Published : 14 Sep 2017 10:55 AM
Last Updated : 14 Sep 2017 10:55 AM

வளம் தரும் புஷ்கரம்

யூரநாதரும் பரிமள ரங்கநாதரும் அருளாட்சி செய்யும் புண்ணிய பூமியான மயிலாடுதுறையில் காவிரியும் பொங்கிப் பாய்ந்து வளம் பல அருளுகிறாள். கங்கையில் ஆயிரம் ஆண்டுகள் தினம் தினம் நீராடினால் என்னென்ன புண்ணியம் கிடைக்குமோ அத்தனையும், ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நீராடினால் கிடைத்துவிடும் என்பது தெய்வ வாக்கு.

14chsrs_lead22 கன்ம மகரிஷி தியானம் right

ஜென்ம ஜென்ம புண்ணியம் செய்தவர்களுக்கே காவிரியைக் காணும் பாக்கியம் கிட்டும் என்கிறது காவிரி மகாத்மியம். காண்பதற்கே அவ்வளவு புண்ணியம் வேண்டும் என்றால் நீராட எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நதிகளில் உயர்ந்த காவிரியில் புஷ்கர காலத்தில் நீராடி பாவங்கள் அனைத்தையும் தொலைக்கலாம். இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரம். இதை ஆதி புஷ்கரம் என்று மகான்கள் சொல்வார்கள்.

ஒருமுறை கன்வ மகரிஷி என்ற முனிவரை மூன்று நங்கையர்கள் வாடிய முகத்தோடு வந்து பார்த்தார்கள். கண்மூடி இருந்த முனிவரும் மெல்ல கண் திறந்து பார்த்து, ஞானக்கண்ணால் அவர்களைப் புரிந்துகொண்டாலும் யார் நீங்கள்? ஏன் இப்படிக் கறுத்து வாடிப் போயிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அப்போது தாளாத வருத்தத்தோடு ‘‘நான் கங்கை. இவர்கள் யமுனையும் சரஸ்வதியும்’’ என்று அறிமுகப்படுத்திவிட்டு இந்த மனிதர்கள் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் கழுவிக் கொள்வதனால் நாங்கள் இப்படிக் கருமை நிறம் கொண்டுவிட்டோம்.

இந்த நிலையை மாற்ற வழி கூறுங்கள் என்று வணங்கிக் கேட்டுக்கொள்ள, கண்களை மெல்ல மீண்டும் மூடிக்கொண்டார் கன்வ மகரிஷி. ஆழ்ந்து சிறிது தவம் செய்துவிட்டு பின் மீண்டும் கண் விழித்த மகரிஷி, நீங்கள் மூவரும் தென் பாரத தேசம் சென்று அங்கே உள்ள புண்ணிய தலமாம் மாயூரம் நகரில் உள்ள துலாக்கட்டத்தில் காவிரி நதியில் துலா மாதத்தில் நீராடி பாவங்களை தொலைத்து மாயூரநாதரையும், பரிமள ரங்கநாதரையும் தரிசனம் செய்து புதிய பொலிவோடு வாருங்கள் எனக் கூற அவர்களும் அவ்வாறே செய்து திரும்பியதாக புராணம் கூறுகிறது.

புஷ்கர ஒப்பந்தம்

நவக்கிரக நாயகர்களில் ஒருவரான குரு பகவான் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்து குரு பகவானைத் தன்முன் வரவழைத்துவிடுகிறார். “உன் தவத்தின் நோக்கமென்ன? எதற்காகக் கடும் தவம்?” எனப் பிரம்மன் கேட்கிறார். “உங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்குத் தாருங்கள்” என்கிறார் குரு பகவான். பிரம்மனும் மகிழ்ந்து, “அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்” என்கிறார்.

14chsrs_lead33 கன்ம மகரிஷியின் வழிகாட்டுதலில் தென்பாரதம் வந்து காவிரி நதியில் நீராடல்

அதைக் கேட்ட புஷ்கரம் (பிரம்மன் கையிலுள்ள கமண்டல நீர்) “என்னை உங்களிடமிருந்து பிரித்துவிட வேண்டாம்” எனக் கெஞ்சியதாம். தர்மசங்கடத்துக்குள் மாட்டிக்கொண்ட பிரம்மா, குரு பகவானுக்கும் புஷ்கரத்தும் இடையில் ஓர் ஒப்பந்தம் போட்டு சமாதானம் செய்தார். இருவரும் ஒப்புக்கொண்டு புன்னகைத்தார்கள்.

அந்த ஒப்பந்தம் இதுதான். அதாவது குரு பகவான் சஞ்சரிக்கும் 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்குரிய புனித நதிகளில் புஷ்கரம் வாசம் செய்து மக்களுக்கு அருளும். மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - சிந்து, மகரம் - துங்கபத்திரா, கும்பம் - பிரம்மபுத்ரா, மீனம் – பரணீதா. எந்தெந்த ராசிகளில் குரு பகவான் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி அருள் வழங்கப்படுகிறது.

மேற்படி நாட்களில் அந்தந்த நதிகளில் மக்கள் நீராடித் துன்பங்கள், பாவங்கள் அகன்று அளவிலா வளமையும் செழிப்பும் மகிழ்வும் பெற்று வாழ்வார்கள். இதுவே புஷ்கரத்தின் சிறப்பு.

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி 1-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை நாட்டின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து நீராடி புனிதமடைவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.

இந்த மகா காவிரி புஷ்கரத்தில் நீராடி அனைவரும் பெரும் பேறு பெறவேண்டும் என்பதில் காஞ்சிகாமகோடி பீடத்தின்ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் மிகப்பெரிய முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

இந்த மகா காவிரி புஷ்கரம் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை சிறப்புமிக்க புஷ்கர நீராடலின் பலனை அனைவரும் பெற வேண்டுமென்பது அவர்களது பெருவிருப்பம்.

இந்த மகா புஷ்கரத்தின் மகிமையை மனமார அறிந்து, மகிழ்வுடன் நீராடி, ஆண்டவன் அருளும் காவிரித்தாயின் பொங்கும் அன்பும் ஆசியும் அனைவரும் பெறுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x