Published : 30 Nov 2017 11:13 AM
Last Updated : 30 Nov 2017 11:13 AM

மலையாள தேசத்தில் சண்முகர்

பி

ரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாததால் படைக்கும் கடவுள் பிரம்மனையே சிறையில் அடைத்தான் முருகப் பெருமான். பின்னர் அந்தக் குற்றவுணர்ச்சி தாளாமல் பாம்பாக அலைந்து பின்னர் தாயின் அருளால் மீண்டும் கடவுளான தலமாக கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆதி நாகசுப்ரமணியா கோயில் கருதப்படுகிறது.

சிறிய ஊர் என்றாலும் கேரள மண்ணுக்கேயுரிய இயற்கை எழிலுடன் காணப்படும் இந்த ஆலயத்தின் முதன்மை நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் கிழக்குத் திசை நோக்கி சந்நிதி அமைந்துள்ளது. ஆயிரம் தலையும் இரண்டாயிரம் நாக்குகளும் கொண்ட ஆதிசேஷன், இங்கு ஐந்து தலை நாகமாகக் காட்சியளிக்கிறார். சண்முகக் கடவுள் அழகாக சிறிய உருவில் காட்சியளிப்பது அற்புதமான காட்சி.

கேரளக் கோயில்கள் பலவற்றில் மூலஸ்தானத்தில் இன்னும் மின் விளக்குகள் அமைக்கப்படாத நிலையில் குத்துவிளக்குகளின் ஒளியில் சந்நிதி மிளிர்கிறது. பொன்மயமாக ஜொலிக்கும் கமுகுப் பூக்களால் அழகாக அலங்கரித்திருக்கிறார்கள். நெய் தீபத்தின் பின்னணியில் பிரகாசிக்கிறான் கார்த்திகை செல்வன். தினந்தோறும் காலையில் நடைபெறும் பூஜையின்போது குமரனுக்கு குளிரக் குளிர நடக்கும் பால் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சி.

இரண்டு விநாயகர்கள்

மேற்குப் பிரகார பின்புறச் சுவரில் இரண்டு விநாயகர்கள் காட்சியளிக்கிறார்கள். மஹாவிஷ்ணு மற்றும் சாஸ்தாவுக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரசுராமர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயிலின் உள்ளே அழகான குளமும் உள்ளது. இதையொட்டி நான்கு புறமும் சுவர் எழுப்பி பெரிய வாசலுடன் அமைக்கப்பட்ட மண்டபத்தின் உள்ளே ஒரு பெரிய புற்று காணப்படுகிறது. இதையடுத்து பிரம்மாண்ட அரச மரத்தின் கீழே பெரிய நாகர் சிலையும் அருகே சிறிது சிறிதாக இருபது நாகங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள புற்றுக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

அதிகாலை ஐந்து மணியிலிருந்து பதினோரு மணிவரையிலும் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டரை மணிவரையிலும் நடை திறந்திருக்கும். தமிழகத்தில் கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படுவதுபோல் கார்த்திகை மாதத்தில் வரும் குமார சஷ்டி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்தான் பார்வதி தேவி விரதமிருந்து முருகனை மீண்டும் மகனாகக் கண்ட நாள். இது மட்டுமின்றி தைப் பூசம், பார்வதி தேவியிடம் ஞானப் பால் அருந்திய விழாவும் விசேஷமான நாட்கள்.

நாக தோஷம் உள்ளவர்கள் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் தோஷம் விலகி நன்மை பெறுவார்கள் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் ஏராளம். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று விரதம் மேற்கொண்டு பால் அபிஷேகம் செய்துவந்தால் பலன் கிடைப்பதாக நம்புகிறார்கள். இந்த ஆண்டு குமார சஷ்டி நவம்பர் 24-ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

எங்கு உள்ளது?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நெம்மேரா. இங்கிருந்து ஒரு கி.மீ. பயணம் செய்தால் கண்ணிமங்கலம் கோயிலை அடையலாம்.பொள்ளாச்சி வழியாகத் திருச்சூர் சென்றாலும் நெம்மேராவை அடையலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x