ஆனால் குருவியின் மரணம், அவனை என்னவோ செய்தது. விளையாட்டு மறந்தே போயிற்று.

இரவெல்லாம் குருவியின் ஞாபகம். அது, கண்களை உருட்டி, கழுத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருப்பிக் கடைசியாய் பார்த்த நிமிடங்கள், அடிக்கடி வந்து கொண்டே இருந்தன. தூங்க முடியவில்லை. தூங்கப் பிடிக்கவில்லை. ஏதோவொரு குற்றவுணர்ச்சியால் அல்லாடினான் சிறுவன். புழுங்கி புழுவெனத் தவித்தான்.

இதுதான் மரணமா. மரணத் துயரமா. மரணத்துக்கு முந்தைய வாழ்க்கை நிஜம். இதோ... இந்த மரணமும் உண்மை. மரணத்தை நோக்கித்தான் எல்லார் வாழ்க்கையும் இருக்கிறதா. அதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோமா.

ஒரு குருவியின் மரணத்தை, வெறும் பறவையின் சாவாக நினைக்கமுடியவில்லை அந்தச் சிறுவனால்! பறவையின் உயிரும் மனித உயிரும் வேறுவேறு இல்லை என்பதாக உணர்ந்தான். மனிதர்களில் பேதம் உண்டு. பறவைகளில் வகைகள் இருக்கின்றன. ஆனால் உயிர்களில் எப்படி பேதம் இருக்கமுடியும். உயிரை எப்படி வகைகளாகப் பிரிக்க முடியும்.

வாழ்க்கை போல, மரணம் போல, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கை என்று ஏதும் உண்டா. அப்படியெனில், இந்தப் பறவை என்னாகும்? மனிதர்கள் இறப்புக்குப் பிறகு எங்கே செல்வார்கள்? எங்கேனும் செல்வார்களா. செல்லமுடியுமா. உயிர் என்கிற ஆத்மா பயணிக்கமுடியுமா.

அந்தக் குருவியின் மரணம், 12 வயது ராம்சுரத் குன்வரை பலவாறாக யோசிக்க வைத்தது.

தந்தையாலும் அன்னையாலும் பக்தி போதிக்க வளர்ந்த சிறுவன், அங்கே அடிக்கடி சத்சங்கம் நடத்தி கடவுள் தேடலை விவாதித்துக் கொண்ட சாதுக்களின் பேச்சுகள், இதோ... இந்தக் குருவியின் மரணம்... என சகலமும் சேர்ந்து அந்தச் சிறுவனுக்குள் மிகப்பெரிய கேள்விகளையும் கேள்விகளை அடுத்து வந்த சிந்தனைகளும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

இவற்றில் விடை தெரியாத வினாக்கள் பல இருந்தன. வினாக்களைக் கண்டறிவதற்கும் ஞானம் வேண்டும். விசாலமான அறிவும் புத்தியும் அவசியம்.

ராம்சுரத் குன்வர் எனும் சிறுவன், வினாக்களைக் கண்டறிந்தான். இது... ஞானத்தின் முதல் படி. இனி விடைகளைக் கண்டறிய வேண்டும். விடைகளை எவரேனும் சொன்னால் தேவலை.

அப்படி விடைகளைச் சொல்பவரே குரு. விடைகளைத் தேடுவதற்கு முன்னதாக குருவைத் தேட வேண்டும். விடை சொல்லும் குரு கிடைப்பது என்பது பூர்வ புண்ணியம்; கடவுள் கிருபை.

நமக்கெல்லாம் குருவாக இருக்கும், குருவாக இருந்து வழிகாட்டும், குருவாக இருந்து அருள் வழங்கும் பகவான் யோகி ராம்சுரத்குமார், தன் குரு யார் என்று தேடி, 16வது வயதில் புறப்பட்டார்.

ஒருவகையில்... அந்தக் குருவியும்... குருவாயிற்று பகவானுக்கு!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம் ராம் ஜெய்ராம்

வி.ராம்ஜி, தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x