Last Updated : 09 Nov, 2017 10:14 AM

 

Published : 09 Nov 2017 10:14 AM
Last Updated : 09 Nov 2017 10:14 AM

ஆலயம் அறிவோம்: பெண்களின் சபரிமலை - சக்குளத்துக்காவு

 

ந்த உலகத்தில் உள்ள எல்லாத் துன்பங்களுக்கும் கவலைகளுக்கும் நோய்களுக்கும் பரிகாரமளிக்கும் கோயில் சக்குளத்துக்காவு பகவதி கோயில் என்று நம்பப்படுகிறது. கேரளாவில் ஆலப்புழா திருவல்லா பாதையில் உள்ளது நீரேற்றுப்புறம் சக்குளத்துக்காவு கோயில்.

பொங்கல் பெருமை

கேரளாவில் தனிச் சிறப்பு வாய்ந்தது சக்குளத்துக்காவு பொங்கல். சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் சக்குளத்துக்காவு பகவதியிடம் தங்களது பிரச்சினைகளைக் கூறி வேண்டி பரிகாரம் காண்கிறார்கள். கணபதி, சிவன், சுப்ரமணியன், விஷ்ணு, சாஸ்தா, நவக்கிரகம், யக்ஷி அம்மா போன்ற கடவுளர்களும் இங்கு உள்ளனர். விருச்சிக (கார்த்திகை) மாதத்தில் பொங்கலிட்டுத் தேவியின் மனதைக் குளிர்விக்கிறார்கள் பக்தர்கள். திருக்கார்த்திகை நாளில் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை ஸ்தம்பம், லட்ச தீபம், நாரிபூஜை ஆகியவை மிகவும் பிரசித்தமானவை. ஒவ்வோர் ஆண்டும் தேவிக்குக் கோலம் போட்டு, பாட்டுப் பாடி, அர்ச்சனை நடைபெறுகிறது.

புற்றுக்குள் உறையும் தேவி

ஒரு வேட்டைக்காரன் காட்டினுள் விறகுவெட்டப் போனான். அவனைக் கொத்துவதற்காக வந்த பாம்பை வெட்டினான். ஆனால், அந்தப் பாம்பு சாகவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அது ஒரு புற்றின் முகட்டில் இருப்பதைப் பார்த்த வேடன் மறுபடியும் பாம்பை அடிக்கச் சென்றான். அப்பொழுது அந்தப் புற்று இரண்டாகப் பிளந்து தண்ணீர் திரண்டோடியது. திகைத்து நின்ற வேடனின் முன் முனிவர் ஒருவர் தோன்றினார். அவர் வேட்டைக்காரனிடம் ‘பயப்பட வேண்டாம்’ என்றார். அப்பொழுது வேடனின் குடும்பமும் அங்கு வந்தடைந்தது. “அலையடித்து ஓடும் இந்தத் தண்ணீர், தேனும் பாலும் சேர்ந்த நிறமாகும்பொழுது நின்றுவிடும்” என முனிவர் கூறினார்.

அத்துடன், அப்படிப் பிரவகித்து ஓடுகிற நீர் புற்றுக்குள் பராசக்தி ஜலசயனம் நடத்துகிறார் என்றும் புற்றை உடைத்துப் பார்த்தால் அதற்குள் ஒரு கடவுள் சிலை இருக்குமென்றும் முனிவர் கூறினார். அந்தச் சிலையை வனதுர்க்கையாக ஆராதிக்க வேண்டுமென்றும் அப்படிச் செய்தால் புண்ணியம் கிடைக்குமென்றும் கூறினார். பிறகு அவரே புற்றை உடைத்துச் சிலையை வெளியே எடுத்தார். திடீரென முனிவர் மாயமாக மறைந்துபோனார்.

அன்று இரவு வேட்டைக்காரனின் கனவில் முனிவராக வந்தவர் நாரத முனிவர் என்று ஒரு அசரீரி கேட்டது. புற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் தெய்வச் சிலைதான் சக்குளத்துக்காவில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பிக்கை.

சிலை கண்டெடுக்கப்பட்ட பிறகு வேட்டைக்காரனும் அவனுடைய குடும்பத்தினரும் அந்தக் காட்டில் வசித்துவந்தனர். தினமும் காட்டுக்குப் போய் காய் கனிகளும் விறகும் எடுத்துவந்து சமைத்து, தேவிக்கும் படைத்துவந்தனர். ஒருநாள் வேடனும் அவனுடைய குடும்பத்தினரும் சமையலுக்காகக் காய்கறிகள் பறிக்கச் சென்று திரும்பிவரக் காலதாமதமானது. சரியான நேரத்துக்குள் தேவிக்குச் சாப்பாடு படைக்க முடியவில்லையே என வருத்தப்பட்டு சீக்கிரமாக அடுப்பினருகே சென்றபொழுது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கே விதவிதமாக உணவு வகைகள் இலைகளில் பரிமாறப்பட்டிருந்ததைப் பார்த்து அவர்கள் தேவியின் அருளைப் புரிந்துகொண்டனர். பக்திப் பரவசத்துடன் மந்திரங்களைப் பாடினர். அதே நேரத்தில், “குழந்தைகளே நீங்கள் வயிறு நிறைய இந்த உணவைச் சாப்பிட்டுக் களைப்பாறுங்கள். எந்தத் துன்பத்திலும் எனக்கு உணவு படைத்த உங்கள் நல்ல மனதைப் பாராட்டுகிறேன். என் மனம் நிறைந்தது. உங்களது துன்ப நேரங்களில்கூட என்னைக் கைவிடாமல் பார்த்துக்கொண்டீர்கள். இன்று முதல் நான் உங்களது தாதியும் தோழியுமாவேன். பக்தி நிறைத்த மனதுடன் யார் எங்கே நின்று அழைத்தாலும் நான் அருள்புரிவேன்” என்று அசரீரி கேட்டது.

இந்த நினைவாகத்தான் சக்குளத்துக்காவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து தேவியும் பொங்கலிடுவதாக நம்பப்படுகிறது.

மதுவை மறக்க

மது அருந்துவதைத் தவிர்க்க முடியாமல் தவிப்பவர்களுக்கு சக்குளத்துக்காவு கோயில் சரணாலயமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் இவர்களுக்காகச் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த நாளில் சத்யப்ரித பூஜை நடத்தப்படுகிறது. நாட்டில் சாந்தியும் சமாதானமும் உண்டாவதற்காகப் பன்னிரண்டு நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் தனுர் மாதம் ஒன்றாம் நாள் தொடங்கி பன்னிரண்டாம் நாளன்று முடிகிறது.

chakkulathammaகார்த்திகை ஸ்தம்பம்

தீங்குகளும் அதர்மமும் நிறைந்ததாக நம்பப்படுகிறது கார்த்திகை ஸ்தம்பம். இதைத் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்குவதன் மூலம் தீயனவற்றை அக்னி விழுங்கி நன்மை நிறைவதாக நம்பப்படுகிறது. விருச்சிக மாசத்தில் திருக்கார்த்திகை நாட்களில் இந்தச் சடங்கு நடக்கிறது.

மிகவும் உயரமுள்ள ஒரு தூணில் வாழைப்பட்டை, பழைய ஓலைகள், பட்டாசு, தேவியின் பழைய வஸ்திரங்கள் இவற்றைச் சேர்த்துக்கட்டி அதன் மீது அந்த ஊரிலுள்ள எல்லா பாவங்களும் தீங்குகளும் ஆவாஹிக்கப(வரவழைக்க)ப்படுகின்றன. கோயிலில் தீபமேற்றி, வழிபடுவதற்கு முன் இந்தச் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. அதோடு சேர்ந்து அந்த ஊரிலுள்ள எல்லா பாவங்களும் எரிந்து சாம்பலாவதாக நம்பப்படுகிறது.

நாரி பூஜை

சக்குளத்துக்காவில் குறிப்பிடத்தக்கக்கது நாரி பூஜை (பெண்களை பூஜை செய்வது). இந்த நாரி பூஜை மிகவும் அபூர்வமானது. பூஜை நாளில் இந்தியாவில் உள்ள பிரபலமான பெண்களை விருந்தினராக அழைத்து பூஜை செய்கிறார்கள். அலங்கரித்த இடத்தில் அமரவைத்து மிகவும் பக்தியுடன் பூஜை செய்யப்படுகிறது. பெண்களை மரியாதை செய்யுமிடத்தில் தேவதைகள் ஆனந்தமடைகிறார்கள் என்றும் நம்பிக்கை. பெண்களைச் சக்தியும் நன்மையையும் நிறைந்தவர்களாக நினைக்க வேண்டுமென்று இந்தப் பூஜை நினைவுபடுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x