Published : 23 Nov 2017 11:05 AM
Last Updated : 23 Nov 2017 11:05 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 09: அறத்தின் வாசனை உலவும் பொன்னுலகம்

ர் தாமஸ் மோர் என்னும் ஆங்கிலேய மனிதநலக் கருத்தாளர், 1516-ம் ஆண்டு ‘உடோப்பியா’ (Utopia) என்று ஒரு நூலை எழுதினார். உடோப்பியா என்றால் ‘இல்லாத இடம்’ என்று பொருள். அதாவது, உண்மையில் இல்லாத, கற்பனையால் உருவாக்கப்பட்ட ஓர் இடம். தன்னுடைய கற்பனையில் தான் உருவாக்கிய தீவுக்கு ‘உடோப்பியா’ என்று பெயர் வைத்தார் தாமஸ் மோர். அந்தக் கற்பனைத் தீவில் ஒரு கற்பனைச் சமூகம் இருப்பதாகவும் அந்தக் கற்பனைச் சமூகம் அரசால், அறத்தால், சட்டத்தால், சமயத்தால், பொருளியல் நிலைகளால் ஏற்ற-இறக்கமில்லாத நிறைவாழ்வு வாழ்வதாகவும் அவர் அந்த நூலில் கற்பித்தார். அப்போதைய ஐரோப்பியச் சமூகத்தின் அரசியல்-பொருளியல் நிலைகளை, உடோப்பியா தீவில் வாழும் கற்பனைச் சமூகத்தின் (கற்பனையான) அரசியல்-பொருளியல் நிலைகளுடன் ஒப்பிட்டு, உடோப்பியச் சமூகம் எவ்வளவு உயர்ந்த, சமவாழ்வு வாழ்கிற சமூகமாக இருக்கிறது என்று அந்த நூலில் பேசினார். சமவாழ்வு வாழ்கிற அந்தக் கற்பனையான உடோப்பியச் சமூகம்போல ஐரோப்பியச் சமூகம் நிலைமாற்றம் பெற வேண்டும் என்பது அவருடைய கருத்து.

இப்படியான கற்பனைச் சமூகங்களைப் பலரும் எண்ணிப் பார்த்திருக்கிறார்கள். கிரேக்க மெய்யறிவாளரான பிளேட்டோ ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பொதுவுடைமைச் சமூகத்தைத் தன்னுடைய கற்பனையில் உருவாக்கிப் பார்த்திருக்கிறார். காரல் மார்க்சோ ஏற்றத்தாழ்வுகளே இல்லாத, அரசு என்கிற அதிகார மையம்கூட இல்லாத ஒரு பொதுவுடைமைச் சமூகத்தைத் தர்க்கபூர்வமாகக் கருதிப் பார்த்திருக்கிறார்.

நம்முடைய நாட்டிலும் இத்தகைய

கற்பனைச் சமூகங்களைச் சிந்தித்தவர்கள் உண்டு. கம்பனுக்கு மிஞ்சிய கற்பனை உண்டா?

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

(பாலகாண்டம், நாட்டுப்படலம், 53)

கோசல நாட்டில் கொடை கொடுப்பவர்களே இல்லை; ஏனென்றால் கொடு என்று கைநீட்டிக் கேட்கிறவர்களே அங்கே இல்லை. வறுமை இருந்தால்தானே வள்ளல் தன்மை இருக்கும்? கோசல நாட்டில் உடல் வலிமையை முறுக்கிக் காட்டுகிறவர்களே இல்லை; ஏனென்றால் சண்டைக்கு வருகிறவர்களே அங்கே இல்லை. போட்டிக்காரன் இருந்தால்தானே போர் இருக்கும்? கோசல நாட்டில் உண்மையே இல்லை; ஏனென்றால் பொய் பேசுகிறவர்களே அங்கே இல்லை. பொய் என்று ஒன்றைக் குறிக்க முடிந்தால்தானே உண்மை என்று ஒன்றைக் குறிக்க முடியும்? கோசல நாட்டில் அறியாமை என்ற ஒன்றே இல்லை; ஏனென்றால் எல்லோரும் கற்றும் கேட்டும் பகுத்தும் அறிய வேண்டியவற்றைத் தெளிவாக அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அறியாமை என்று ஒன்றைச் சுட்டிக்காட்ட முடிந்தால்தானே அதற்கு எதிராக அறிவு என்று ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியும்?

உண்மை நிலை என்ன?

இப்படி ஒரு கனவுச் சமூகம் நமக்கு நனவிலும் வாய்க்கும் என்றால் அதைவிடப் பேறு வேறு ஏது? ஆனால், வாய்க்காது. உண்மை நிலை கம்பன் கற்பித்ததற்கு நேர்மாறு. நாம் காண்கிற சமூகத்தில், கேட்கிறவர்கள் இருக்கிற அளவுக்குக் கொடுக்கிறவர்கள் இல்லை; சண்டைக்காரர்கள் இருக்கிற அளவுக்குச் சமாதானக்காரர்கள் இல்லை; பொய்யை ஓரங்கட்டுகிற அளவுக்கு உண்மை ஊக்கம் பெறவில்லை; கற்றதையும் கேட்டதையும் பகுத்தாராய்ந்து, தான் பெற்ற அறிவைத் தன் சமூகத்துக்கும் வழங்கி, அறிவுப் பந்தம் கொளுத்தி, அறியாமை இருள் விரட்டுகிற அறிவாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

இந்த உண்மை நிலையை உணர்ந்திருக்கிறார் திருமூலர். அவர் மெய்யுணர்வாளர்; சமய நெறியாளர். யார் யாரையும்விடச் சமய நெறியாளர்களே சமூகத்தின் நடப்பு நிலவரங்களை நன்றாக அறிவார்கள். ஏனென்றால், கீழ்மையில் அகப்பட்டுக்கொண்டவர்களைக் கடவுள் என்னும் கயிற்றால் கட்டி இழுத்து மேன்மைக்குக் கொண்டு வந்துவிடுகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் அவர்கள்.

கற்பனைச் சமூகம் கவைக்கு உதவாது என்பதால், இல்லாத சமூகத்துக்குச் செல்லாத கொள்கைகளைப் புனைந்துரைக்காமல், இருக்கிற சமூகத்துக்கு இயலக்கூடிய கொள்கைகளைப் பரிந்துரைக்கிறார் திருமூலர். அவற்றில் ஒன்று அறம் செய்தல்.

இல்லாதவர்களையும் இருக்கிறவர்களையும் சமப்படுத்துவதைப் பற்றியெல்லாம் திருமூலர் சிந்திக்கவில்லை. இருக்கிறவர் எல்லாவற்றையும் தனக்கே தனக்கென்று பொத்திவைத்துக்கொள்ளாமல் இல்லாதவர்க்கும் கொடுத்தல் என்பதையே சிந்திக்கிறார்.

ஆர்க்கும் இடுமின்;

அவர்இவர் என்னன்மின்;

பார்த்து இருந்து உண்மின்;

பழம்பொருள் போற்றன்மின்;

வேட்கை உடையீர்,

விரைந்து ஒல்லை உண்ணன்மின்;

காக்கை கரைந்து உண்ணும்

காலம் அறிமினரே

(திருமந்திரம். 250)

‘இவருக்கு இடு, அவருக்கு இடாதே,’ ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்றெல்லாம் பழைய மரபுகள் பலவாறு சொல்லும்; அவற்றையெல்லாம் போற்ற வேண்டாம். பசி என்று ஒருவர் வந்துவிட்டால் அவர் யாராக இருந்தாலும் உணவிடுங்கள்; அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டாம்.

காகத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்

கணக்குப் பார்ப்பதும் பாத்திரம் பார்ப்பதும் காசு பணம் கொடுக்கும் காரியத்துக்குத்தான். உணவிடும் காரியத்துக்கு அன்று. உண்ணும் நேரம் வந்துவிட்டது, பசிக்கிறது என்று சமைத்ததையெல்லாம் உண்டு தீர்த்துவிடாமல் உணவு தேடி ஆள் வருகிறதா என்று பார்த்திருந்து உண்ணுங்கள். தான் மட்டும் தனித்து உண்ணாமல் தன் கூட்டத்தையும் அழைக்கிறதே காக்கை, அதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து

(குறள் 221)

இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை. மற்ற கொடையெல்லாம் பதிலுக்கு ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொடுப்பதே ஆகும் என்கிறது குறள். குறளின் தடம் பிடித்து நடக்கிறார் திருமூலர்.

அற்று நின்றார் உண்ணும்

ஊணே அறன் என்னும்

கற்றன போதம் கமழ்பவர் மானிடர்

உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்

பற்றுவந்து உண்ணும் பயன் அறியாரே

(திருமந்திரம். 253)

பசி போக்கிக்கொள்ளும் வழியற்று நின்றார்க்கு உணவு ஊட்டுவதே அறம் என்று கற்றிருக்கிறோம். கற்ற அறிவைச் செயலுக்கும் கொண்டு வருபவரே மனிதர். கண்டு தெளிக.

பசித்திருப்பவர்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே என்று திருவள்ளுவர்க்கு ஓர் இடத்தில் கடுங்கோபம் வருகிறது.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான்

(குறள் 1062)

பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தைப் படைத்தவன் நாசமாகப் போகட்டும் என்று கடவுளையே கண்டனம் செய்துவிடுகிறார். ஆனால், திருமூலர் அப்படியெல்லாம் கோபம் கொள்வதில்லை. கடவுளை மறுத்தல், கடவுளைக் கண்டனம் செய்தல் இவையெல்லாம் திருமூலரிடத்தில் கிடையாது. மாறாக, கடவுளை அடையும் பெரும் பாதையாக அறத்தை வைக்கிறார் திருமூலர்.

...மறந்தான் வழிமுதல்

வந்திலன் ஈசன்;

அறந்தான் அறியும் அளவு

அறியாரே(திருமந்திரம்.256)

ஈசனைத் தேடி அங்குமிங்குமாக அலைகிறவர்களே! மறத்தை, வலிமையை வழியாகக் கொண்டவர்கள் எங்கு தேடினாலும் ஈசன் சிக்குவதில்லை. ஆனால், அறத்தை வழியாகக் கொண்டவர்களோ அவனைத் தேட வேண்டியதே இல்லை; அறத்தின் வாசனை பிடித்துக்கொண்டு அவனே உங்களிடம் வந்துவிடுவான். உங்களைத் தனது பொன்னுலகத்துக்கும் கொண்டுபோவான். இதை அறிய மாட்டாமல் அலைகிறீர்களே என்று வருந்துகிறார்.

இறைவனின் பொன்னுலகம் ஏற்ற இறக்கமில்லாத இடம். அதை அடைய வேண்டுகிறவர்கள் அறம் செய்க என்பது திருமூலர் கூற்று. இறைவனின் பொன்னுலகம் ‘உடோப்பியா’ இல்லையா என்றால், நல்லது, அதற்கு விடை இல்லை. கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக.

(அறம் செய்க) கட்டுரையாளர்

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x