Last Updated : 04 Dec, 2017 09:12 AM

 

Published : 04 Dec 2017 09:12 AM
Last Updated : 04 Dec 2017 09:12 AM

குருவே.. யோகி ராமா..! 5: - பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

விளையாட்டு வினையாகிவிடும் என்று சொல்லுவார்கள். ‘விளையாட்டாச் செஞ்ச விஷயம் வினையாகிருச்சுப்பா’ என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். அவ்வளவு ஏன்... நாமே கூட அப்படிப் புலம்பியிருப்போம்.

பள்ளி வயதில், மழை வந்துவிட்டாலே, கொண்டாட்டம்தான். இப்போதைய கொண்டாட்டம்... ‘பள்ளிக்கு விடுமுறை’ என்பதாக இருக்கிறது. அப்போதெல்லாம் மழை பெய்தாலும் பள்ளி உண்டு. ஆனால் அது கொண்டாட்டம் அல்ல.

அப்போதெல்லாம் மழை வந்துவிட்டால், தவளை, பொன்வண்டு, தட்டானெல்லாம் வந்துவிடும். இதில் பொன்வண்டு... எல்லோரையும் கவர்ந்த விஷயம். நண்பர்கள் குழுவாகச் சேர்ந்துகொண்டு, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மைதானத்துக்குச் செல்வார்கள்.

அங்கே... பொன்வண்டு பிடிக்கிற வேலையில் இறங்குவார்கள். அப்படிப் பிடிக்கிற பொன்வண்டை, ஒரு தீப்பெட்டிக்குள் வைத்துவிடுவார்கள். அந்தப் பொன்வண்டு, மூச்சு விடுவதற்கு வசதியாக, தீப்பெட்டியில் இரண்டு மூன்று இடங்களில் துளையிட... இப்போது மூச்சு விட்டபடியே தீப்பெட்டிக்குள் இருக்கிற பொன்வண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நகரும்.

பார்ப்பதற்கு தீப்பெட்டி நகர்வதுதான் தெரியும். உள்ளே... பொன்வண்டின் பேரவஸ்தை நம் கண்ணுக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டோம்.

சிறுவர்களிடம் அதிகம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் உயிரினம் ஓணானாகத்தான் இருக்கும். சணல் கயிறை எடுத்துக் கொண்டு, அந்தக் கயிறின் நுனியில், ஓர் வளையம் செய்து கொண்டு, தயாராக இருப்பார்கள் பையன்கள். உட்கார்ந்திருக்கும் ஓணானுக்கு அருகில் சென்று, சத்தமே இல்லாமல் ஆடாமல் அசையாமல் நின்றிருப்பார்கள். மெள்ள... அந்தக் கயிறை ஓணானின் தலைப்பகுதிக்குள் நுழைப்பார்கள். அது சுதாரித்துக் கொண்டு விருட்டென்று ஓடினால்... ‘மகனே உன் சமர்த்து’ கதைதான்! பிறகு வேறொரு ஓணானுக்குக் குறிவைப்பார்கள்.

இந்த முறை ஓணான் மாட்டிக் கொண்டால்... அடுத்த ஒருமணி நேரத்துக்கு அதுதான் எல்லோர்க்குமான பொழுதுபோக்கு. பத்தடி வரை நீளும் கயிறில், ஓணானின் வேகம், அந்தப் பத்தடிக்குள்தான் இருக்கும். ஒருமுனையில் ஓணான் இருக்க... கயிறின் மறுமுனை யாரோ ஒரு பையனின் கையில் இருக்கும்.

இந்தப் பக்கம் ஓடும். அந்தப் பக்கம் ஓடும். ஆனால் அந்த ஓணானால், விட்டுவிடுதலையாக முடியாது. இன்னும் சிலர், மரக்கிளையில் அந்தக் கயிறைக் கட்டிவிட... ஓணான்தான் பாவம்... வௌவால் போல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். கொஞ்சநேரத்தில், போராடிப் பார்த்து, அலுத்துச்சலித்து, அயர்ச்சியாகி, செத்துப்போகிற ஓணான்களுக்கு நல்லடக்கமும் நடைபெறும்.

இன்னொருவரின் வேதனை... எப்போதுமே வேடிக்கைதான் நமக்கு. அடுத்தவரின் துடிதுடிப்பும் பதைபதைப்பும் பார்த்து ரசிக்கிற குரூரம் நிறைய பேரிடம் உண்டு. ‘வலிக்குதா... வலிக்குதா...’ என்று கேட்டுக் கொண்டே, இன்னும் வலியை ஏற்படுத்துவதில் அப்படியொரு ஆனந்தம் சிலருக்கு இருக்கிறது.

அடுத்தவரின் வலியை தன் வலியாக பாவிக்கிறவர்கள், கடவுளுக்கு நெருக்கமாகிறார்கள் என்பதை உணரவே இல்லை இங்கு! இன்னொருவரின் கதறல் பார்த்து, துடித்துப் போகிற மனங்களில்தான் கடவுள் சந்தோஷத்துடன் குடியிருக்கிறான் என்பதையெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வமே இல்லை பலருக்கும்.

பனிரெண்டு வயதில்... ராம்சுரத்குன்வரின் வாழ்வில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

எல்லோரோடும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான் ராம்சுரத் குன்வர். வியர்க்க விறுவிறுக்க, ஓடியாடி விளையாடி, அந்த ஆட்டத்திலும் குதூகலத்திலும் ஒன்றிப் போயிருந்தான். அந்தத் தெருவே, அவர்களின் ஆட்டத்தால் உற்சாகமாகியிருந்தது.

அப்போது, அவனுடைய அம்மா. ‘ராம்சுரத்... கிணத்துல தண்ணீ இறைச்சிட்டு வாடா கண்ணு’ என்று ஒரு வாளியைக் கொடுத்தாள். அவன் வாளியை சந்தோஷமாக வாங்கிக் கொண்டான்.

‘போம்மா... விளையாடிக்கிட்டிருக்கேன்ல...’ என்றெல்லாம் தட்டுகிற வழக்கம் அவனிடத்தில் எப்போதும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், வீட்டு வேலைகள் செய்வதில் அலாதிப் பிரியம் கொண்டிருந்தான் ராம்சுரத் குன்வர்.

அதிலும் அம்மா ஏதேனும் வேலை சொன்னால், தட்டவே மாட்டான்.

இப்போது நம்மைக் கெஞ்சவிடாமல், நம்மைக் கலங்கடிக்காமல், நமக்கு அருள்கிறார் அல்லவா பகவான் யோகி ராம்சுரத்குமார். அதேபோல், சிறுவயதிலும் அம்மாவையோ வேறு யாரையுமோ கூட, கெஞ்சவிடும் குணம் இருந்ததே இல்லை.

விளையாட்டில் இருந்து சற்றே விலகிவந்தான் சிறுவன் ராம்சுரத் குன்வர். ‘இதோ வந்துடுறேண்டா’ என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, வாளியுடன் கிணற்றடிக்குச் சென்றான்.

கங்கை பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருந்தாலும் அங்கே நிறைய வீடுகளில் கிணறு உண்டு. கங்கை பக்கத்திலேயே இருந்ததால், கிணறு வெட்டினால், சில அடிதூரத்திலேயே தண்ணீர் கிடைத்துவிடும். வருடம் 365 நாட்களும், தன் கழுத்துக் கொள்ளாத அளவுக்கு கிணறு, நீரை வைத்துக் கொண்டிருக்கும்.

எனவே, 12 வயதுச் சிறுவனுக்கு கிணற்றில் நீர் இறைப்பது கஷ்டமானதொரு காரியமில்லை. அப்படிக் கஷ்டமாக, உடல் வலு சேர்த்து, கிணற்றில் நீர் இறைப்பதாக இருந்தால், அவனுடைய அம்மாவும் இந்த வேலையை ஏவியிருக்கமாட்டாள்.

வாளியுடன் கிணற்றடிக்கு வந்தான். வாளியை வைத்துவிட்டு, கிணற்றில் நீர் இறைப்பதற்கு வசதியாக கயிறும் கயிற்றுடன் இணைக்கப்பட்டிருந்த வாளியையும் எடுத்தான். கயிறு அவன் கையில் இருந்தது. கயிறுடன் இருந்த வாளியைக் கிணற்றுக்குள் இறக்கினான்.

அப்போது கிணற்று மேடையில் குருவிகள் சில உட்கார்ந்து கொண்டிருந்தன. அந்தக் குருவிகளைப் பார்த்தான் ராம்சுரத் குன்வர். ‘எல்லாம் போங்க... போங்க...’ என்பதாக விரட்டினான். அவை நகரவில்லை. ‘ச்ச்சூ... ச்சூ...’ என கை உயர்த்தி விரட்டினான். அப்போதும் அவை நகரவே இல்லை.

‘போங்கன்னு சொல்றேன்ல...’ என்று தன் கையில் இருந்த கயிற்றால், குருவியை லேசாக அடித்தான். அப்படி அடித்தபோது மற்ற குருவிகளெல்லாம் ஓடிவிட்டன. அடி வாங்கிய அந்தக் குருவி மட்டும் அப்படியே சுருண்டுவிட்டது. அசைவே இல்லை.

பதறிப் போனான் சிறுவன். ‘என்னாச்சு...’ என்று குருவியை உற்று உற்றுப் பார்த்தான். கண்களில் அசைவே இல்லை. உடலில் அசைவே இல்லை. றெக்கைகள் அசையாமல் இருந்தன.

அந்தக் குருவி செத்துப் போயிருந்தது. அங்கே... பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகான் ஜனித்ததற்கான ஆரம்பம் அது!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெய குரு ராயா.

- ராம் ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x