Last Updated : 24 Aug, 2017 12:45 PM

 

Published : 24 Aug 2017 12:45 PM
Last Updated : 24 Aug 2017 12:45 PM

இறைமை இயற்கை 13: எங்கே வாழ்கிறான் இறைவன்?

றைவனைப் பார்த்தே தீர வேண்டுமென்று அடம்பிடித்த இளைஞன் ஒருவனைத் துறவி ஒருவர் ஓர் அடர்ந்த காட்டுக்குள் அனுப்பிவைத்தார். அவர் சொன்ன பாதையில் சென்ற இளைஞன், அடுத்த நாள் காலையில் மற்றொரு பாதையின் வழியே வெளியே வந்தான். அவனிடம் துறவி, “காட்டில் இறைவனைக் கண்டாயா?” என்றார். மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அவன், அவர்மீது கோபப் பார்வை வீசியபடியே, “இல்லை” என்றான். “அப்படியானால், காட்டுக்குள் என்ன நடந்தது என்று சொல்” என்றார்.

இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். “காட்டுக்குள் நுழைந்து கொஞ்ச தூரம் சென்றதுமே பெரிய பெரிய மாமரங்கள் வரவேற்றன. அவற்றில் நறுமணம் கமழும் மாங்கனிகள் காய்த்துக் குலுங்கின. அடுத்ததாகப் பலா மரங்கள் மிகுந்த பகுதி. அங்கே குரங்குகள் உடைத்துப் போட்ட பலாப் பழங்கள் சிதறிக் கிடந்து வாசத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன. அடுத்ததாக வாழை மரக் காட்டில் பழுத்த வாழைத் தார்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. எனக்கு பசி அதிகரிக்கத் தொடங்கியது. நாவில் எச்சில் ஊறத் தொடங்கியது. முடிந்தவரையில் அவற்றைப் பறித்துச் சாப்பிட்டேன்.

பிறகு கொஞ்ச தூரம் நடந்தேன். அங்கே ஒரு புலி என்னைத் துரத்த ஆரம்பித்துவிட்டது. அதனிடமிருந்து தப்பி ஓடும்போது எதிரே ஒரு வேடன் வந்தான். அவன் அம்பைப் பயன்படுத்தாமல், கவன் கல்லைக்கொண்டு தாக்கி அந்தப் புலியை விரட்டிவிட்டான்.

புலியிடமிருந்து தப்பித்தாலும் சோர்வு என்னைச் சூழ்ந்துகொண்டது. பொழுது போய் இருட்டிவிட்டதால், பாதை வேறு சரியாகத் தெரியவில்லை. இறைவனைப் பார்த்தே ஆக வேண்டுமென்ற முனைப்பில் இருந்த நான், எப்படியாவது இந்தக் காட்டைவிட்டு வெளியேறினால் போதும் என நினைக்க ஆரம்பித்து, கண்ணுக்குத் தெரிந்த பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது ஒரு சிறிய காட்டுக் கோயில் தெரிந்தது. அதன் வாயிலில் யாரோ தலைவாழை இலை விரித்து உணவு படைத்திருந்தார்கள். அதைச் சாப்பிட்டுவிட்டு, சோர்வு மிகுதியால், அந்தக் கோயிலிலேயே படுத்து உறங்கிவிட்டேன். காலையில் எழுந்து வெளியே வந்தேன்” என்று சொல்லி முடித்தான் அந்த இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த துறவி, “உன்னைப் போல யாரும் இறைவனை இத்தனை முறை கண்டிருக்க முடியாது” என்று சொன்னார். இளைஞனுக்கு வியப்பு. அவர் தொடர்ந்தார். “ஈசனின் ஐந்து தொழில்கள் – படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை. நீ காட்டுக்குள் சென்றபோது உனக்காக அவன் முக்கனிகளைப் படைத்திருந்தான்; அவற்றை உண்பதற்காக உன் வயிற்றில் பசியையும் படைத்தான். அது படைத்தல் தொழில்.

இந்தக் காட்டில் என்னைத் தவிர வேறு மனிதர் இல்லை. புலி உன்னைத் துரத்தியபோது எதிர்ப்பட்ட வேடன், ஈசனே. அது காத்தல் தொழில். உனக்குச் சோர்வு மேலிட்டபோது, இறைவனைக் காணாவிட்டாலும் பரவாயில்லை, காட்டைவிட்டு வெளியேறினால் போதும் என்று நினைத்தாய் அல்லவா? ஈசன் உன் ஆணவத்தை அழித்தான். அது அழித்தல் தொழில். காட்டுக் கோயிலின் படையலை உண்டுவிட்டு, அங்கேயே உறங்கினாய் அல்லவா? அப்போது ஈசன் அங்குதான் இருந்தான். ஆனால், நீ அவனை உணரவில்லை. அது மறைத்தல் தொழில். இவை எல்லாவற்றையும் இப்போது என் மூலமாக உனக்கு உணர்த்தி இருக்கிறான் அல்லவா? அது அருளல் தொழில்.

இறைவன் அனுபவங்களில் வாழ்கிறான். அனுபவங்களின் மூலமாகவே பாடம் நடத்துகிறான். உனக்கு நேரும் அனுபவங்கள் இன்பத்தையோ துன்பத்தையோ பெருமிதத்தையோ அவமானத்தையோ தரலாம். அந்த அனுபவங்களை நீ வாழ்நாள் முழுக்க தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை. ஆனால், அனுபவங்கள் தந்த பாடங்களை விட்டுவிடாதே. ஏனென்றால், அதுவே தந்தையாகிய இறைவனின் வழிநடத்தல்கள்” என்று சொல்லி முடித்தார். அந்த இளைஞனுக்கு ஒரு புதிய பாதை திறந்தது.

மகத்துவம் புரிந்தது

கடந்த கோடையில் வறட்சி என்ற அனுபவத்தைப் பருவநிலை நமக்குக் கொடுத்தது. இப்போது நாம் மழையை நேசிக்கத் தொடங்கிவிட்டோம். நதிகளில் நீண்ட காலமாகத் தண்ணீர் வரவில்லை. நமது வயல்கள் வறண்டு, விவசாயம் பொய்த்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆற்று மணல் கொள்ளை போவது குறித்து இப்போது நமக்கு கவனம் பிறக்கிறது. குளிரில் நடுங்கிய மலைப் பகுதிகள் எல்லாம் இப்போது வியர்க்கத் தொடங்கிவிட்டன. மலைகளைச் சிதைத்தது போதுமென்று மனப்பக்குவம் அடைகிறோம். பூமிக்குள் எண்ணெயும் தண்ணீரும் கலந்த பிறகு, இனி குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது என்று தெரிந்த பிறகு மண்ணைக் காப்பதன் மகத்துவத்தைப் புரிந்துகொள்கிறோம்.

அனுபவ வார்த்தைகள்

‘நெறியில்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்

சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்’

(திருவாசகம்)

- என்று மாணிக்கவாசகர் அச்சோ பதிகம் வாசிக்கிறார். ‘அச்சோ பதிகம்’ என்பதே அனுபவத்தின் கூற்றுதான். தவறான செயல்களையே சரியென நினைத்திருந்த என்னை, தீவினைகள் சேராமல் அருள் புரிந்தாய் என்கிறார் அவர்.

‘சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து

தீர்த்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

- என்று நம்மாழ்வார் திருவாய்மொழி சூட்டுகிறார். பாவம், புண்ணியம் எனும் இருவகை வினைப்பலன்களையும் ஒழித்து, பற்றுகளை நீக்கி, தன்னிடம் மனதை ஒப்படைக்கும்படி இறைவன் உயிர்களைத் திருத்துகிறான் என்கிறார் நம்மாழ்வார். இவை அனுபவத்தின் சொற்களன்றி வேறில்லை.

பாடம் உணர்வோமா?

வெளி, வெப்பம், காற்று, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களும் தங்களது இருப்பை உணர்த்தும்படியான அனுபவங்களை வறட்சி, பஞ்சம், நோய்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றின் வாயிலாக மனிதர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. அந்த அனுபவங்களின் பாடங்களை உணர்ந்து, பெற்றோரின் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளாக மனிதர்கள் வாழ வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறான். இல்லாவிட்டால், வேறு வழியின்றி அவன் ‘வீடு திருத்துவான்; வீட்டைப் பிரித்துக் கட்டுவான்!’

(நிறைந்தது) | தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x