Last Updated : 17 Aug, 2017 10:10 AM

 

Published : 17 Aug 2017 10:10 AM
Last Updated : 17 Aug 2017 10:10 AM

இறைமை இயற்கை 12: அனைத்தையும் மலரச் செய்யும் வெளி

ம்பூதத் தலங்களில் வெளிக்கானது, தில்லை என்கிற சிதம்பரம். ‘சித்’ என்றால் மனம். ‘அம்பரம்’ என்றால் பெருவெளி. மனமென்ற பெருவெளியில் இறைவனை நிறுத்துவதையே ‘சிதம்பரம்’ என்கிற கருத்து உணர்த்துகிறது. சிதம்பர ரகசியம் என்பது ‘ஏதுமில்லாதது’. ஏதுமில்லாத இடத்தில் (பெருவெளியில்) எல்லாம் இருக்கிறது என்பதையே சிதம்பர ரகசியம் உணர்த்துகிறது. ‘ஏதுமில்லாத’ வெளியில் அவன் மறைந்திருக்கிறான். ஏதுமில்லாமையை அவன் தரித்திருக்கிறான்.

மறைபொருள்

இறைவனை ‘மறையுமாய் மறையின் பொருளுமாய்’ வந்தவன் (திருவாசகம் – கோயில் திருப்பதிகம் – பாடல் 5) என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். மறைகளை ஓதியதோடு அவற்றின் அர்த்தங்களாகவும் இருப்பவன் இறைவன் என்பது இதன் நேரிடையான பொருள். சிதம்பரனாய் மறைந்திருந்து திருவிளையாடல்களைச் செய்பவன் இறைவனே என்பது இதன் ‘மறை’பொருள்.

வெளி என்பது விரிந்துகொண்டே இருக்கக்கூடியது. இதை ‘அகல்விசும்பு’ என்ற வார்த்தையால் குறிக்கிறார் திருவள்ளுவர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி (திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் 25) என்ற குறளில், அகல்விசும்பு என்பது முக்காலத்திலும் விரிந்துகொண்டே இருப்பதைக் குறிக்கிறது.

இதையே மாணிக்கவாசகர் ‘விரிபொழில்’ என்று குறிப்பிடுகிறார். பொழில் என்றால் பொழிதல். விரியக்கூடிய இடத்திலிருந்தபடி அருள் மழையைப் பொழிபவன் இறைவன் என்கிறார் அவர்.

வெளியைப் போலவே மனித மனமும் விரிந்துகொண்டே இருக்கக்கூடியதுதான். மனித மனத்தால் காலத்தைக் கடந்தும் இடத்தைக் கடந்து பயணிக்க இயலும்.

இறை குடியிருக்கும் வீடு

சுந்தரர் தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்திய ஈசனைப் ‘பித்தன்’ என ஏசினார் என்பதையும்; பிறகு உண்மையை உணர்ந்த பிறகு ‘பித்தா பிறைசூடி’ என வாழ்த்தினார் என்பதையும் படிக்கும்போது, நம்முடைய மனம் சுந்தரரின் காலத்துக்குச் சென்றுவிடுகிறது. சுந்தரருக்கும் ஈசனுக்குமான இந்த ‘வழக்கு’ விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் நடந்தது என்பதை அறியும்போது நம்முடைய மனம் அத்தலத்துக்குச் சென்று ‘வழக்கு விசாரணை’யில் அமர்ந்துவிடுகிறது. எனவே, மனதுக்கு காலமும் இடமும் ஒரு தடையல்ல. அது வேண்டியபடி பயணம் செய்யக்கூடியது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

மனதைப் போலவே வெளியிலும் காலமும் இடமும் இல்லை. பூமிக்கு வெளியில் சென்றுவிட்டால் திசைகள் இல்லை; தொலைவுகள் இல்லை. அண்மையும் இல்லை; சேய்மையும் இல்லை. எனவே, மனமும் வெளியும் வெவ்வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். மனித மனம் என்பது இறை குடியிருக்கும் வீடு. இறையின் மனம் என்பது மனிதர்கள் குடியிருக்கும் வீடு.

வீடு நோக்கிய பயணம்

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே’

என்பது திருமூலரின் திருவாக்கு.

ஈசனை உணர்ந்து ஞானம் முதிரப் பெற்றவர்களுக்காக எழுதப்பட்ட பாடல் இது. பத்திமை (பக்தி உணர்வு) உணர்வில் இறையோடு கலக்கும்போது, உயிரே சிவலிங்கமாகவும், வாயே கோபுர வாசலாகவும், ஐம்புலன்களே கோயிலுக்கு ஒளிதரும் விளக்குகளாகவும் மாறிவிடுகின்றன. உடம்பு ஆலயமாகவும் மனம் பெருங்கோயிலாகவும் மாறும்போது, பேரண்டப் பெருவெளியே நாம் போய்ச் சேர வேண்டிய வீடு என்பதை உணர முடியும். இதுதான் ‘வீடு பேறு’ எனப்படுகிறது.

நம் காலத்தின் மெய்யறிவாளராக மதிக்கப்பட வேண்டியவர் கவிஞர் அப்துல் ரகுமான். அவரது இரண்டு வரிகள் இந்தக் கருத்தின் மீது ஒளி கூட்டுகிறது.

‘வீட்டை விட்டுப் புறப்படுவதல்ல, வீட்டை நோக்கிப் புறப்படுவதே உண்மையான பயணம். நாம் ‘வெளி’யில் இருக்கிறோம். எனவே, நம் பயணம் வீடு நோக்கியதாக இருக்க வேண்டும்’ (இது சிறகுகளின் நேரம் – பாகம் 2) என்கிறார் அவர்.

ஐம்பூதங்களில் தலைமை பூதமாக இருக்கும் வெளிதான் மற்ற நான்கு பூதங்களையும் கட்டுப்படுத்துகிறது. காற்றில் தோன்றும் வெப்பமும் கடலில் தோன்றும் புயலும் நிலத்தில் தோன்றும் வெடிப்பும் வெளியால் தீர்மானிக்கப்படுபவை.

மனதால் விளைவது வாழ்க்கை

ஐம்பூதங்களில் தலைமை பூதமாக இருக்கும் வெளிதான் மற்ற நான்கு பூதங்களையும் கட்டுப்படுத்துகிறது. காற்றில் தோன்றும் வெப்பமும் கடலில் தோன்றும் புயலும் நிலத்தில் தோன்றும் வெடிப்பும் வெளியால் தீர்மானிக்கப்படுபவை. நிலத்தில் பொழியும் மழையும் பூமியில் தோன்றும் மலர்ச்சியும் மனிதரில் தோன்றும் மகிழ்ச்சியும் வெளியால் அருளப்படுபவை.

அதைப் போலவே மனித உயிருக்குத் தலைமை வகிக்கும் மனம்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. மகிழ்ச்சி – துன்பம், நோய் – நலம், உறவுகள் – பிரிவுகள், செல்வம் – வறுமை, பிறப்பு – இறப்பு என அனைத்திலும் மனம் பங்காற்றுகிறது.

இதைத்தான் மாணிக்கவாசகர்,

‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு

ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்

வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே’

என்று பாடுகிறார்.

மனமே, நீ வாழ்வதுபோல் நினைத்து வாழாது இருக்கின்றாயே. நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழிபடுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன் என்பது இதன் பொருள்.

எல்லா மனதுக்குமான ஒரு பாடலைத் தன்னுடைய மனதுக்குச் சொல்லிக்கொள்கிறார் மாணிக்கவாசகர்.

இறைமை என்பது மனதில் நிறைவது. வாழ்க்கை என்பது மனதால் விளைவது.

(அடுத்த வாரம் நிறைவுறும்)

தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x